Monday, 25 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 36

(மஹேஸ்வரன் மற்றும் பார்வதியின் திருமண வாழ்க்கைக்கு தேவர்கள் இடைஞ்சல் செய்கிறார்கள். பார்வதி தேவி அவர்களையும், பூமாதேவியையும் சபிக்கிறாள்.)

उक्तवाक्ये मुनौ तस्मिन्नुभौ राघवलक्ष्मणौ।
प्रतिनन्द्य कथां वीरावूचतुर्मुनिपुङ्गवम्।।1.36.1।।

முனிபுங்கவரான விஸ்வாமித்திரர் இவ்வாறு கங்கையின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது, அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த ராம லக்ஷ்மணர்கள் அவரிடம் வினவினார்கள்:

 

धर्मयुक्तमिदं ब्रह्मन् कथितं परमं त्वया ।
दुहितुश्शैलराजस्य ज्येष्ठाया वक्तुमर्हसि।।1.36.2।।

विस्तरं विस्तरज्ञोऽसि दिव्यमानुषसम्भवम्।

அந்தணரே! தர்மம் நிறைந்த மிகச் சிறந்த இந்தக் கதையைத் தாங்கள் கூறிவிட்டீர்கள். உங்களுக்கு எல்லா விவரங்களும் தெரிந்திருப்பதால், பர்வத ராஜனின் மூத்த புதல்வியான கங்கைக்கு ஸ்வர்க்கத்திலும், பூமியிலும் என்னென்ன நடந்தது என்பதைத் தயவு செய்து விளக்கமாகக் கூறுங்கள்.

 

त्रीन् पथो हेतुना केन प्लावयेल्लोकपावनी।।1.36.3।।

कथं गङ्गा त्रिपथगा विश्रुता सरिदुत्तमा।
त्रिषु लोकेषु धर्मज्ञ कर्मभि: कैस्समन्विता।।1.36.4।।

உலகையெல்லாம் புனிதப் படுத்தக்கூடிய கங்கை ஏன் மூன்று பிரிவாகப் பாய்கிறாள்? தர்மம் அறிந்தவரே! அவள் செய்த எந்தச் செயலால் இந்த மூன்று உலகங்களிலும், அவள் உத்தமமானவள் என்று போற்றப் படுகிறாள்?”

 

तथा ब्रुवति काकुत्स्थे विश्वामित्रस्तपोधन:।
निखिलेन कथां सर्वामृषिमध्ये न्यवेदयत्।।1.36.5।।

காகுஸ்தனான ராமன் இவ்வாறு கேட்டவுடன், தவச்செல்வரான விஸ்வாமித்திரர், கதை முழுவதையும், அவர்களுக்குச் (ரிஷிகளுக்கும் சேர்த்து) சொல்ல ஆரம்பித்தார். 

 

पुरा राम कृतोद्वाहो नीलकण्ठो महातपा:।
दृष्ट्वा च स्पृहया देवीं मैथुनायोपचक्रमे।।1.36.6।।

“ராமா! வெகு காலத்துக்கு முன்பு, நீலகண்டனான சிவன் உமாதேவியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, அவள் அழகில் மயங்கி, அவளிடம் சென்றார்.

 

शितिकण्ठस्य देवस्य दिव्यं वर्षशतं गतम्।
न चापि तनयो राम तस्यामासीत् परन्तप।।1.36.7।।

எதிரிகளைத் துன்புறுத்துபவனே! ராமா! நூறு ஆண்டுகளுக்கு மேல், மணவாழ்க்கையில் ஈடுபட்டிருந்தும் பார்வதி தேவியின் கர்ப்பத்தில் ஒரு மகன் உதிக்கவில்லை.

 

ततो देवास्समुद्विग्ना: पितामहपुरोगमा:।
यदिहोत्पद्यते भूतं कस्तत्प्रतिसहिष्यते।।1.36.8।।

அப்போது, பிரம்மா முதலாய தேவர்கள், ‘இந்தத் தம்பதிகளுக்கு இங்கே, இப்போது ஒரு மகன் பிறந்தால், அவனுடைய சக்தியை யாரால் தாங்க முடியும்?’ என்று அஞ்சினார்கள்.

 

अभिगम्य सुरास्सर्वे प्रणिपत्येदमब्रुवन्।
देव देव महादेव लोकस्यास्य हिते रत ।।1.36.9।।

सुराणां प्रणिपातेन प्रसादं कर्तुमर्हसि।

தேவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று, அவரை வணங்கி, “ தேவதேவரே! இந்த உலகத்துக்கு எப்போதும் நன்மை செய்பவரே! மகாதேவா! எங்கள் வணக்கங்களை ஏற்று எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.

 

न लोका धारयिष्यन्ति तव तेजस्सुरोत्तम ।।1.36.10।।

ब्राह्मेण तपसा युक्तो देव्या सह तपश्चर।
त्रैलोक्यहितकामार्थं तेजस्तेजसि धारय ।।1.36.11।।

“தேவருள் சிறந்தவரே! இந்த உலகத்தால் உங்களுடைய ஆற்றலைத் ( உங்கள் சக்தியால் ஒரு மகன் பிறந்தால், அவனுடைய ஆற்றலை) தாங்க முடியாது. ஆகவே, தாங்கள் உமாதேவியுடன் சேர்ந்து, வேத நெறிப்படி தவத்தில் ஈடுபடுங்கள். இந்த மூவுலகத்துக்கும் நன்மை செய்ய வேண்டித் தங்களது சக்தியைத் தங்களிடமே, பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.”

 

देवतानां वचश्श्रुत्वा सर्वलोकमहेश्वर:।
बाढमित्यब्रवीत्सर्वान्पुनश्चैवमुवाच ह ।।1.36.12।।

ஸர்வலோகத்துக்கும் மகேஸ்வரனான சிவபெருமான், தேவர்களின் வார்த்தைகளைக் கேட்டு, “அப்படியே ஆகட்டும்” என்று கூறி விட்டு, மேலும் சொன்னார்:

 

धारयिष्याम्यहं तेजस्तेजस्येव सहोमया।
त्रिदशा: पृथिवी चैव निर्वाणमधिगच्छतु।।1.36.13।।

“உமையுடன் சேர்ந்து, நானும் என்னுடைய தேஜஸை, எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். தேவர்களாகிய நீங்களும், இந்தப் பூமியும், நிம்மதி அடையட்டும்.”

 

यदिदं क्षुभितं स्थानान्मम तेजो ह्यनुत्तमम्।
धारयिष्यति कस्तन्मे ब्रुवन्तु सुरसत्तमा:।।1.36.14।।

உத்தமமான என்னுடைய தேஜஸ்ஸை, அதனுடைய இடத்தில் இருந்து அசைத்து விட்டால், அதை யார் தாங்குவார்கள்? தேவருள் சிறந்தவர்களே! சொல்லுங்கள்!”

 

एवमुक्तास्सुरास्सर्वे प्रत्यूचुर्वृषभध्वजम्।
यत्तेज: क्षुभितं ह्येतत्तद्धरा धारयिष्यति।।1.36.15।।

இவ்வாறு விருஷபக் கொடியுடைய சிவபெருமான் கேட்டதும், தேவர்கள் எல்லாம் சேர்ந்து, “ஒருவேளை ஏதாவது தொந்தரவு ஏற்பட்டுத் தங்களது தேஜஸ் சிந்திவிட்டால், அதைப் பூமி தாங்கிக் கொள்ளும்.”

 

एवमुक्तस्सुरपति: प्रमुमोच महीतले।
तेजसा पृथिवी येन व्याप्ता सगिरिकानना।।1.36.16।।

தேவர்கள் இவ்வாறு கூறியவுடன், சுரபதியான சிவபெருமான் தன்னுடைய தேஜஸைப் பூமியில் விட்டார். அது இந்த உலகம் முழுவதிலும், அதில் உள்ள மலைகளிலும், காடுகளிலும் கூடப் பரவியது.

 

ततो देवा: पुनरिदमूचुश्चाथ हुताशनम्।
प्रविश त्वं महातेजो रौद्रं वायुसमन्वित:।।1.36.17।।

பின்னர் தேவர்கள், அக்கினி தேவனிடம், “நீங்கள் வாயு தேவனுடன் சேர்ந்து கொண்டு, இந்த மகாதேஜஸுக்குள் பிரவேசியுங்கள்.”

 

तदग्निना पुनर्व्याप्तं सञ्जातश्श्वेतपर्वत:।
दिव्यं शरवणं चैव पावकादित्यसन्निभम्।।1.36.18।।

यत्र जातो महातेजा: कार्तिकेयोऽग्निसम्भव:।

அக்கினியானது அந்தத் தேஜஸிற்குள் பிரவேசித்தவுடன் அது ஒரு வெள்ளை நிற மலையாக மாறியது. பின்னர் அது நெருப்பையும், சூரியனையும் போல் ஒளி வீசுகின்ற ஒரு நாணல் காடாக (சரவண) மாறியது. அந்த நெருப்பில் இருந்து மஹாதேஜஸ்வியான கார்த்திகேயன் பிறந்தான்.

 

अथोमां च शिवं चैव देवास्सर्षिगणास्तदा।
पूजयामासुरत्यर्थं सुप्रीतमनसस्तत:।।1.36.19।।

இந்த நிகழ்வுகளால், மிகவும் மகிழ்ந்த தேவர்களும், ரிஷிகளும், மிகுந்த அன்புடன் சிவபெருமானையும், உமாதேவியையும் பூஜித்தார்கள்.

 

अथ शैलसुता राम त्रिदशानिदमब्रवीत्।
समन्युरशपत्सर्वान् क्रोधसंरक्तलोचना।।1.36.20।।

ராமா! பின்னர், ஹிமவானின் மகளான உமா, சினத்தால் சிவந்த விழிகளுடன் அனைவரையும் சபித்தாள்.

 

यस्मान्निवारिता चैव सङ्गति: पुत्रकाम्यया।
अपत्यं स्वेषु दारेषु तस्मान्नोत्पादयिष्यथ।।1.36.21।।

நான், என் கணவரான மகாதேவருடன் சேர்ந்து ஒரு புதல்வனை உண்டாக்குவதை நீங்கள் தடுத்து விட்டதால், உங்களுக்கு, உங்கள் மனைவிகள் மூலம் குழந்தைகள் பிறக்க மாட்டார்கள்.

 

अद्यप्रभृति युष्माकमप्रजास्सन्तु पत्नय:।।1.36.22।।
एवमुक्त्वासुरान् सर्वान् शशाप पृथिवीमपि।

“இன்றிலிருந்து உங்களுடைய மனைவிகள் அனைவரும் குழந்தை இல்லாதவர்களாகத் தான் இருப்பார்கள்” என்று சபித்த பின்னர், பூமிக்கும் சாபம் கொடுத்தாள்.

 

अवने नैकरूपा त्वं बहुभार्या भविष्यसि।।1.36.23।।

न च पुत्रकृतां प्रीतिं मत्क्रोधकलुषीकृता ।
प्राप्स्यसि त्वं सुदुर्मेधे मम पुत्रमनिच्छती।।1.36.24।।

 “பூமியே! நீ பல வடிவங்கள் எடுத்துப் பலரின் மனைவியாக இருப்பாய்! தீய மனம் கொண்டவளே! நான் ஒரு புதல்வனைப் பெறுவதை நீ விரும்பவில்லை. எனக்குக் கோபத்தை ஏற்படுத்தியதால், உனக்கு ஒரு புதல்வனைப் பெறும் இன்பம் என்றைக்கும் கிடைக்காது.”

 

तान् सर्वान् व्रीडितान् दृष्ट्वा सुरान्सुरपतिस्तदा।
गमनायोपचक्राम दिशं वरुणपालिताम्।।1.36.25।।

இவ்வாறு தேவர்கள் எல்லாம் சாபம் பெற்று, அவமானப் பட்டதைக் கண்ட மகேஸ்வரர், வருணன் ஆட்சி செய்கின்ற மேற்கு திசையை நோக்கிப் புறப்பட்டார்.

 

स गत्वा तप आतिष्ठत्पार्श्वे तस्योत्तरे गिरौ।
हिमवत्प्रभवे शृङ्गे सह देव्या महेश्वर:।।1.36.26।।

மகேஸ்வரர், இமயமலைக்குச் சென்று, அந்த மலையின் வடக்குப்பக்கத்தில், அந்த மலையிலேயே அமைந்துள்ள ஒரு சிகரத்தில், தன் தேவியுடன் தவம் செய்யத் தொடங்கினார்.

 

एष ते विस्तरो राम शैलपुत्र्या निवेदित:।
गङ्गाया: प्रभवं चैव शृणु मे सहलक्ष्मण:।।1.36.27।।

ராமா! பர்வத ராஜனின் மகளான உமாவின் கதையை உனக்கு விளக்கமாகக் கூறிவிட்டேன். இப்போது, லக்ஷ்மணனுடன் சேர்ந்து, கங்கை பிறந்த கதையைக் கேள்!”


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षट्त्रिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...