ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 50
( ஜனகரின் அரசவைக்கு ராமனின் வருகை. விஸ்வாமித்திரர் ராமனையும்
லக்ஷ்மணனையும் அறிமுகப்படுத்துகிறார்.)
तत: प्रागुत्तरां गत्वा
रामस्सौमित्रिणा सह।
विश्वामित्रं पुरस्कृत्य यज्ञवाटमुपागमत्।।1.50.1।।
பின்னர், விஸ்வாமித்திரர்
முன்னே செல்ல, லக்ஷ்மணனுடன், ராமன் வடகிழக்குத் திசையில் பயணப்பட்டு, யாக சாலையை
அடைந்தான்.
रामस्तु
मुनिशार्दूलमुवाच सहलक्ष्मण:।
साध्वी यज्ञसमृद्धिर्हि जनकस्य महात्मन:।।1.50.2।।
ராமனும் லக்ஷ்மணனும்,
விஸ்வாமித்திரரைப் பார்த்து, அங்கே மகாத்மாவான ஜனகர் செய்யும் யாகத்துக்கான
ஏற்பாடுகள் மிகச்சிறப்பாகச் செய்யப் பட்டுள்ளன என்று கூறினார்கள்.
बहूनीह सहस्राणि
नानादेशनिवासिनाम्।
ब्राह्मणानां महाभाग वेदाध्ययनशालिनाम्।।1.50.3।।
ऋषिवाटाश्च दृश्यन्ते शकटीशतसङ्कुला:।
देशो विधीयतां ब्रह्मन् यत्र वत्स्यामहे वयम्।।1.50.4।।
“மகா பாக்கியம் உடையவரே! பல்வேறு தேசங்களில் இருந்து வேதங்களை அத்யயனம் செய்த
அந்தணர்கள் பல்லாயிரக்கணக்காணோர் வந்துள்ளார்கள். ரிஷிகளுக்குரிய
தங்குமிடங்களுக்கு முன்னேயும் நூற்றுக்கணக்கான வண்டிகள் உள்ளன. தவஸ்ரேஷ்டரே! நாம்
தங்கப்போகும் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று விஸ்வாமித்திரரிடம்
ராமன் கூறினான்.
रामस्य वचनं श्रुत्वा
विश्वामित्रो महामुनि:।
निवेशमकरोद्देशे विविक्ते सलिलायुते।।1.50.5।।
ராமனின் சொற்களைக்
கேட்ட விஸ்வாமித்திரர், அதிக சந்தடியில்லாத, தண்ணீர் வசதியுடைய இடத்தைத்
தங்குவதற்காகத் தேர்ந்தெடுத்தார்.
विश्वामित्रमनुप्राप्तं
श्रुत्वा स नृपतिस्तदा।
शतानन्दं पुरस्कृत्य पुरोहितमनिन्दितम्।।1.50.6।।
प्रत्युज्जगाम सहसा विनयेन समन्वित:।
ஜனக மன்னர்,
விஸ்வாமித்திரர் வந்திருப்பதை அறிந்த உடனே, தனது புரோஹிதரான சதானந்தரை
முன்னிருத்தி, அவர் பின்னே, மிகவும் பணிவுடன் விஸ்வாமித்திரரை எதிர்கொண்டு
அழைப்பதற்குப் புறப்பட்டார்.
ऋत्विजोऽपि
महात्मानस्त्वर्घ्यमादाय सत्वरम्।।1.50.7।।
विश्वामित्राय धर्मेण ददुर्मंन्त्रपुरस्कृतम्।
மிகச்சிறந்த
ரித்விக்குகளான பிற புரோகிதர்களும், பூஜைக்குரிய பொருட்களைக் கொண்டு வந்து,
மந்திரங்களுடன் விஸ்வாமித்திரரை உபசரித்து வரவேற்றார்கள்.
प्रतिगृह्य च तां पूजां
जनकस्य महात्मन:।।1.50.8।।
पप्रच्छ कुशलं राज्ञो यज्ञस्य च निरामयम्।
ஜனகரின் உபசரிப்புகளை
ஏற்றுக்கொண்ட விஸ்வாமித்திரர் அவருடைய நலம் விசாரித்து, யாகம் விக்கினமில்லாமல் நடைபெறுகிறதா
என்றும் கேட்டறிந்தார்.
स तांश्चापि मुनीन्
पृष्ट्वा सोपाध्यायपुरोधस:।।1.50.9।।
यथान्यायं ततस्सर्वैस्समागच्छत्प्रहृष्टवत्।
விஸ்வாமித்திரர் பிற
முனிவர்களிடமும், புரோகிதர்கள் முதலியவர்களிடமும், முறைப்படி நலம் விசாரித்தார்.
பின்னர் மற்றவர்களும், அவர்களுடன் சந்தோஷமாகச் சேர்ந்து கொண்டனர்.
अथ राजा मुनिश्रेष्ठं
कृताञ्जलिरभाषत।।1.50.10।।
आसने भगवानास्तां सहैभिर्मुनिपुङ्गवै:।
பின்னர் ஜனக மன்னர்,
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு, விஸ்வாமித்திரரிடம், “ முனிஸ்ரேஷ்டரே! தலைசிறந்த
முனிவர்களுடன், தாங்களும் ஆசனத்தில் அமர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்.
जनकस्य वचश्श्रुत्वा
निषसाद महामुनि:।।1.50.11।।
पुरोधा ऋत्विजश्चैव राजा च सह मन्त्रिभि:।
ஜனகர் இவ்வாறு
கூறியவுடன், விஸ்வாமித்திரர் ஆசனத்தில் அமர்ந்ததும், குடும்பப் புரோகிதர்களும்,
வேள்வியை நடத்தி வைக்கும் புரோகிதர்களும், அமைச்சர்களும், அரசரும், அவரவருக்கான
இடங்களில் அமர்ந்து கொண்டார்கள்.
आसनेषु
यथान्यायमुपविष्टान् समन्तत:।।1.50.12।।
दृष्ट्वा स नृपतिस्तत्र विश्वामित्रमथाब्रवीत्।
அனைவரும் அவரவர்
இடங்களில் அமர்ந்து விட்டதைப் பார்த்த அரசர் விஸ்வாமித்திரரைப் பார்த்து இவ்வாறு
கூறினார்:
अद्य यज्ञसमृध्दिर्मे
सफला दैवतै: कृता।।1.50.13।।
अद्य यज्ञफलं प्राप्तं भगवद्दर्शनान्मया।
“இன்று என்னுடைய
வேள்வி, தேவதைகளின் அருளால், பலனுடையதாக ஆயிற்று. தங்களுடைய தரிசனத்தால், நான்
வேள்வி செய்ததன் பலன் கிடைத்து விட்டது.
धन्योऽस्म्यनुगृहीतोऽस्मि
यस्य मे मुनिपुङ्गव।।1.50.14।।
यज्ञोपसदनं ब्रह्मन् प्राप्तोऽसि मुनिभि: सह।
முனி புங்கவரே! இந்த
முனிவர்களுடன், தாங்களும் என்னுடைய யாக மண்டபத்துக்கு வந்திருப்பதால் நான்
ஆசீர்வதிக்கப் பட்டவனாகிறேன். அனுக்ரஹம் பெற்றவனாகிறேன்.
द्वादशाहं तु
ब्रह्मर्षे शेषमाहुर्मनीषिण:।।1.50.15।।
ततो भागार्थिनो देवान् द्रष्टुमर्हसि कौशिक।
பிரம்மரிஷியே! யாகம்
முழுமை பெறுவதற்கு இன்னும் பன்னிரண்டு நாட்களே இருக்கின்றன என்று அறிஞர்கள்
சொல்கிறார்கள். அதன் பிறகு, தேவதைகள் அவர்களுடைய பங்கைப் பெறுவதற்காக வருவதைத் தாங்கள்
பார்க்கலாம்.”
इत्युक्त्वा मुनिशार्दूलं
प्रहृष्टवदनस्तदा।।1.50.16।।
पुनस्तं परिपप्रच्छ प्राञ्जलि: प्रणतो नृप:।
இவ்வாறு கூறிவிட்டு,
ஜனகர் முகமலர்ச்சியுடன் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு விஸ்வாமித்திரரை வணங்கி,
அவரிடம் கேட்டார்:
इमौ कुमारौ भद्रं ते
देवतुल्यपराक्रमौ।।1.50.17।।
गजसिंहगती वीरौ शार्दूलवृषभोपमौ।
पद्मपत्रविशालाक्षौ खड्गतूणीधनुर्धरौ।।1.50.18।।
अश्विनाविव रूपेण समुपस्थितयौवनौ।
यदृच्छयैव गां प्राप्तौ देवलोकादिवामरौ।।1.50.19।।
कथं पद्भ्यामिह प्राप्तौ किमर्थं कस्य वा मुने।
“மகரிஷியே! தங்களுக்கு
நன்மை உண்டாகட்டும்! தேவர்களைப் போன்ற வீரம் படைத்த இந்த இரண்டு இளைஞர்களும் யார்?
யானையைப் போலும், சிங்கத்தைப் போலும் நடையுடன், புலியைப் போலும் காளையைப் போலும்
துணிவுடன், தாமரை இதழ்களைப் போன்ற கண்களுடன், வாள், வில், அம்புகளுடன், அஸ்வினி
குமாரர்களைப் போன்ற அழகுடன்,
ஸ்வர்க்கத்திலிருந்து தன்னிச்சையாக வந்தவர்கள் போல் காணப்படும் இவர்கள் யார்?
இவர்கள் யாருடைய புதல்வர்கள்? ஏன் கால் நடையாகப் பயணிக்கிறார்கள்? இவர்களது
குறிக்கோள் யாது?”
वरायुधधरौ वीरौ कस्य पुत्रौ महामुने।।1.50.20।।
भूषयन्ताविमं देशं चन्द्रसूर्याविवाम्बरम्।
परस्परस्य सदृशौ प्रमाणेङ्गितचेष्टितै:।।1.50.21।।
काकपक्षधरौ वीरौ श्रोतुमिच्छामि तत्त्वत:।
“மகாமுனிவரே!
மிகச்சிறந்த ஆயுதங்களை ஏந்திய இவர்கள், யாருடைய புதல்வர்கள்? நடையுடை பாவனைகளில்
ஒன்று போல் இருந்து கொண்டு சூரியனும் சந்திரனும், ஆகாயத்தை அலங்கரிப்பதைப் போல்,
இவர்கள் இந்தப் பூமியை அலங்கரிக்கிறார்கள். தலையின் இருபுறமும் கூந்தல் புரள இருக்கும்
இவர்களைப் பற்றி நான் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.”
तस्य तद्वचनं श्रुत्वा जनकस्य महात्मन:।।1.50.22।।
न्यवेदयन्महात्मानौ पुत्रौ दशरथस्य तौ।
மகாத்மாவான ஜனகரின்
சொற்களைக்கேட்ட விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களை, இவர்கள் தசரத மன்னருடைய புத்திரர்கள்
என்று கூறி ஜனருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
सिद्धाश्रमनिवासं च
राक्षसानां वधं तथा।।1.50.23।।
तच्चागमनमव्यग्रं विशालायाश्च दर्शनम्।
अहल्यादर्शनं चैव गौतमेन समागमम्।।1.50.24।।
महाधनुषि जिज्ञासां कर्तुमागमनं तथा।
एतत्सर्वं महातेजा जनकाय महात्मने ।।1.50.25।।
निवेद्य विररामाथ विश्वामित्रो महामुनि:।
மகாதேஜஸ் உடைய
விஸ்வாமித்திரர், மகாத்மாவான ஜனகருக்குத் தாங்கள் சித்தாசிரமத்தில் இருந்தது,
அங்கு ராக்ஷஸர்களை வதம் செய்தது, விசாலம் என்னும் நகரத்துக்குச் சென்றது,
அகல்யையையும் கௌதமரையும் சந்தித்தது ஆகியவற்றைக்
கூறி, ஜனகரிடமுள்ள அந்தப் பெரிய வில்லைப் பார்க்கும் ஆசையுடன் மிதிலைக்கு
வந்திருப்பதாகக் கூறி முடித்தார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाणडे पञ्चाशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பதாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment