Monday, 8 January 2024

  

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 46

( திதி ஒரு மகனை வேண்டி, கஸ்யபரின் அனுமதியுடன் தவத்தில் ஈடுபடுகிறாள். இந்திரன் அவளுக்கு சேவை செய்து ஒரு சமயம் அவளுடைய கருவறையில் நுழைந்து அங்கிருந்த கருவை ஏழு துண்டுகளாக ஆக்கிவிடுகிறான்.)


हतेषु तेषु पुत्रेषु दिति: परमदु:खिता।
मारीचं काश्यपं राम भर्तारमिदमब्रवीत्।।1.46.1।।
 

 “ராமா! தனது புத்திரர்களான தைத்யர்கள் யுத்தத்தில் மடிந்து போனதால் மிகவும் துக்கம் அடைந்த திதியானவள் தன் கணவரான (மரீசியின் மகனான)காஷ்யபரிடம் இவ்வாறு கூறினாள்.

 

हतपुत्राऽस्मि भगवंस्तव पुत्रैर्महाबलै:।
शक्रहन्तारमिच्छामि पुत्रं दीर्घतपोऽर्जितम्।।1.46.2।।

“பகவானே! அதி பலசாலியான உங்கள் மைந்தர்கள்(தேவர்கள்) என்னுடைய மைந்தர்களைக் கொன்று விட்டார்கள். நான் கடுமையான தவம் மேற்கொண்டு இந்திரனைக் கொல்லக் கூடிய ஒரு பலசாலியான மகனைப் பெற ஆசைப் படுகிறேன்.

 

साऽहं तपश्चरिष्यामि गर्भं मे दातुमर्हसि।
ईश्वरं शक्रहन्तारं त्वमनुज्ञातुमर्हसि।।1.46.3।।

நான் தவம் புரியப் போகிறேன். உலகத்தின் மிகச் சிறந்த அரசனாகி, இந்திரனைக் கொல்லும் வலிமையுடைய ஒரு மகனைத் தாங்கள் எனக்கு அருள வேண்டும். இதற்கு சம்மதம் கொடுங்கள்.”

 

तस्यास्तद्वचनं श्रुत्वा मारीच: काश्यपस्तदा।
प्रत्युवाच महातेजा दितिं परमदु:खिताम्।।1.46.4।।

மிகுந்த துயரத்திலிருந்த திதியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட காஷ்யபர் இவ்வாறு பதில் கூறினார்:

 

एवं भवतु, भद्रं ते शुचिर्भव तपोधने।
जनयिष्यसि पुत्रं त्वं शक्रहन्तारमाहवे।।1.46.5।।

“தவச்செல்வியே! அப்படியே ஆகட்டும்! உனக்கு நன்மை உண்டாகட்டும்! தூய்மையுடையவளாக இரு! இந்திரனைக் கொல்லும் ஆற்றல் உடைய ஒரு புதல்வனைப் பெறுவாய்!

 

पूर्णे वर्षसहस्रे तु शुचिर्यदि भविष्यसि।
पुत्रं त्रैलोक्यभर्तारं मत्तस्त्वं जनयिष्यसि।।1.46.6।।

நீ தூய்மையானவளாக இருந்தால், ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் , என் மூலம் இந்த மூவுலகத்துக்கும் தலைவனாகக் கூடிய ஆற்றல் உடைய மகனைப் பெறுவாய்!”

 

एवमुक्त्वा महातेजा: पाणिना स ममार्ज ताम्।
समालभ्य ततस्स्वस्तीत्युक्त्वा स तपसे ययौ।।1.46.7।।

மகா தேஜஸ் உடைய காஷ்யபர், இவ்வாறு கூறி, திதியைத் தன் கைகளால் தடவிக் கொடுத்து, ‘உனக்கு மங்களம் உண்டாகட்டும்!’ என்று கூறி விட்டுத் தவம் செய்யச் சென்று விட்டார்.

 

गते तस्मिन्नरश्श्रेष्ठ दिति: परमहर्षिता।
कुशप्लवनमासाद्य तपस्तेपे सुदारुणम्।।1.46.8।।

மனிதருள் சிறந்தவனே! இதனால் மிகவும் மகிழ்ந்த திதியானவள், குஷப்லவனம் என்னும் இடத்தில் இருந்து கொண்டு, கடுமையான தவத்தில் ஈடுபட்டாள்.

 

तपस्तस्यां हि कुर्वन्त्यां परिचर्यां चकार ह।
सहस्राक्षो नरश्श्रेष्ठ परया गुणसम्पदा।।1.46.9।।

ராமா! அவ்வாறு தவம் செய்து கொண்டிருந்த திதிக்கு, இந்திரன் மிகவும் சிரத்தையுடன் சேவை செய்யலானான்.

 

अग्निं कुशान् काष्ठमप: फलं मूलं तथैव च।
न्यवेदयत्सहस्राक्षो यच्चान्यदपि काङ्क्षितम्।।1.46.10।।

ஆயிரம் கண்ணுடைய இந்திரன் அவளுக்கு வேண்டிய தீயை மூட்டிக் கொடுத்து, விறகுகள், தர்ப்பைப் புல் போன்றவற்றையும், தண்ணீர், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றையும் கொணர்ந்தது மட்டுமன்றி இன்னும் அவளுக்கு என்னென்ன தேவையோ, அனைத்தையும் செய்தான்.

 

गात्रसंवहनश्चैव श्रमापनयनैस्तथा।
शक्रस्सर्वेषु कालेषु दितिं परिचचार ह ।।1.46.11।।

இந்திரன், திதிக்குக் களைப்பு நீங்கும் வகையில் கை கால்களைப் பிடித்து விட்டும் சேவை செய்தான்.


अथ वर्षसहस्रे तु दशोने रघुनन्दन ।

दिति: परमसम्प्रीता सहस्राक्षमथाब्रवीत्।।1.46.12।।

ரகு நந்தனா! ஓராயிரம் வருடம் முடிவதற்குப் பத்து வருடங்கள் மீதம் இருந்த போது, ஒரு நாள், இந்திரனின் சேவையால் மிகவும் மகிழ்ந்த திதி அவனிடம் கூறினாள்:

 

याचितेन सुरश्रेष्ठ तव पित्रा महात्मना।
वरो वर्षसहस्रान्ते दत्तो मम सुतं प्रति।।1.46.13।।

 “தேவருள் சிறந்தவனே! நான் வேண்டிக்கொண்ட படி ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த பிறகு எனக்கு ஒரு மகனைக் கொடுப்பதாக எனக்கு உன் தகப்பனார் வரம் கொடுத்திருக்கிறார். (கஷ்யபருடைய இன்னொரு மனைவியான அதிதியின் மகன் தான் இந்திரன்.)

 

तपश्चरन्त्या वर्षाणि दश वीर्यवतां वर।
अवशिष्टानि भद्रं ते भ्रातरं द्रक्ष्यसे तत:।।1.46.14।।

வீரருள் சிறந்தவனே! இன்னும் பத்து வருடங்கள் கழிந்த பின்னர், உனக்கு ஒரு தம்பி கிடைப்பான். உனக்கு நன்மை உண்டாகட்டும்!”

 

तमहं त्वत्कृते पुत्र समाधास्ये जयोत्सुकम्।
त्रैलोक्यविजयं पुत्र सह भोक्ष्यसि विज्वर:।।1.46.15।।

மகனே! வெற்றி பெறுவதில் விருப்பை அவனுக்கு உண்டாக்கி, அவனை உன்னுடன் சேர்ந்து செயல்பட விடுகிறேன். இந்த மூன்று உலகத்தையும் வெற்றி கொண்டு நீங்கள் இருவரும், கவலையில்லாமல் இன்புற்று இருப்பீர்களாக!”

 

एवमुक्त्वा दितिश्शक्रं प्राप्ते मध्यं दिवाकरे।
निद्रयाऽपहृता देवी पादौ कृत्वाऽथ शीर्षत:।।1.46.16।।

இவ்வாறு பேசிவிட்டு, உறக்கம் மீதூற, திதியானவள் கால்கள் தலையை நோக்கி இருக்கும் படி படுத்துக்கொண்டு, அந்த மத்தியான வேளையில் உறங்கி விட்டாள்.

 

दृष्ट्वा तामशुचिं शक्र: पादत: कृतमूर्धजाम्।
शिरस्स्थाने कृतौ पादौ जहास च मुमोद च।।1.46.17।।

தலை முடி கால் மேல் விழும் படி , பாதங்களைத் தலைக்கு அருகில் இருக்குமாறு வைத்துக் கொண்டு, உறங்கிக் கொண்டிருந்த திதியைப் பார்த்த இந்திரன் சிரித்தான். மகிழ்ச்சியும் அடைந்தான்.

 

तस्याश्शरीरविवरं विवेश च पुरन्दर:।
गर्भं च सप्तधा राम बिभेद परमात्मवान्।।1.46.18।।

ராமா! இந்திரன் அப்போது அவளுடைய கர்ப்பத்துக்குள் புகுந்து அதில் இருந்த கருவை ஏழு துண்டுகளாக வெட்டினான்.

 

भिद्यमानस्ततो गर्भो वज्रेण शतपर्वणा।
रुरोद सुस्वरं राम ततो दितिरबुध्यत।।1.46.19।।

ராமா! நூறு முனைகள் கொண்ட வஜ்ராயுதத்தால் துண்டாக்கப்பட்ட அந்தக் கரு, உயர்ந்த குரலில் அழுதது. அந்த ஓசை கேட்டு திதி விழித்துக்கொண்டாள்.

 

मा रुदो मा रुदश्चेति गर्भं शक्रोऽभ्यभाषत।
बिभेद च महातेजा रुदन्तमपि वासव:।।1.46.20।।

“அழாதே! அழாதே!” என்று கூறிக்கொண்டே, இந்திரன் அந்தக் கருவைத் துண்டுகளாக்கினான்.


न हन्तव्यो न हन्तव्य इत्येवं दितिरब्रवीत्।
निष्पपात ततश्शक्रो मातुर्वचनगौरवात्।।1.46.21।।

“கொல்லாதே! கொல்லாதே!” என்று திதி கூறிய சொற்களுக்கு மதிப்புக் கொடுத்து இந்திரன் அவளுடைய கர்ப்பத்திலிருந்து வெளியே வந்தான்.

 

प्राञ्जलिर्वज्रसहितो दितिं शक्रोऽभ्यभाषत।
अशुचिर्देवि सुप्ताऽसि पादयो: कृतमूर्धजा।।1.46.22।।

வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திக்கொண்டு, இரண்டு கைகளையும் கூப்பியவனாய், இந்திரன் திதியிடம் கூறினான்: “தேவி! கால்களைத் தலைக்கு அருகில் வைத்துக் கொண்டு , தலை முடி காலில் படுமாறு தாங்கள் உறங்கியதால், அசுத்தமடைந்து விட்டீர்கள்.

 

तदन्तरमहं लब्ध्वा शक्रहन्तारमाहवे।
अभिदं सप्तधा देवि तन्मे त्वं क्षन्तुमर्हसि।।1.46.23।।

அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்திரனைக் கொல்வதற்காகவே பிறக்கப் போகிற அந்தக் கருவை ஏழு துண்டுகளாக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்.”


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे षट्चत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்தாறாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...