Monday, 8 January 2024

  

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 48

( அரசராகிய சுமதி அளித்த விருந்தோம்பலைப் பெற்றுக்கொண்டு,  விஸ்வாமித்திரரும், ராம லக்ஷ்மணர்களும், மிதிலையை நோக்கிப் பயணிக்கிறார்கள்.  விஸ்வாமித்திரர் ராமனுக்கு அகல்யைக்குக் கிடைத்த சாபத்தைப் பற்றிக் கூறுகிறார்.)

 
पृष्ट्वा तु कुशलं तत्र परस्परसमागमे।
कथान्ते सुमतिर्वाक्यं व्याजहार महामुनिम्।।1.48.1।।

ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த பின்னர், சுமதி மன்னர் மகரிஷி வால்மீகியிடம் கூறினார்:

 

इमौ कुमारौ भद्रं ते देवतुल्यपराक्रमौ।
गजसिंहगती वीरौ शार्दूलवृषभोपमौ।।1.48.2।।

पद्मपत्रविशालाक्षौ खड्गतूणी धनुर्धरौ।
अश्विनाविव रूपेण समुपस्थितयौवनौ।।1.48.3।।

यदृच्छयैव गां प्राप्तौ देवलोकादिवामरौ।
कथं पद्भ्यामिह प्राप्तौ किमर्थं कस्य वा मुने।।1.48.4।।

 “ மகரிஷியே! தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்! தேவர்களைப் போன்ற வீரம் படைத்த இந்த இரண்டு இளைஞர்களும் யார்? யானையைப் போலும், சிங்கத்தைப் போலும் நடையுடன், புலியைப் போலும் காளையைப் போலும் துணிவுடன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன், வாள், வில், அம்புகளுடன், அஸ்வினி குமாரர்களைப்  போன்ற அழகுடன், ஸ்வர்க்கத்திலிருந்து தன்னிச்சையாக வந்தவர்கள் போல் காணப்படும் இவர்கள் யார்? இவர்கள் யாருடைய புதல்வர்கள்? ஏன் கால் நடையாகப் பயணிக்கிறார்கள்? இவர்களது குறிக்கோள் யாது?”

 

भूषयन्ताविमं देशं चन्द्रसूर्याविवाम्बरम्।
परस्परस्य सदृशौ प्रमाणेङ्गितचेष्टितै:।।1.48.5।।

किमर्थं च मुनिश्रेष्ठ सम्प्राप्तौ दुर्गमे पथि।
वरायुधधरौ वीरौ श्रोतुमिच्छामि तत्त्वत:।।1.48.6।।

“ மகாமுனிவரே! நடையுடை பாவனைகளில் ஒன்று போல் இருந்து கொண்டு சூரியனும் சந்திரனும், ஆகாயத்தை அலங்கரிப்பதைப் போல், இவர்கள் இந்தப் பூமியை அலங்கரிக்கிறார்கள். மிகச்சிறந்த ஆயுதங்களை ஏந்திய இவர்கள், கடக்க முடியாத கடினமான பாதையில் ஏன் நடக்கிறார்கள்? இவர்கள் எதற்காக  வந்திருக்கிறார்கள்? நான் அதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”

 

तस्य तद्वचनं श्रुत्वा यथावृत्तं न्यवेदयत्।
सिद्धाश्रमनिवासं च राक्षसानां वधं तथा।।1.48.7।।

அவர் அப்படிக்கேட்டதும், விஸ்வாமித்திரர் தாங்கள் சித்தாசிரமத்தில் தங்கியிருந்ததையும், அப்போது ராம லக்ஷ்மணர்கள் ராக்ஷஸர்களைக் கொன்றதையும் விவரித்தார்.

 

विश्वामित्रवचश्श्रुत्वा राजा परमहर्षित:।
अतिथी परमौ प्राप्तौ पुत्रौ दशरथस्य तौ।।1.48.8।।

पूजयामास विधिवत्सत्कारार्हौ महाबलौ।


விஸ்வாமித்திரர் சொன்னதைக்கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ந்து, மிகுந்த பலசாலிகளும், தசரதரின் புதல்வர்களுமான ராமலக்ஷ்மணர்களுக்கு, அவர்களுடைய மேன்மைக்கேற்ற படி உபசாரம் செய்து கௌரவித்தார்.

 

तत: परमसत्कारं सुमते: प्राप्य राघवौ।।1.48.9।।
उष्य तत्र निशामेकां जग्मतुर्मिथिलां तत: ।

ரகு குலத்தில் பிறந்த ராமலக்ஷ்மணர்கள், மன்னருடைய விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டு, அன்று இரவு அங்கேயே தங்கி விட்டு, மறு நாள் மிதிலையை நோக்கிப் புறப்பட்டனர்.

 

तान् दृष्ट्वा मुनयस्सर्वे जनकस्य पुरीं शुभाम्।।1.48.10।।
साधु साध्विति शंसन्तो मिथिलां समपूजयन्।

முனிவர்கள் அனைவரும், மங்களகரமான மிதிலையைக்கண்டு, அதன் அழகை வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினர்.

 

मिथिलोपवने शून्यमाश्रमं दृश्य राघव:।।1.48.11।।
पुराणं निर्जनं रम्यं पप्रच्छ मुनिपुङ्गवम्।

மிதிலைக்கு அருகில்,  ஒரு அழகான, ஆனால் யாரும் வசிக்காமல் புறக்கணிக்கப்பட்டிருந்த ஒரு ஆசிரமத்தைக் கண்டு, ராமன் அதைப் பற்றி விஸ்வாமித்திரரிடம் விசாரித்தான்.

 

श्रीमदाश्रमसङ्काशं किन्न्विदं मुनिवर्जितम्।।1.48.12।।
ज्ञातुमिच्छामि भगवन् कस्यायं पूर्वमाश्रम:।

“மரியாதைக்குரியவரே! மங்களகரமாக இருந்தும், எந்த முனிவரும் வசிக்காத இந்த ஆசிரமம் யாருடையதாக இருக்கக்கூடும்? இது முன்னாளில் யாருக்குச் சொந்தமாக இருந்தது?”

 

तच्छ्रुत्वा राघवेणोक्तं वाक्यं वाक्यविशारद:।।1.48.13।।
प्रत्युवाच महातेजा विश्वामित्रो महामुनि:।

மிகவும் அழகாகப் பேசக்கூடியவரும், சிறந்த தேஜஸ் உடையவரும் ஆன விஸ்வாமித்திரர் , ராமனின் சொற்களைக் கவனித்துக் கேட்டு, அதற்குப் பதிலிறுத்தார்.

 

हन्त ते कथयिष्यामि श्रुणु तत्त्वेन राघव।।1.48.14।।
यस्येदमाश्रमपदं शप्तं कोपान्महात्मना।

“ராகவனே! ஒரு மகாத்மாவின் கோபத்தால் இந்த ஆசிரமம் எவ்வாறு சபிக்கப் பட்டது என்பதைக் கூறுகிறேன், கேள்!

 

गौतमस्य नरश्रेष्ठ पूर्वमासीन्महात्मन:।।1.48.15।।
आश्रमो दिव्यसङ्काशस्सुरैरपि सुपूजित:।

 ராமா! தேவர்களும் வந்து தங்க விரும்பும் அழகுடைய , தேவர்களாலும் மதிக்கத்தக்க இந்த ஆசிரமம் ஒரு காலத்தில் கௌதமர் என்ற புகழ் பெற்ற முனிவருக்குச் சொந்தமாக இருந்தது.

 

स चेह तप आतिष्ठदहल्यासहित: पुरा।।1.48.16।।
वर्षपूगाननेकांश्च राजपुत्र महायश:।

புகழ் பெற்ற இளவரசனே! இங்கு தான் முற்காலத்தில் கௌதமர் தன் மனைவி அகல்யையுடன் தவத்தில் ஈடுபட்டிருந்தார்.

 

तस्यान्तरं विदित्वा तु सहस्राक्षश्शचीपति:।।1.48.17।।
मुनिवेषधरोऽहल्यामिदं वचनमब्रवीत्।

ஒரு நாள், சரியான சந்தர்ப்பம் பார்த்து, ஆயிரம் கண்ணுடைய இந்திரன் கௌதம முனிவரைப் போல் உருவம் எடுத்துக் கொண்டு அகல்யையிடம் வந்து, இவ்வாறு கூறினான்:

 

ऋतुकालं प्रतीक्षन्ते नार्थिनस्सुसमाहिते।1.48.18
सङ्गमं त्वहमिच्छामि त्वया सह सुमध्यमे।।

“பேரழகியே! அதிக ஆசை கொண்டவன் சரியான சமயத்துக்காகக் காத்திருக்க மாட்டான். அழகிய இடை உடையவளே! நான் உன்னுடன் இணைய ஆசைப்படுகிறேன்.”

 

मुनिवेषं सहस्राक्षं विज्ञाय रघुनन्दन।1.48.19
मतिं चकार दुर्मेधा देवराजकुतूहलात्।।

முனிவர்  வடிவில் வந்திருப்பது தேவேந்திரன் என்பதை அறிந்து கொண்ட அகல்யை, தேவராஜனுடன் கூடும் விருப்பத்தில், அவனுடைய இச்சைக்கு இசைந்து விட்டாள்.


अथाब्रवीत् नरश्रेष्ठ कृतार्थेनान्तरात्मना।1.48.20।।

कृतार्थाऽस्मि सुरश्रेष्ठ गच्छ शीघ्रमित: प्रभो।
आत्मानं मां च देवेश सर्वदा रक्ष गौतमात्।1.48.21।।

மனிதருள்  சிறந்தவனே! பிறகு, தன் விருப்பம் நிறைவேறியதில் திருப்தி அடைந்த அகல்யை தேவேந்திரனிடம், “தேவர்களின் தலைவனே! நான் திருப்தி அடைந்தேன். இங்கிருந்து சென்று விடுங்கள். உங்களையும், என்னையும், கௌதமருடைய கோபத்திலிருந்து காப்பாற்றுங்கள்”என்று கூறினாள்.

 

इन्द्रस्तु प्रहसन् वाक्यमहल्यामिदमब्रवीत्।
सुश्रोणि परितुष्टोऽस्मि गमिष्यामि यथाऽगतम्।1.48.22।।

புன்னகையுடன் இந்திரன் கூறினான்: “அழகிய இடையுடையவளே! நான் திருப்தி அடைந்துள்ளேன். இனி நான் வந்த வழியே திரும்பிச் செல்கிறேன்.”

 

एवं सङ्गम्य तु तया निश्चक्रामोटजात्तत:।।
स सम्भ्रमात्त्वरन् राम शङ्कितो गौतमं प्रति।1.48.23।।

ராமா! அகல்யையுடன் இணைந்த பின்னர், கௌதமரைப் பற்றிய அச்சத்தில், விரைவாக அந்தக் குடிலை விட்டுத் தேவேந்திரன் வெளியே வந்தான்.

 

गौतमं तं ददर्शाथ प्रविशन्तं महामुनिम्।
देवदानवदुर्धर्षं तपोबलसमन्वितम्।।1.48.24।।

तीर्थेंदकपरिक्लिन्नं दीप्यमानमिवानलम्।
गृहीतसमिधं तत्र सकुशं मुनिपुङ्गवम्।।1.48.25।।

அப்போது தேவேந்திரன், தேவர்களாலும், தானவர்களாலும் எதிர்க்க முடியாத தபோபலத்தையுடைய கௌதமரிஷி, தூய நீரில் நீராடி, எரியும் நெருப்பு போல் ஜ்வலித்துக்கொண்டு, வேள்விக்கு வேண்டிய விறகுக்கட்டைகளையும், தர்ப்பைப் புல்லையும்  சுமன்டு கொண்டு, அந்த ஓலைக் குடிலில் நுழைவதைக் கண்டான்.

 

दृष्ट्वा सुरपतिस्त्रस्तो विवर्णवदनोऽभवत्।
अथ दृष्ट्वा सहस्राक्षं मुनिवेषधरं मुनि:।।1.48.26।।

दुर्वृत्तं वृत्तसम्पन्नो रोषाद्वचनमब्रवीत्।

அவரைப் பார்த்ததுமே, பயத்தால் தேவேந்திரனின் முகம் வெளிறி விட்டது. தீய நடத்தையுடைய தேவேந்திரனைத் தன்னைப் போன்ற உருவத்தில் கண்ட கௌதமர், மிகுந்த கோபம் கொண்டு இவ்வாறு கூறினார்:

 

मम रूपं समास्थाय कृतवानसि दुर्मते।।1.48.27।।
अकर्तव्यमिदं तस्माद्विफलस्त्वं भविष्यसि।

“தீய புத்தி உடையவனே! என்னைப் போல் உருவம் தரித்துக் கொண்டு, செய்யக்கூடாத செயலைச் செய்திருக்கிறாய்! ஆகவே, நீ உன் விதைப் பையை இழக்கக் கடவாய்!”


गौतमेनैवमुक्तस्य सरोषेण महात्मना।।1.48.28।।
पेततुर्वृषणै भूमौ सहस्राक्षस्य तत्क्षणात्।

மிகுந்த கோபத்துடன் மகாத்மாவான கௌதமர் இவ்வாறு சபித்ததுமே, இந்திரனுடைய விதைப் பைகள் கீழே விழுந்து விட்டன.

 

तथा शप्त्वा स वै शक्रमहल्यामपि शप्तवान्।।1.48.29।।

इह वर्षसहस्राणि बहूनि त्वं निवत्स्यसि।
वायुभक्षा निराहारा तप्यन्ती भस्मशायिनी।।1.48.30।।

अदृश्या सर्वभूतानां आश्रमेऽस्मिन्निवत्स्यसि।

இந்திரனைச் சபித்த பின்னர், கௌதமர் அகல்யையும் இவ்வாறு சபித்தார்: “உணவு இன்றிக் காற்றை மட்டும் உட்கொண்டு, யார் கண்ணுக்கும் தெரியாமல் இந்த ஆசிரமத்திலேயே, புழுதியில் கிடந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, நீ தவம் செய்ய வேண்டும்.

 

यदा चैतद्वनं घोरं रामो दशरथात्मज:।।1.48.31।।

आगमिष्यति दुर्धर्षस्तदा पूता भविष्यसि।

தசரதனின் மகனான, யாராலும் எதிர்க்க முடியாத ராமன் இந்தப் பயங்கரமான காட்டுக்குள் பிரவேசிக்கும் போது நீ புனிதமானவளாவாய்!

 

तस्यातिथ्येन दुर्वुत्ते लोभमोहविवर्जिता।।1.48.32।।

मत्सकाशे मुदा युक्ता स्वं वपुर्धारयिष्यसि।

தீய நடத்தை உடையவளே! ராமனுக்கு வேண்டிய உபசாரங்களையெல்லாம், எந்த வித எதிர்பார்ப்பும், ஆசையும் இன்றி நீ செய்த பின்னர், உன்னுடைய இந்த உருவத்தை மீண்டும் பெற்று, என்னுடன் கூடி மகிழ்ந்திருப்பாய்!”

 

एवमुक्त्वा महातेजा गौतमो दुष्टचारिणीम्।।1.48.33।।

इममाश्रममुत्सृज्य सिद्धचारणसेविते।
हिमवच्छिखरे पुण्ये तपस्तेपे महातपा:।।1.48.34।।

மகா தேஜஸ் உடையவரும், மகா தபஸ்வியுமான கௌதமர், தீய நடத்தையுடைய அகல்யையிடம் இவ்வாறு கூறிவிட்டுத் தன் ஆசிரமத்தை விட்டு, இமயமலைக்குச் சென்று தவம் செய்யலானார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टचत्वारिंशस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  நாற்பத்தெட்டாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...