ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 52
(வசிஷ்டர் அரசர் விஸ்வாமித்திரரை உபசரிக்கத் தேவையான பொருட்களை உண்டாக்குமாறு
காமதேனுவுக்கு ஆணையிடுகிறார்.)
स दृष्ट्वा परमप्रीतो विश्वामित्रो महाबल:।
प्रणतो विनयाद्वीरो वसिष्ठं जपतां वरम्।।1.52.1।।
(வசிஷ்டரின்
ஆசிரமத்தைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி கொண்ட) விஸ்வாமித்திரர் அங்கு
தவமுனிவர்களில் மிகவும் சிறந்தவரான வசிஷ்டரைப் பார்த்து, மரியாதையுடன் அவரை
வணங்கினார்.
स्वागतं तव चेत्युक्तो
वसिष्ठेन महात्मना।
आसनं चास्य भगवान् वसिष्ठो व्यादिदेश ह।।1.52.2।।
மகாத்மா வசிஷ்டர்
விஸ்வாமித்திரரை வரவேற்று, அவர் அமர்வதற்குரிய ஆசனத்தை வரவழைத்தார்.
उपविष्टाय च तदा
विश्वामित्राय धीमते।
यथान्यायं मुनिवर: फलमूलमुपाहरत्।।1.52.3।।
விஸ்வாமித்திரர்
ஆசனத்தில் அமர்ந்ததும், அவருக்கு முறைப்படி பழங்களையும், கிழங்குகளையும் அளித்தார்.
प्रतिगृह्य तु तां
पूजां वसिष्ठाद्राजसत्तम:।
तपोग्निहोत्रशिष्येषु कुशलं पर्यपृच्छत।।1.52.4।।
विश्वामित्रो महातेजा वनस्पतिगणे तथा ।
सर्वत्र कुशलं चाह वसिष्ठो राजसत्तमम्।।1.52.5।।
அரசர்களுள் சிறந்த
விஸ்வாமித்திரர், வசிஷ்டரின் உபசரிப்பைப் பெற்றுக்கொண்ட பின், வசிஷ்டருடைய
நலத்தையும், அவருடைய தவம் பற்றியும், அக்கினிஹோத்ரம் முதலிய வேள்விகள் சரியாக
நடைபெறுவதைப் பற்றியும், அவருடைய சீடர்களைப் பற்றியும், அங்குள்ள மரங்களைப்
பற்றியும் விசாரித்தார். வசிஷ்டரும்,
அனைவரும் நலம் என்றும், எல்லாம் சரியாக நடைபெறுகின்றன என்றும் பதில் கூறினார்.
सुखोपविष्टं राजानं
विश्वामित्रं महातपा:।
पप्रच्छ जपतां श्रेष्ठो वसिष्ठो ब्रह्मणस्सुत:।।1.52.6।।
பிரம்மாவின் புதல்வராகிய, தவஸ்ரேஷ்டரான வசிஷ்டர், ராஜா விஸ்வாமித்திரர் வசதியாக
அமர்ந்தவுடன், அவரிடம் கேட்டார்:
कच्चित्ते कुशलं राजन् कच्चिद्धर्मेण
रञ्जयन्।
प्रजा: पालयसे वीर राजवृत्तेन धार्मिक।।1.52.7।।
“அரசே! நலமாக
இருக்கிறீர்களா! தர்ம நெறி தவறாத வீரரே! அரச நெறிப்படி உங்கள் பிரஜைகளை ஆட்சி
செய்து, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறீர்களா?
कच्चित्ते सम्भृता
भृत्या: कच्चित्तिष्ठन्ति शासने।
कच्चित्ते विजितास्सर्वे रिपवो रिपुसूदन ।।1.52.8।।
உங்கள் வேலையாட்களின்
தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்திருக்கிறீர்களா? அவர்கள் உங்கள் ஆணைக்குக்
கட்டுப்படுகிறார்களா? உங்கள் பகைவர்களையெல்லாம் வெற்றி கொண்டு விட்டீர்களா?
कच्चिद्बलेषु कोशेषु मित्रेषु च परन्तप।
कुशलं ते नरव्याघ्र पुत्रपौत्रे तवानघ ।।1.52.9।।
பாவமற்றவரே! உங்கள்
சேனை, கருவூலம் அனைத்தும் நல்ல நிலையில்
இருக்கின்றனவா? நண்பர்கள், புத்திரர்கள், பௌத்திரர்கள் அனைவரும் நலமா?”
सर्वत्र कुशलं राजा
वसिष्ठं प्रत्युदाहरत्।
विश्वामित्रो महातेजा वसिष्ठं विनयान्वित:।।1.52.10।।
மகாதேஜஸ் உடைய ராஜா
விஸ்வாமித்திரர் மிக்க பணிவுடன், அனைத்தும் நலம் என்று பதில் கூறினார்.
कृत्वोभौ सुचिरं कालं
धर्मिष्ठौ ता: कथा: शुभा:।
मुदा परमया युक्तौ प्रीयेतां तौ परस्परम्।।1.52.11।।
அவ்விருவரும் வெகு
நேரம், பலவேறு விஷயங்களைப் பற்றியும், பலப் பல நிகழ்ச்சிகளைப் பற்றியும்,
மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர்.
ततो वसिष्ठो भगवान्
कथाऽन्ते रघुनन्दन ।
विश्वामित्रमिदं वाक्यमुवाच प्रहसन्निव।।1.52.12।।
“ரகு நந்தனரே! அவ்வாறு
பேசிக்கொண்டிருக்கும் போது, புன்னகையுடன் வசிஷ்டர் விஸ்வாமித்திரரிடம் கூறினார்:
आतिथ्यं कर्तुमिच्छामि
बलस्यास्य महाबल ।
तव चैवाप्रमेयस्य यथार्हं सम्प्रतीच्छ मे।।1.52.13।।
“மிகவும் வலிமையுள்ள
விஸ்வாமித்திரரே! தங்களையும், தங்களுடைய ஒப்புவமையில்லாத உங்கள் சேனையையும், உரிய
முறையில் உபசரிக்க விரும்புகிறேன். தயவு செய்து அதைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள
வேண்டும்.”
सत्क्रियां तु भवानेतां
प्रतीच्छतु मयोद्यताम्।
राजा त्वमतिथिश्रेष्ठ: पूजनीय: प्रयत्नत:।।1.52.14।।
தயவு செய்து நான்
அளிக்கும் இந்த விருந்தோம்பலைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாங்கள் விசேஷ
சிரத்தையுடன்பூஜிக்கத்தக்க விருந்தினர். உங்களை நான் தகுந்த முறையில் உபசரிக்க
வேண்டும்.”
एवमुक्तो वसिष्ठेन
विश्वामित्रो महामति:।
कृतमित्यब्रवीद्राजा प्रियवाक्येन मे त्वया।।1.52.15।।
வசிஷ்டரின் இந்த
வார்த்தைகளைக் கேட்ட விஸ்வாமித்திரர், “தாங்கள் இவ்வாறு அன்புடன் கூறியதே என்னை
உபசரித்தது போலத்தான்” என்று கூறினார்.
फलमूलेन भगवन् विद्यते
यत्तवाश्रमे।
पाद्येनाचमनीयेन भगवद्दर्शनेन च।।1.52.16।।
सर्वथा च महाप्राज्ञ पूजार्हेण सुपूजित:।
गमिष्यामि नमस्तेऽस्तु मैत्रेणेक्षस्व चक्षुषा।।1.52.17।।
“பகவானே! தாங்கள்
பூஜிக்கத் தகுந்தவர். தங்களுடைய ஆசிரமத்தில் இருப்பவைகளைக் கொண்டு, தங்களால்
முடிந்த அளவில் பழங்களையும், கிழங்குகளையும், பாத்யம், ஆசமனீயம் ஆகியவைகளை
அளித்தும், தங்களுடைய தரிசனத்தாலும், என்னை கௌரவித்து விட்டீர்கள். இனி நான்
புறப்படுகிறேன். உங்களுக்கு என் வணக்கங்கள். தாங்கள் என் மேல் நட்பு பாராட்ட
வேண்டும்.”
एवं ब्रुवन्तं राजानं
वसिष्ठ:पुनरेव हि।
न्यमन्त्रयत धर्मात्मा पुन:पुनरुदारधी:।।1.52.18।।
இவ்வாறு கூறிய
விஸ்வாமித்திர மன்னரிடம் தர்மாத்மாவான வசிஷ்டர் தான் அளிக்கப் போகும்
விருந்தோம்பலை ஏற்கும் படி மீண்டும், மீண்டும் வேண்டிக் கொண்டார்.
बाढमित्येव गाधेयो
वसिष्ठं प्रत्युवाच ह।
यथा प्रियं भगवतस्तथाऽस्तु मुनिपुङ्गव।।1.52.19।।
காதியின் புதல்வரான
விஸ்வாமித்திரர் வசிஷ்டரைப் பார்த்து, “முனி புங்கவரே! அப்படியே ஆகட்டும், தங்கள்
விருப்பம் போலச் செய்யுங்கள்” என்று கூறினார்.
एवमुक्तो महातेजा
वसिष्ठो जपतां वर:।
आजुहाव तत: प्रीत: कल्माषीं धूतकल्मष:।।1.52.20।।
மகாதேஜஸ் உடையவரும்,
தவஸ்ரேஷ்டரும், பாவங்களற்றவருமான வசிஷ்டர் இந்த பதிலால் மகிழ்ந்து காமதேனுவை
அழைத்தார்.
एह्येहि शबले क्षिप्रं
श्रृणु चापि वचो मम।
सबलस्यास्य राजर्षे:कर्तुं व्यवसितोऽस्म्यहम्।।1.52.21।।
भोजनेन महार्हेण सत्कारं संविधत्स्व मे।
“சபலையே! (
காமதேனுவுக்கு உள்ள பல பெயர்களில், சபலை என்பதும் ஒன்று) சீக்கிரம் வா! நான்
சொல்வதைக்கேள்! நான் இந்த ராஜரிஷிக்கும் அவருடைய சேனைக்கும் மிக உயர்ந்த உணவு
அளித்து உபசரிக்க விரும்புகிறேன். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாயாக!”
यस्य यस्य यथाकामं
षड्रसेष्वभिपूजितम्।
तत्सर्वं कामधुक्क्षिप्रमभिवर्ष कृते मम।।1.52.22।।
“யார் யாருக்கு என்ன
வேண்டுமோ, அதன் படி அறுசுவை உணவை விரைவில் கொடுப்பாயாக!”
रसेनान्नेन पानेन
लेह्यचोष्येण संयुतम्।
अन्नानां निचयं सर्वं सृजस्व शबले त्वर।।1.52.23।।
“சபலையே! திரவங்களும்,
திட உணவுகளும் கொண்ட, குடிக்கக்கூடிய, கடித்து உண்ணக்கூடிய, நாவினால் நக்கி
உண்ணக்கூடிய உறிஞ்சி உண்ணக்கூடிய, எல்லா வகையான உணவுகளையும் விரைவில் உண்டாக்கிக்
கொடுப்பாயாக!”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्विपञ्चाशस्सर्ग:।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பத்திரண்டாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment