Monday, 25 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 37

( கார்த்திகேயனின் பிறப்பு )


तप्यमाने तपो देवे देवा: सर्षिगणा: पुरा।
सेनापतिमभीप्सन्त: पितामहमुपागमन्।।1.37.1।।

முன்னொரு காலத்தில், சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந்த போது, தேவர்கள், ரிஷிகணங்களுடன் போய்ப், பிதாமகரான பிரம்மதேவனிடம், தங்களுக்கு ஒரு நல்ல சேனாபதி வேண்டும் என்று வேண்டினார்கள்.

 

ततोऽब्रुवन् सुरास्सर्वे भगवन्तं पितामहम्।
प्रणिपत्य सुरास्सर्वे सेन्द्रास्साग्निपुरोगमा:।।1.37.2।।

பின்னர், இந்திரனும், அக்கினி தேவனும், முன்னே செல்ல, தேவர்கள் அனைவரும், பிதாமகரான பிரம்ம தேவரை இரு கைகள் கூப்பி வணங்கி, இவ்வாறு கூறினார்கள்:

 

यो न स्सेनापतिर्देव दत्तो भगवता पुरा।
तप: परममास्थाय तप्यते स्म सहोमया।।1.37.3।।

“பிரபுவே! முற்காலத்தில் தாங்கள் எங்களுக்காகக் கொடுத்த சேனாதிபதி இப்போது, உமாதேவியுடன் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

 

यदत्रानन्तरं कार्यं लोकानां हितकाम्यया।
संविधत्स्व विधानज्ञ त्वं हि न: परमा गति:।।1.37.4।।

சட்டங்களையும், விதிமுறைகளையும் அறிந்த பிதாமகரே! உலகங்களனைத்துக்கும் நன்மை செய்ய விரும்பும் எங்களுக்குத் தாங்கள் தான் அடைக்கலம்.  இந்த விஷயத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். (உமாதேவியின் சாபத்தால், எங்களால், ஒரு சேனாபதியைப் பிறப்பிக்க முடியாது.)

 

देवतानां वचश्श्रुत्वा सर्वलोकपितामह:।
सान्त्वयन्मधुरैर्वाक्यैस्त्रिदशानिदमब्रवीत्।।1.37.5।।

அனைத்து உலகங்களுக்கும் பிதாமகரான பிரம்மதேவர், தேவர்களின் சொற்களைக்கேட்டு, இனிமையான வார்த்தைகளால், அவர்களை அமைதிப்படுத்தி, இவ்வாறு கூறினார்:

 

शैल पुत्र्या यदुक्तं तन्न प्रजास्यथ पत्निषु ।
तस्या वचनमक्लिष्टं सत्यमेतन्न संशय:।।1.37.6।।

பர்வதராஜனுடைய புத்ரியாகிய உமாதேவி, உங்களுக்கு உங்கள் மனைவிகள் மூலம் புத்திரன் பிறக்க மாட்டான் என்று கொடுத்த சாபம், மாற்ற முடியாத உண்மை தான். இதில் சந்தேகமில்லை.

 

इयमाकाशगा गङ्गा यस्यां पुत्रं हुताशन:।
जनयिष्यति देवानां सेनापतिमरिन्दमम्।।1.37.7।।

கங்கை ஸ்வர்க்கத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறாள். அக்கினி தேவன் மூலம் அவளுக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் எதிரிகளை அழிக்கும் திறம் கொண்டிருப்பான். அவன் தேவர்களின் சேனைக்குத் தலைவனாவான்.

 

ज्येष्ठा शैलेन्द्रदुहिता मानयिष्यति तत्सुतम्।
उमायास्तद्बहुमतं भविष्यति न संशय:।।1.37.8।।

ஹிமவானின் மூத்த மகளான கங்கை அந்த மகனைப் போற்றி வளர்ப்பாள். உமாதேவியும் அதை ஏற்றுக் கொள்வாள்; இதில் சந்தேகமில்லை.”

 

तच्छ्रुत्वा वचनं तस्य कृतार्था रघुनन्दन।
प्रणिपत्य सुरास्सर्वे पितामहमपूजयन्।।1.37.9।।

ரகு நந்தனா! பிரம்மதேவரின் சொற்களைக் கேட்ட தேவர்கள், தாங்கள் வந்த காரியம் வெற்றிகரமாக நடந்தேறியது என்று மகிழ்ந்து, அவரைக் கைகளைக் கூப்பி வணங்கினர்.

 

ते गत्वा पर्वतं राम कैलासं धातुमण्डितम्।
अग्निं नियोजयामासु: पुत्रार्थं सर्वदेवता:।।1.37.10।।

அனைத்து தேவர்களும், தாதுக்கள் நிறைந்த கைலாஸமலைக்குச் சென்று அக்கினி தேவனிடம் ஒரு புதல்வனைப் பெறுமாறு வேண்டினார்கள்.

 

देवकार्यमिदं देव संविधत्स्व हुताशन।
शैलपुत्र्यां महातेजो गङ्गायां तेज उत्सृज।।1.37.11।।

“ஒளி மிகுந்த அக்கினி தேவரே! தேவர்களுக்காக இந்தக் காரியத்தைச் செய்து முடிப்பீர். மிகுந்த ஆற்றல் கொண்டவரே! தங்களிடம் இருக்கும் சிவபெருமானுடைய தேஜஸைப் பர்வத புத்திரியாகிய  கங்கையினிடத்தில் விடுவிப்பீராக!

 

देवतानां प्रतिज्ञाय गङ्गामभ्येत्य पावक:।
गर्भं धारय वै देवि देवतानामिदं प्रियम्।।1.37.12।।

அக்கினி தேவரும் அதற்கு இணங்கி, கங்கையிடம் சென்று, “தேவி! தேவர்களின் விருப்பப்படி, இந்தத் தேஜஸை ஏற்று,  நீங்கள் கர்ப்பம் தரிக்க வேண்டும்.”

 

तस्य तद्वचनं श्रुत्वा दिव्यं रूपमधारयत्।
दृष्ट्वा तन्महिमानं स समन्तादवकीर्यत।।1.37.13।।

அக்கினி தேவனின் வார்த்தைகளைக் கேட்ட கங்கை தெய்வீக உருவம் கொண்டாள். அவளுடைய தெய்வீக அழகைக்கண்ட அக்கினி தேவர் அவளை எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்தார்.

 

समन्ततस्तदा देवीमभ्यषिञ्चत पावक:।
सर्वस्रोतांसि पूर्णानि गङ्गाया रघुनन्दन।।1.37.14।।

ரகு நந்தனா! அப்போது, அக்கினி தேவன், தன் உடலில் பாதுகாத்து வைத்திருந்த ஈஸ்வரனது தேஜஸை கங்கையின் உடலில் விடுவித்தார். அது கங்கையின் நீரெங்கும் பரவியது.

 

तमुवाच ततो गङ्गा सर्वदेवपुरोहितम्।

अशक्ता धारणे देव तव तेज स्समुद्धतम्।
दह्यमानाग्निना तेन सम्प्रव्यथितचेतना।।1.37.15।।

அப்போது, அனத்து தேவர்களுக்கும் முன்னால் நிற்கும் அக்கினி தேவனைப் பார்த்துக் கங்கை கூறினாள்: “ நெருப்பின் கடவுளே! தொடர்ந்து அதிகரித்து வரும் தங்களுடைய தேஜஸ்ஸை என்னால் தாங்க முடியவில்லை.  அது என்னை எரித்துப் பெருத்த வேதனைக்குள்ளாக்குகிறது.

 

अथाब्रवीदिदं गङ्गां सर्वदेवहुताशन:।
इह हैमवती पादे गर्भोऽयं सन्निवेश्यताम्।।1.37.16।।

அதைக் கேட்ட அக்கினி தேவர் கங்கையிடம் கூறினார்: “ அப்படியானால், இந்த கர்ப்பத்தை நீ இமயமலையின் அடிவாரத்தில் வைத்து விடு.”

 

श्रुत्वा त्वग्निवचो गङगा तं गर्भमतिभास्वरम्।
उत्ससर्ज महातेज स्स्रोतोभ्यो हि तदानघ ।।1.37.17।।

மகாதேஜஸ் உடையவனே! ராமா! அக்கினி தேவனின் சொற்களைக்கேட்ட கங்கை மிகுந்த ஒளியுடன் கூடிய தன் கர்ப்பத்தை வெளியேற்றினாள்.

 

यदस्या निर्गतं तस्मात्तप्तजाम्बूनदप्रभम् ।

काञ्चनं धरणीं प्राप्तं हिरण्यममलं शुभम्।।1.37.18।।

கங்கையிடம் இருந்து வெளிப்பட்ட அந்த கர்ப்பம் பூமியை அடைந்த போது உருக்கிய தங்கம் போல் மின்னியது. பின்னர் அது மங்களகரமான ஒளி வீசும் சொக்கத் தங்கமாக மாறியது.

 

ताम्रं कार्ष्णायसं चैव तैक्ष्ण्यादेवाभ्यजायत।।1.37.19।।

मलं तस्याभवत्तत्र त्रपु सीसकमेव च।
तदेतद्धरणीं प्राप्य नानाधातुरवर्धत।।1.37.20।।

அந்த கர்ப்பத்திலிருந்து தாமிரமும், இரும்பும், அதன் மீதத்திலிருந்து தகரமும், ஈயமும் உண்டாயின. அந்தக்கர்ப்பம் பூமியை அடைந்த போது, பலவிதமான உலோக தாதுக்கள் உண்டாயின.

 

निक्षिप्तमात्रे गर्भे तु तेजोभिरभिरञ्जितम्।
सर्वं पर्वतसन्नद्धं सौवर्णमभवद्वनम्।।1.37.21।।

அந்த கர்ப்பம் பூமியில் வைக்கப்பட்டவுடன், அது மலைகள் மீதும் காடுகள் மீதும் பரவி, அந்தக் காடே சிவந்த தங்க மயமாகப் பிரகாசித்தது.

 

जातरूपमिति ख्यातं तदा प्रभृति राघव।
सुवर्णं पुरुषव्याघ्र हुताशनसमप्रभम्।।1.37.22।।

तृणवृक्षलतागुल्मं सर्वं भवति काञ्चनम्।

மனிதருள் புலி போன்றவனே! ராகவனே! அப்போதிருந்து, நெருப்பைப் போல் ஒளிவீசும் தங்கமானது ஜாதரூபம் என்று அழைக்கப்பட்டது. புற்கள், மரங்கள், கொடிகள், புதர்கள் அனைத்தும் பொன் மயமாக மாறின.

 

तं कुमारं ततो जातं सेन्द्रास्सह मरुद्गणा:।।1.37.23।।

क्षीरसंभावनार्थाय कृत्तिकास्समयोजन्।

பின்னர், குமரன் பிறந்தான். இந்திரனும், அக்கினியும், மருத்கணங்களும் சேர்ந்து, பிறந்த குழந்தைக்குப் பாலூட்டுவதற்காக , ஆறு கிருத்திகையரை (நக்ஷத்திரங்களை) ஏற்பாடு செய்தார்கள்.

 

ता: क्षीरं जातमात्रस्य कृत्वा समयमुत्तमम्।।1.37.24।।
ददु: पुत्रोऽयमस्माकं सर्वासामिति निश्चिता:।

அந்தக் கிருத்திகையர் குமரன் பிறந்தவுடனேயே, இவன் எங்கள் எல்லோருக்கும் மகனாக இருப்பான் என்ற ஒப்பந்தம் இட்டுக்கொண்டு, அப்போது தான் பிறந்த அந்தக் குழந்தைக்குப் பாலூட்டினார்கள்.

 

ततस्तु देवता स्सर्वा: कार्तिकेय इति ब्रुवन्।।1.37.25।।

पुत्रस्त्रैलोक्यविख्यातो भविष्यति न संशय:।4

அதைக் கேட்ட தேவர்களும், “இந்த மகன் மூன்று உலகங்களிலும் ‘கார்த்திகேயன்’ ( கிருத்திகைகளின் மகன்) என்று புகழ் பெறுவான். இதில் சந்தேகமே இல்லை.” என்று கூறினார்கள்.

 

तेषां तद्वचनं श्रुत्वा स्कन्नं गर्भपरिस्रवे।।1.37.26।।

स्नापयन् परया लक्ष्म्या दीप्यमानं यथानलम्।

இந்த வார்த்தைகளைக் கேட்ட கிருத்திகையர் கங்கையின் கர்ப்பத்தில் இருந்து,  எரியும் நெருப்பு போன்ற தேஜஸ்ஸுடனும், பேரழகுடனும் பிறந்த குமரனைக் குளிப்பாட்டினார்கள்.

 

स्कन्द इत्यब्रुवन् देवा: स्कन्नं गर्भपरिस्रवात्।।1.37.27।।

कार्तिकेयं महाभागं काकुत्स्थ ज्वलनोपमम्।

காகுஸ்தனே! எரியும் நெருப்பு போன்று ஒளிர்ந்து கொண்டிருந்த குமரன், கங்கையின் கர்ப்பத்திலிருந்து நழுவி விழுந்ததால், அவனுக்கு தேவர்கள், ‘ஸ்கந்தன்’ ( நழுவி விழுந்தவன்) என்றும் பெயரிட்டார்கள்.

 

प्रादुर्भूतं तत: क्षीरं कृत्तिकानामनुत्तमम् ।।1.37.28।।

षण्णां षडाननो भूत्वा जग्राह स्तनजं पय:।

பின்னர், கிருத்திகையரிடம் இருந்து உத்தமமான பால் சுரந்தது. ஆறு பேரிடமும் பால் பருக வேண்டி, ஆறுமுகங்களுடன் ஸ்கந்தன் அவர்களிடம் பால் பருகினான்.

 

गृहीत्वा क्षीरमेकाह्ना सुकुमारवपुस्तदा।।1.37.29।।

अजयत्स्वेन वीर्येण दैत्यसेनागणान् विभु:।

ஒரே ஒரு நாள் அவர்களிடத்தில் பால் பருகியிருந்த, மென்மையான தேகம் உடைய அந்த ஸ்கந்தன், தனது இயற்கையான வீர்யத்தால் அரக்கர் சேனை முழுவதையும் தோற்கடித்தான்.

 

सुरसेनागणपतिं ततस्तमतुलद्युतिम्।।1.37.30।।

अभ्यषिञ्चन् सुरगणा स्समेत्याग्निपुरोगमा:।

அக்கினியை முன் நிறுத்தி, தேவர்கள் அனைவரும் கூடி, ஈடில்லாத காந்தியுடைய ஸ்கந்தனைத் தங்கள் சேனாதிபதியாக நியமித்தனர்.

 

एष ते राम गङ्गाया विस्तरोऽभिहितो मया।।1.37.31।।

कुमारसम्भवश्चैव धन्य: पुण्यस्तथैव च।

ராமா! கங்கையின் கதையையும்,புண்ணியம் நிறந்த குமரன் பிறந்த கதையையும், உனக்கு விளக்கமாகக் கூறிவிட்டேன்.

 

भक्तश्च य: कार्तिकेये काकुत्स्थ भुवि मानवः।
आयुष्मान् पुत्रपौत्रैश्च स्कन्दसालोक्यतां व्रजेत्।।1.37.32।।

காகுஸ்தனே! இந்த உலகில் எவரொருவர் கார்த்திகேயனை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடுகிறாரோ, அவர் நீண்ட ஆயுளுடனும், புத்திர பௌத்திரர்களுடனும் நன்றாக வாழ்ந்து, மரணத்துக்குப் பின் ஸ்கந்தலோகத்தை அடைவார்கள். “


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डेण्डे सप्तत्रिंशस्सर्ग:।।

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்தேழாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/



 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...