ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 51
(சதானந்தர்
விஸ்வாமித்திரரின் கடின முயற்சிகளையும், அவருடைய சாதனைகளையும் ராமனுக்கு
விளக்குகிறார்.)
तस्य तद्वचनं श्रुत्वा विश्वामित्रस्य धीमत:।
हृष्टरोमा महातेजाश्शतानन्दो महातपा:।।1.51.1।।
गौतमस्य सुतो ज्येष्ठस्तपसा द्योतितप्रभ:।
रामसन्दर्शनादेव परं विस्मयमागत:।।1.51.2।।
மிகுந்த அறிவாற்றல் கொண்டவரும், தவத்தின் ஒளியால் பிரகாசிப்பவரும், மகாதேஜஸ்
உடையவரும், கௌதமருடைய மூத்த புதல்வருமான சதானந்தர் ராமனை நேரில் கண்டு, மிகவும்
ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தார்.
स तौ निषण्णौ
सम्प्रेक्ष्य सुखासीनौ नृपात्मजौ।
शतानन्दो मुनिश्रेष्ठं विश्वामित्रमथामब्रवीत्।।1.51.3।।
சுகமாக அங்கு
அமர்ந்திருந்த அரசகுமாரர்களான ராம லக்ஷ்மணர்களைக்கண்டு, சதானந்தர்
விஸ்வாமித்திரரிடம் கேட்டார்:
अपि ते मुनिशार्दूल मम
माता यशस्विनी।
दर्शिता राजपुत्राय तपो दीर्घमुपागता।।1.51.4।।
முனிஸ்ரேஷ்டரே!
கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்த என்னுடைய புகழ் பெற்ற அன்னையாரை ராமர் பார்த்தாரா?
अपि रामे महातेजा मम
माता यशस्विनी।
वन्यैरुपाहरत्पूजां पूजार्हे सर्वदेहिनाम्।।1.51.5।।
ஓளி மிகுந்த எனது
அன்னையார், உலகிலுள்ள உயிர்கள் அனைத்தினாலும் வழிபடத்தக்க ராமரை வனத்தில்
கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பூஜித்தாரா?
अपि रामाय कथितं
यथावृत्तं पुरातनम्।
मम मातुर्महातेजो दैवेन दुरनुष्ठितम्।।1.51.6।।
மகாதேஜஸ்வியே!
தேவேந்திரன் என்னுடைய தாயாரிடம் தவறாக நடந்து கொண்டதைப் பற்றி ராமனுக்குச்
சொல்லப்பட்டதா?
अपि कौशिक भद्रं ते
गुरुणा मम सङ्गता।
मम माता मुनिश्रेष्ठ रामसन्दर्शनादित:।।1.51.7।।
கௌசிகரே! ராமரைத்
தரிசித்ததால், எனது அன்னையார் எனது தந்தையாருடன் இணைந்து விட்டாரா?
अपि मे गुरुणा राम:
पूजित: कुशिकात्मज।
इहागतो महातेजा: पूजां प्राप्तो महात्मन:।।1.51.8।।
கௌசிகரே! என்னுடைய தந்தையாரால் இங்கு வந்துள்ள மகாதேஜஸ் உடைய ராமர்
பூஜிக்கப்பட்டாரா? அவர்து பூஜையை ஏற்றுக்கொண்டாரா?
अपि शान्तेन मनसा
गुरुर्मे कुशिकात्मज ।
इहाऽगतेन रामेण प्रयतेनाभिवादित:।।1.51.9।।
கௌசிகரே! இங்கு
வந்துள்ள ராமர் என்னுடைய தந்தையை அமைதியாக, மனதார வரவேற்று வணங்கினாரா?
तच्छ्रुत्वा वचनं तस्य विश्वामित्रो महामुनि:।
प्रत्युवाच शतानन्दं वाक्यज्ञो वाक्यकोविदम्।।1.51.10।।
அழகாகப் பேசத்தெரிந்த
சதானந்தருடைய அந்த வார்த்தைகளைக் கேட்ட விஸ்வாமித்திரர் அவருக்கு இவ்வாறு பதில்
கூறினார்:
नातिक्रान्तं
मुनिश्रेष्ठ यत्कर्तव्यं कृतं मया।
सङ्गता मुनिना पत्नी भार्गवेणेव रेणुका।।1.51.11।।
“முனிஸ்ரேஷ்டரே! எது
எது எப்படி செய்யப்பட வேண்டுமோ, அப்படியே செய்யப்பட்டது. எதுவும் விட்டுப்
போகவில்லை. ரேணுகா எவ்வாறு ஜமதக்னியுடன் இணைந்து கொண்டாளோ, அவ்வாறே, அகல்யையும்
கௌதமரிஷியுடன் இணைந்து கொண்டாள்.
तच्छ्रुत्वा वचनं तस्य
विश्वामित्रस्य भाषितम् ।
शतानन्दो महातेजा रामं वचनमब्रवीत्।।1.51.12।।
விஸ்வாமித்திரரின் இந்த
வார்த்தைகளைக் கேட்ட சதானந்தர் ராமரைப் பார்த்துக் கூறினார்:
स्वागतं ते नरश्रेष्ठ
दिष्ट्या प्राप्तोऽसि राघव।
विश्वामित्रं पुरस्कृत्य महर्षिमपराजितम्।।1.51.13।।
“மனிதருள் சிறந்த
ராகவரே! யாராலும் தோற்கடிக்க முடியாத விஸ்வாமித்திரரின் முன்னிலையில் தங்களை
தரிசிக்கும் பாக்கியம் என்னுடைய அதிருஷ்டத்தால் கிடைத்தது. தங்களுக்கு நல்வரவு
உண்டாகட்டும்!
अचिन्त्यकर्मा तपसा ब्रह्मर्षिरतुलप्रभ:।
विश्वामित्रो महातेजा वेत्स्येनं परमां गतिम्।।1.51.14।।
ஒளி மிகுந்த
விஸ்வாமித்திரர், நினைத்துப் பார்க்க முடியாத செயல்களைச் செய்திருக்கிறார். தனது
தவ வலிமையால் பிரம்மரிஷி பதத்தையும், இணையற்ற பிரகாசத்தையும் பெற்றிருக்கிறார்.
அவர் தான் தாங்கள் அடைய வேண்டிய மிகச்சிறந்த இடம் என்பதைத் தாங்கள்
அறிந்துள்ளீர்கள்.
नास्ति धन्यतरो राम
त्वत्तोऽन्यो भुवि कश्चन।
गोप्ता कुशिकपुत्रस्ते येन तप्तं महत्तप:।।1.51.15।।
“ராமரே! மிகக் கடுமையான
தவத்தைச் செய்த விஸ்வாமித்திரர் தங்களுடைய பாதுகாவலராக இருப்பதனால், தங்களைக்
காட்டிலும் உயர்ந்த பாக்கிய சாலி இந்த உலகத்தில் யாரும் இல்லை.
श्रूयतां चाभिधास्यामि
कौशिकस्य महात्मन:।
यथा बलं यथा वृत्तं तन्मे निगदत: श्रुणु।।1.51.16।।
குசிகருடைய புதல்வராகிய
மகாத்மா விஸ்வாமித்திரர் எவ்வாறு இத்தகைய வலிமையை அடைந்தார் என்பதை விவரமாகக்
கூறுகிறேன், கேளுங்கள்!
राजाऽभूदेष धर्मात्मा
दीर्घकालमरिन्दम:।
धर्मज्ञ: कृतविद्यश्च प्रजानां च हिते रत:।।1.51.17।।
இந்த விஸ்வாமித்திரர்,
தர்மாத்மாவாகவும், எதிரிகளை அடக்குபவராகவும், தர்மங்களை அறிந்தவராகவும், அனைத்து
வகைக் கல்விகளிலும் தேர்ச்சி பெற்றவராகவும், மக்களுடைய நலத்திலே அக்கறை செலுத்தும்
அரசராகவும் இருந்து, வெகுகாலம் ஆட்சி செய்து வந்தார்.
प्रजापतिसुतश्चासीत्कुशो नाम महीपति:।
कुशस्य पुत्रो बलवान् कुशनाभस्सुधार्मिक:।।1.51.18।।
பிரஜாபதி பிரம்மாவின்
புதல்வர் குசர் என்று ஒருவர் இருந்தார். அவருக்குக் குச நாபர் என்ற பெயரில் சிறந்த
தர்மாத்மாவும் வலிமை உடையவரும் ஆன புதல்வர் ஒருவர் இருந்தார்.
कुशनाभसुतस्त्वासीद्गाधिरित्येव
विश्रृत:।
गाधे: पुत्रो महातेजा विश्वामित्रो महामुनि:।।1.51.19।।
குச நாபரின் புகழ்
பெற்ற புதல்வர் காதி என்பவர். இந்த ஒளி மிகுந்த தவச்செல்வராகிய விஸ்வாமித்திரர்
அந்த காதியின் புதல்வர் ஆவார்.
विश्वामित्रो महातेजा:
पालयामास मेदिनीम्।
बहुवर्षसहस्राणि राजा राज्यमकारयत्।।1.51.20।।
மகா தேஜஸ் உடைய இந்த
விஸ்வாமித்திர மன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தன் நாட்டை ஆண்டு வந்தார்.
कदाचित्तु महातेजा
योजयित्वा वरूथिनीम्।
अक्षौहीणीपरिवृत: परिचक्राम मेदिनीम्।।1.51.21।।
ஒரு முறை, இந்த
விஸ்வாமித்திர மன்னர், ஒரு அக்ஷௌஹிணி அளவுள்ள பெரும்படையைத் திரட்டிக்கொண்டு இந்த
பூமியின் பல பகுதிகளைச் சுற்றி வந்தார்.
नगराणि सराष्ट्राणि
सरितश्च तथा गिरीन्।
आश्रमान्क्रमशो राम विचरन्नाजगाम ह।।1.51.22।।
वसिष्ठस्याश्रमपदं नानावृक्षसमाकुलम्।
नानामृगगणाकीर्णं सिद्धचारणसेवितम्।।1.51.23।।
देवदानवगन्धर्वै: किन्नरैरुपशोभितम्।
प्रशान्तहरिणाकीर्णं द्विजसङ्घनिषेवितम्।।1.51.24।।
ब्रह्मर्षिगणसङ्कीर्णं देवर्षिगणसेवितम्।
तपश्चरणसंसिद्धैरग्निकल्पैर्महात्मभि:।।1.51.25।।
अब्भक्षैर्वायुभक्षैश्च शीर्णपर्णाशनैस्तथा।
फलमूलाशनैर्दान्तैर्जितरोषैर्जितेन्द्रियै:।।1.51.26।।
ऋषिभिर्वालखिल्यैश्च जपहोमपरायणै:।
अन्यैर्वैखानसैश्चैव समन्तादुपशोभितम्।।1.51.27।।
“ராமரே! பல
நாடுகளையும், நகரங்களையும், நதிகளையும், மலைகளையும், ஆசிரமங்களையும் கடந்து
விஸ்வாமித்திர மன்னர் வசிஷ்டரின் ஆசிரமத்தை அடைந்தார். அந்த ஆசிரமம், மரங்களும், விலங்குகளும், பலவிதமான
பறவைக்கூட்டங்களும், அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த மான்களும் நிறைந்து
காணப்பட்டது. அங்கே சித்தர்கள், சாரணர்கள், தேவதைகள், கந்தர்வர்கள், கின்னரர்கள்,
தவத்தில் சித்தி அடைந்தவர்கள், நெருப்பைப் போல் பிரகாசிப்பவர்கள், புலனடக்கம்
கொண்டவர்கள், கோபத்தை வென்றவர்கள்,வழிபாட்டிலும், வேள்விகள் செய்வதிலும் ஈடுபாடு
உடையவர்கள் என்று, பலவாறானவர்கள் இருந்தார்கள். நீரை மட்டும் உணவாகக் கொண்டவர்கள்,
காற்றை மட்டும் உணவாகக்கொண்டவர்கள், கீழே தானாக விழுந்த இலைகளை மட்டும்
உண்பவர்கள், பழங்களையும், கிழங்குகளையும் மட்டும் உண்பவர்கள் என்று பலவிதமானோர்
இருந்தார்கள். வாலகில்யர்களாலும் ( பிரம்மாவின் புத்திரர்களான, கட்டை விரல் உயரமே
உடைய ஒளி மிகுந்த தபஸ்விகள்) வைகானஸர்களாலும் (பிரம்மாவின் நகங்களில் இருந்து
பிறந்த தபஸ்விகள்) அந்த ஆசிரமம் அலங்கரிக்கப்பட்டு விளங்கியது.
वसिष्ठस्याश्रमपदं
ब्रह्मलोकमिवापरम्।
ददर्श जयतां श्रेष्ठो विश्वामित्रो महाबल:।।1.51.28।।
மிகச் சிறந்த
வெற்றிகளைப் பெற்ற, வலிமை நிறைந்த விஸ்வாமித்திரர், இன்னொரு பிரம்மலோகத்தைப் போல்
இருந்த வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தைக் கண்டார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये
बालकाण्डे एकपञ्चाशस्सर्ग:।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பத்தொன்றாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment