Monday, 25 December 2023

 

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 39

(இந்திரன் வேள்விக்கான குதிரையைத் திருடிவிடுகிறான். சகரனின் குமாரர்கள் பூமியைத்தோண்டிப் போய்க் குதிரையைத் தேடுகிறார்கள். தேவர்கள் பிரம்மாவிடம் போகிறார்கள்.)

विश्वामित्रवचश्श्रुत्वा कथाऽन्ते रघुनन्दन:।
उवाच परमप्रीतो मुनिं दीप्तमिवानलम्।।1.39.1।।

அக்கினியைப் போல் ஜ்வலிக்கின்ற விஸ்வாமித்திரர் சொன்ன கதைகளைக்கேட்டு மகிழ்ந்த ரகு நந்தனனான ராமன் மிகவும் அன்புடன் அவரிடம் கூறினான்:

 

श्रोतुमिच्छामि भद्रं ते विस्तरेण कथामिमाम्।
पूर्वको मे कथं ब्रह्मन् यज्ञं वै समुपाहरत्।।1.39.2।।

“அந்தணரே! தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்! என்னுடைய முன்னோர்கள் இந்த யாகத்துக்கான ஏற்பாடுகளை எவ்வாறு செய்தார்கள் என்பதை விவரமாகக் கேட்க விரும்புகிறேன்.

 

विश्वामित्रस्तु काकुत्स्थमुवाच प्रहसन्निव।
श्रूयतां विस्तरो राम सगरस्य महात्मन:।।1.39.3।।

காகுஸ்தனான ராமனைப் பார்த்து விஸ்வாமித்திரர் சற்றே புன்னகைத்து விட்டு, “மகாத்மாவான சகரருடைய கதையை விஸ்தாரமாகச் சொல்கிறேன், கேள்!” என்றார்.

 

शङ्करश्वशुरो नाम हिमवानचलोत्तम:।
विंध्यपर्वतमासाद्य निरीक्षेते परस्परम्।।1.39.4।।

சிவபெருமானின் மாமனாரான  இமயமலையும், விந்திய பர்வதமும், அருகருகே வந்து ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன.

 

तयोर्मध्ये प्रवृत्तोऽभूद्यज्ञ स्सपुरुषोत्तम।
स हि देशो नरव्याघ्र प्रशस्तो यज्ञकर्मणि।।1.39.5।।

புருஷோத்தமனே! இந்த இரண்டு மலைகளுக்கு இடையில் உள்ள இடம் யாகம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான இடம் என்பதால் அங்கே யாகம் செய்யப்பட்டது.

 

तस्याश्वचर्यां काकुत्स्थ दृढधन्वा महारथ:।
अंशुमानकरोत्तात सगरस्य मते स्थित:।।1.39.6।।

குழந்தாய்! காகுஸ்தனே! மகாரதியான அம்சுமான்( சகரனின் பேரன்) தனது உறுதியான வில்லை ஏந்திக்கொண்டு, சகரரின் விருப்பத்திற் கிணங்க, யாகத்திற்கான குதிரையைப் பின் தொடர்ந்து சென்றான்.

 

तस्य पर्वणि तं यज्ञं यजमानस्य वासव:।
राक्षसीं तनुमास्थाय यज्ञीयाश्वमपाहरत्।।1.39.7।।

யாகம் நடந்து கொண்டிருந்த போது, இந்திரன் ராக்ஷஸனின் உருவம் கொண்டு அந்த யாகத்திற்கான குதிரையைத் திருடி விட்டான்.

 

ह्रियमाणे तु काकुत्स्थ तस्मिन्नश्वे महात्मन:।
उपाध्यायगणास्सर्वे यजमानमथाब्रुवन्।।1.39.8।।

காகுஸ்தனே! மகாத்மாவான சகரரின் யாகத்துக்கான குதிரை திருடப்பட்டதை அடுத்து, யாகம் செய்து வைக்கும் புரோகிதர்கள், சகரரைப் பார்த்துக் கூறினார்கள்:

 

अयं पर्वणि वेगेन यज्ञियाश्वोऽपनीयते।
हर्तारं जहि काकुत्स्थ हयश्चैवोपनीयताम्।।1.39.9।।

“காகுஸ்தரே! ( சகரரும் ககுஸ்த வம்சத்தவர் தான்) இந்த மங்கள கரமான நாளில், இந்த யாகக்குதிரை வேகமாகக் கவர்ந்து செல்லப்பட்டு விட்டது. அதைத் திருடியவனைக் கொன்று, அந்தக் குதிரையைக் கொண்டு வர வேண்டும்.

 

यज्ञच्छिद्रं भवत्येतत्सर्वेषामशिवाय न:।
तत्तथा क्रियतां राजन् यथाऽच्छिद्र: क्रतुर्भवेत्।।1.39.10।।

யாகத்தில் ஏற்பட்ட இந்தக் குறையினால் நம் அனைவருக்கும் கெடுதல் உண்டாகும். ஆகவே, அரசே! இந்த யாகம் எந்த இடையூறும் இன்றி நடப்பதற்கானவற்றைச் செய்வீராக!”

 

उपाध्यायवच श्श्रुत्वा तस्मिन् सदसि पार्थिव:।
षष्टिं पुत्रसहस्राणि वाक्यमेतदुवाच ह।।1.39.11।।

புரோகிதர்களின் வார்த்தைகளைக் கேட்ட அரசர் சகரர், அங்கே வேள்விக்காகக் கூடியிருந்த சபையில் இருந்த, தன் அறுபதாயிரம் புதல்வர்களைப் பார்த்துக் கூறினார்:

 

गतिं पुत्रा: न पश्यामि रक्षसां परुषर्षभा:।
मन्त्रपूतैर्महाभागैरास्थितो हि महाक्रतु:।।1.39.12।।

“ மனிதர்களுள் சிறந்தவர்களான என் புதல்வர்களே! இந்தக்காரியத்தில் ராக்ஷஸர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதற்காக, சிறந்த புரோகிதர்கள் மந்திரங்களால் இந்த யாகத்தைப் புனிதப் படுத்தியிருக்கிறார்கள்.

 

तद्गच्छत विचिन्वध्वं पुत्रका: भद्रमस्तु व:।
समुद्रमालिनीं सर्वां पृथिवीमनुगच्छत।।1.39.13।।

ஆகவே, என் புதல்வர்களே! கடல் சூழ்ந்த இந்தப் பூமி முழுவதும் போய் யாகக் குதிரையைத் தேடுங்கள். உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்!”

 

एकैकयोजनं पुत्रा विस्तारमधिगच्छत।

यावत्तुरगसन्दर्श: तावत् खनत मेदिनीम्।
तं चैव हयहर्तारं मार्गमाणा ममाज्ञया।।1.39.14।।

புதல்வர்களே! ஒவ்வொரு யோஜனையாக நன்றாகத் தேடுங்கள். அந்தக் குதிரையைத் திருடியவனைக் கண்டுபிடிக்கும் வரையிலும், பூமியைத் தோண்டிப் பாருங்கள். இது என் கட்டளை!


दीक्षित: पौत्रसहितस्सोपाध्यायगणो ह्यहम्।
इह स्थास्यामि भद्रं वो यावत्तुरगदर्शनम्।।1.39.15।।

யாகத்துக்கான தீக்ஷை எடுத்துக் கொண்டு விட்டதால், நானும், என் பேரனும்(அம்சுமான்), புரோகிதர்களும், குதிரை கிடைக்கும் வரை இங்கேயே காத்திருக்கிறோம்.  நீங்கள் பத்திரமாகப் போய்வாருங்கள்.”

 

इत्युक्ता हृष्टमनसो राजपुत्रा महाबला:।
जग्मुर्महीतलं राम पितुर्वचनयन्त्रिता:।।1.39.16।।

ராமா! மிகவும் பலம் வாய்ந்த அந்த ராஜகுமாரர்கள், தன் தந்தையின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, மகிழ்ச்சியுடன் குதிரையைத் தேடப் புறப்பட்டார்கள்.

 

योजनायामविस्तारमेकैको धरणीतलम्।
बिभिदु: परुषव्याघ्र वज्रस्पर्शसमैर्नखै:।।1.39.17।।

மனிதருள் சிறந்தவனே! ஒவ்வொருவரும் ஒரு யோஜனை தூரம் என்று பிரித்துக்கொண்டு, வைரம் போன்ற தங்களுடைய உறுதியான நகங்களால், பூமியைத்தோண்டினார்கள்.

 

शूलैरशनिकल्पैश्च हलैश्चापि सुदारुणै:।
भिद्यमाना वसुमती ननाद रघुनन्दन।।1.39.18।।

ரகு நந்தனா! கலப்பைகளாலும், ஈட்டிகளாலும், பூமி இடிக்கப் பட்ட போது இடி போல பலத்த ஓசை எழுந்தது.

 

नागानां मथ्यमानानामसुराणां च राघव ।
राक्षसानां च दुर्धर्षस्सत्त्वानां निनदोऽभवत्।।1.39.19।।

ராகவா! பூமி இவ்வாறு கடையப்பட்ட பொழுது, நாகர்களிடமிருந்தும், அசுரர்களிடமிருந்தும், ராக்ஷஸர்களிடமிருந்தும், அனைத்து ஜீவராசிகளிடமிருந்தும், தாங்கமுடியாத ஓசை எழுந்தது.

 

योजनानां सहस्राणि षष्टिं तु रघुनन्दन ।
बिभिदुर्धरणीं वीरा: रसातलमनुत्तमम्।।1.39.20।।

ரகு நந்தனா! சகரனின் அந்த வீரப்புதல்வர்கள், அறுபதாயிரம் யோஜனைகளைத் தோண்டி, பூமிக்கடியில் உள்ள ரஸாதலத்தை அடைந்தார்கள்.

 

एवं पर्वतसम्बाधं जम्बूद्वीपं नृपात्मजा:।
खनन्तो नरशार्दूल सर्वत: परिचक्रमु:।।1.39.21।।

ராமா! இந்த ராஜகுமாரர்கள், பூமியைத் தோண்டும் போது, மலைகள் நிறைந்த ஜம்பூத்வீபத்தையும் தோண்டி எங்கும் திரிந்து தேடினார்கள்.

 

ततो देवास्सगन्धर्वास्सासुरास्सहपन्नगा:।
सम्भ्रान्तमनसस्सर्वे पितामहमुपागमन्।।1.39.22।।

அப்போது மிகவும் கலவரப்பட்ட தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள் மற்றும் நாகர்களுடன் பிரம்மாவிடம் சென்றார்கள்.

 

ते प्रसाद्य महात्मानं विषण्णवदनास्तदा।
ऊचु: परमसन्त्रस्ता पितामहमिदं वच:।।1.39.23।।

கவலை நிறைந்த மனங்களுடனும், வருத்தம் தோய்ந்த முகங்களுடனும், அவர்கள் பிரம்மதேவரை அணுகி, அவரை வணங்கிக் கூறலானார்கள்:

 

भगवन् पृथिवी सर्वा खन्यते सगरात्मजै:।
बहवश्च महात्मानो हन्यन्ते तलवासिन:।।1.39.24।।

பகவானே! சகரரின் புதல்வர்களால், இந்தப் பூமி முழுவதும் தோண்டப் பட்டுக்கொண்டிருக்கிறது. பூமிக்கடியில் வசிக்கும் அனேக உயிர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

 

अयं यज्ञहरोऽस्माकमनेनाश्वोऽपनीयते।
इति ते सर्वभूतानि निघ्नन्ति सगरात्मजा:।।1.39.25।।

“இவன் தான் எங்களுடைய யாகக் குதிரையைத் திருடினான்” என்று கூறி, எல்லாரையும் கொல்ல முனைகிறார்கள். “


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकोनचत्वारिंशस्सर्ग: ।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் முப்பத்தொன்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...