Saturday, 30 December 2023

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 41

(அம்சுமான் குதிரையைத் திரும்பக் கொண்டு வருகிறான்.)

पुत्रांश्चिरगतान् ज्ञात्वा सगरो रघुनन्दन।
नप्तारमब्रवीद्राजा दीप्यमानं स्वतेजसा।।1.41.1।।

“ரகு நந்தனா! ராஜா சகரர், தனது புதல்வர்கள் (குதிரையைத் தேடி) சென்று வெகு காலம் ஆகி விட்டதால், தன்னுடைய பேரனான அம்சுமானிடம் கூறினார்:

 

शूरश्च कृतविद्यश्च पूर्वैस्तुल्योऽसि तेजसा।
पितृ़णां गतिमन्विच्छ येन चाश्वोऽपवाहित:।।1.41.2।।

“நீ மிகுந்த வீரம் உடையவன். எல்லாக்கலைகளிலும் தேர்ந்தவன். ஒளி பொருந்தியவன். உன்னுடைய முன்னோர்களின் ( சிறிய தந்தையார்களின்) கதி என்னவாயிற்று என்பதைக் கண்டு பிடித்துக், குதிரையைத் திருடியவனையும் பற்றி அறிந்து வா.”

 

अन्तर्भौमानि सत्त्वानि वीर्यवन्ति महान्ति च।
तेषां त्वं प्रतिघातार्थं सास्त्रं गृह्णीष्व कार्मुकम्।।1.41.3।।

பூமிக்கடியில் மிகவும் பலம் பொருந்திய, பிராணிகள் இருக்கின்றன. ஆகவே, அவைகள் உன்னைத் தாக்கினால், திருப்பித் தாக்குவதற்காக, வில்லையும், ஆயுதங்களையும் எடுத்துச் செல்.”

 

अभिवाद्याभिवाद्यांस्त्वं हत्वा विघ्नकरानपि।
सिद्धार्थस्सन्निवर्तस्व मम यज्ञस्य पारग:।।1.41.4।।

வணக்கத்துக்குரியவர்களை வணங்கியும், உனக்கு இடைஞ்சல் செய்பவர்களைக் கொன்றும், நீ செல்லும் காரியத்தில் வெற்றி அடைந்து, என்னுடைய யாகம் நல்லபடி பூர்த்தியாகும் படி செய்வாயாக!”

 

एवमुक्तोंऽशुमान्सम्यक् सगरेण महात्मना।
धनुरादाय खड्गं च जगाम लघुविक्रम:।।1.41.5।।

இவ்வாறு மகாத்மாவான சகரர் கூறியவுடனே, அம்சுமான், வில்லையும், வாளையும் ஏந்திக்கொண்டு, வேகமாகப் புறப்பட்டான்.

 

स खातं पितृभिर्मार्गमन्तर्भौमं महात्मभि:।
प्रापद्यत नरश्रेष्ठ तेन राज्ञाऽभिचोदित:।।1.41.6।।

ராமா! அம்சுமான், சகரரது சொற்படி, தனது சிறிய தந்தையார்கள் சென்ற வழியில் சென்று, பூமியின் ஆழத்துக்குச் சென்றான்.

 

दैत्यदानवरक्षोभि: पिशाचपतगोरगै:।
पूज्यमानं महातेजा दिशागजमपश्यत।।1.41.7।।

ஒளி பொருந்திய அம்சுமான், அவ்வாறு செல்லும் போது, தைத்யர்களாலும், தானவர்களாலும், ராக்ஷஸர்களாலும், பிசாசர்களாலும், பறவைகளாலும், பாம்புகளாலும் வணங்கப்படும் திக்கஜத்தைக் கண்டான்.

 

स तं प्रदक्षिणं कृत्वा पृष्ट्वा चापि निरामयम्।
पितृ़न् स परिपप्रच्छ वाजिहर्तारमेव च।।1.41.8।।

அந்த திக்கஜத்தை வலம் வந்து வணங்கி, அதன் நலம் விசாரித்த பிறகு, தனது சிறிய தந்தையார்களைப் பற்றியும், யாகக் குதிரையைத் திருடியவனைப் பற்றியும் விசாரித்தான்.

 

दिशागजस्तु तच्छ्रुत्वा प्रत्याहांशुमतो वच:।
आसमञ्ज कृतार्थस्त्वं सहाश्वश्शीघ्रमेष्यसि।।1.41.9।।

அம்சுமானின் சொற்களைக் கேட்ட திக்கஜம், “அஸமஞ்சஸின் மகனே! விரைவிலேயே உன் காரியத்தில் வெற்றி பெற்று, யாகக் குதிரையுடன் திரும்பிச் செல்வாய்” என்று கூறியது.

 

तस्य तद्वचनं श्रुत्वा सर्वानेव दिशागजान्।
यथाक्रमं यथान्यायं प्रष्टुं समुपचक्रमे।।1.41.10।।

அந்த திக்கஜத்தின் சொற்களைக் கேட்ட பின்னர், மற்ற திக்கஜங்களையும் பார்த்து, முறைப்படி வணங்கி, அவைகளின் நலம் விசாரித்தான்.

 

तैश्च सर्वैर्दिशापालैर्वाक्यज्ञैर्वाक्यकोविदै:।
पूजितस्सहयश्चैव गन्ताऽसीत्यभिचोदित:।।1.41.11।।

சொற்களின் பொருள் உணர்ந்தவைகளும், சொற்களை அழகாகப் பயன்படுத்தத் தெரிந்தவைகளும் ஆன அந்தத் திக்கஜங்கள், ”நீ குதிரையுடன் திரும்பிச் செல்வாய்” என்று கூறி அம்சுமானை உற்சாகப்படுத்தின.

 

तेषां तद्वचनं श्रुत्वा जगाम लघुविक्रम:।
भस्मराशीकृता यत्र पितरस्तस्य सागरा:।।1.41.12।।

அவைகளின் வார்த்தைகளைக் கேட்ட அம்சுமான் வேக வேகமாகத் தன் பித்ருக்களான சகரபுத்திரர்கள் சாம்பல் குவியலாக இருந்த இடத்தை அடைந்தான்.

 

स दु:खवशमापन्नस्त्वसमञ्जसुतस्तदा।
चुक्रोश परमार्तस्तु वधात्तेषां सुदु:खित:।।1.41.13।।

அஸமஞ்சஸின் மகனாகிய அம்சுமான், தன் சிறிய தந்தைமாரின் நிலைமையை அறிந்து மிகுந்த துயரமடைந்து அழுதான்.

 

यज्ञीयं च हयं तत्र चरन्तमविदूरत:।
ददर्श पुरुषव्याघ्रो दु:खशोकसमन्वित:।।1.41.14।।

துக்கமும் சோகமும் நிறைந்த அம்சுமான், அங்கே அருகிலேயே யாகக்குதிரை மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டான்.

 

स तेषां राजपुत्राणां कर्तुकामो जलक्रियाम् ।
सलिलार्थी महातेजा न चापश्यज्जलाशयम् ।।1.41.15।।

இறந்த அரசகுமாரர்களுக்கு ஈமக்கிரியை செய்வதற்காகத் தண்ணீர் கிடைக்குமா என்று தேடினான். ஆனால் அங்கே எந்த ஒரு நீர் நிலையும் காணப்படவில்லை.

 

विसार्य निपुणां दृष्टिं ततोऽपश्यत्खगाधिपम् ।
पितृ़णां मातुलं राम सुपर्णमनिलोपमम्।।1.41.16।।

ராமா! பின்னர் அவன் கூர்ந்து பார்த்த போது, இறந்தவர்களின் தாய் மாமாவான, காற்றைப் போல் கடுகிச்செல்லக்கூடிய  கருடனைக் கண்டான்.

 

स चैवमब्रवीद्वाक्यं वैनतेयो महाबल :।
मा शुच: पुरुषव्याघ्र वधोऽयं लोकसम्मत:।।1.41.17।।

மகா பலசாலியான கருடன் அம்சுமானைப் பார்த்து,”வருந்தாதே! இவர்களின் மரணம் இந்த மூவுலகுக்கும் நன்மை செய்வதற்காகச் சம்பவித்தது.”

 

कपिलेनाप्रमेयेन दग्धा हीमे महाबला:।
सलिलं नार्हसि प्राज्ञ दातुमेषां हि लौकिकम्।।1.41.18।।

“மகாபலம் பொருந்திய இவர்கள், எல்லையற்ற சக்தி வாய்ந்த கபிலரால் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, சாதாரணமான நீரால் இவர்களுடைய ஈமக்கிரியையைச் செய்து விட முடியாது.

 

गङ्गा हिमवतो ज्येष्ठा दुहिता पुरुषर्षभ।
तस्यां कुरु महाबाहो पितृ़णां तु जलक्रियाम्।।1.41.19।।

வலிமையான கரங்கள் உடையவனே! உன்னுடைய பித்ருக்களின் ஜலக்கிரியையை நீ ஹிமவானின் மூத்த மகளான கங்கையின் நீரால் தான் செய்ய வேண்டும்.

 

भस्मराशीकृतानेतान् प्लावयेल्लोकपावनी।
तया क्लिन्नमिदं भस्म गङ्गया लोककान्तया।।1.41.20।।

षष्टिं पुत्रसहस्राणि स्वर्गलोकं च नेष्यति।

உலகனைத்தையும் தூய்மைப்படுத்துபவளும், அனைவருக்கும் பிரியமானவளுமான கங்கை, சாம்பற்குவியலாக இருக்கும் உன்னுடைய அறுபதாயிரம் பித்ருக்களையும் தன் நீரால் நனைத்து, அவர்களை ஸ்வர்க்கலோகத்துக்கு இட்டுச் செல்வாள்.

 

गच्छ चाश्वं महाभाग तं गृह्य पुरुषर्षभ।।1.41.21।।

यज्ञं पैतामहं वीर संवर्तयितुमर्हसि।

பாக்கியம் உடையவனே! இந்தக் குதிரையை இட்டுச் சென்று உன் பாட்டனாரின் யாகத்தை முடிக்கச்செய்.”

 

सुपर्णवचनं श्रुत्वा सोंऽशुमानतिवीर्यवान् ।।1.41.22।।

त्वरितं हयमादाय पुनरायान्महायशा:।

மிகுந்த வீர்யவானும், பெரும் புகழுடையவனுமான அம்சுமான், கருடனின் சொற்களைக் கேட்டு, யாகக் குதிரையை அழைத்துக் கொண்டு வேகமாகத் திரும்பிச் சென்றான்.

 

ततो राजानमासाद्य दीक्षितं रघुनन्दन।।1.41.23।।

न्यवेदयद्यथावृत्तं सुपर्णवचनं तथा।

யாகத்துக்கான தீக்ஷை எடுத்துக் கொண்டிருந்த அரசர் சகரரிடம் சென்று அம்சுமான் நடந்தவற்றை விளக்கியபின்,  கருடன் கூறியவற்றையும் எடுத்துரைத்தான்.

 

तच्छ्रुत्वा घोरसङ्काशं वाक्यमंशुमतो नृप:।।1.41.24।।

यज्ञं निवर्तयामास यथाकल्पं यथाविधि।

அம்சுமான் கூறிய பயங்கரமான செய்தியைக்கேட்ட அரசர், தான் பாதியில் விட்டிருந்த யாகத்தை வேதங்களிலும், கல்பங்களிலும் கூறியுள்ள முறைப்படி செய்து முடித்தார்.

 

स्वपुरं चागमच्छ्रीमानिष्टयज्ञोमहीपति:।।1.41.25।।

गङ्गायाश्चागमे राजा निश्चयं नाध्यगच्छत।

யாகத்தை முடித்த பின்னர் சகரமன்னர் தனது தலை நகரத்துக்குத் திரும்பினார். ஆனால், கங்கையை பூமிக்கு வரவழைப்பதற்கான வழி எதையும் அவரால் சிந்திக்க முடியவில்லை.

 

अकृत्वा निश्चयं राजा कालेन महता महान् ।
त्रिंशद्वर्षसहस्राणि राज्यं कृत्वा दिवं गत:।।1.41.26।।

மகானான அந்த அரசர் வெகு காலம் வரை கங்கையைப் பற்றி எந்த முயற்சியும் எடுக்காமல் முப்பதாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் ஸ்வர்க்கத்தை அடைந்தார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकचत्वारिंशस्सर्ग:।।

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் நாற்பத்தொன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...