ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 54
( விஸ்வாமித்திரர் பலவந்தமாகக் காமதேனுவை எடுத்துச் செல்ல
முயற்சிக்கிறார். காமதேனு பெரிய படையை உற்பத்தி செய்கிறது. நடக்கும் போரில் விஸ்வாமித்திரருடைய
படைவீரர்கள் கொல்லப்படுகிறார்கள்.)
कामधेनुं वसिष्ठोऽपि यदा
न त्यज्यते मुनि:।
तदास्य शबलां राम विश्वामित्रोऽन्वकर्षत।।1.54.1।।
“ராமரே! காமதேனுவை
அழைத்துச் செல்ல வசிஷ்டர் அனுமதி அளிக்காததால், விஸ்வாமித்திரர் பலவந்தமாக சபலையைப்
பிடித்திழுத்தார்.
नीयमाना तु शबला राम
राज्ञा महात्मना।
दु:खिता चिन्तयामास रुदन्ती शोककर्शिता।।1.54.2।।
ராமா!
விஸ்வாமித்திரரால் அவ்வாறு அழைத்துச் செல்லப்படும் பொழுது, மிகவும்
வருத்தத்துடனும், சோகத்துடனும் அழுது கொண்டே சபலை யோசித்தாள்.
परित्यक्ता वसिष्ठेन
किमहं सुमहात्मना।
याहं राजभटैर्दीना ह्रियेय भृशदु:खिता।।1.54.3।।
“நான் இவ்வாறு அரசரின்
சேவகர்களால் பரிதாபமான நிலையில் அழைத்துச் செல்லப் படுகிறேனே! மகாத்மாவான வசிஷ்டர்
என்னைக் கைவிட்டு விட்டாரா?”
किं मयाऽपकृतं तस्य
महर्षेर्भावितात्मन:।
यन्मामनागसं भक्तामिष्टां त्यजति धार्मिक:।।1.54.4।।
ஒரு குற்றமும்
அறியாமல், மகரிஷியின் மேல் பக்தியுடனும் அன்புடனும் இருந்த என்னைக் கைவிடும்
அளவுக்கு, நான் தார்மீகரும், தூய்மையானவருமான மகரிஷிக்கு ஏதாவது தீங்கிழைத்து விட்டேனா?
इति सा चिन्तयित्वा तु विनिश्श्वस्य पुन:पुन:।
निर्धूय तांस्तदा भृत्यान् शतशश्शत्रुसूदन ।
जगामानिलवेगेन पादमूलं महात्मन:।।1.54.5।।
எதிரிகளை அழிக்கும் ராமரே!
இவ்வாறு யோசித்துக்கொண்டு, மீண்டும், மீண்டும் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த சபலை,
தன்னைப் பிடித்திழுத்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சேவகர்களை உதறி விட்டு
காற்றின் வேகத்தில் ஓடி வசிஷ்டரின் பாதங்களைச் சரணடைந்தாள்.
शबला सा रुदन्ती च
क्रोशन्ती चेदमब्रवीत्।
वसिष्ठस्याग्रतस्स्थित्वा मेघदुन्दुभिराविणी।।1.54.6।।
அழுது கொண்டும், இடி
போலும், துந்துபி போலும் ஒலி எழுப்பிக்கொண்டும் சபலை, வசிஷ்டரிடம் கூறினாள்:
भगवन् किं परित्यक्ता
त्वयाऽहं ब्रह्मणस्सुत।
यस्माद्राजभृता मां हि नयन्ते त्वत्सकाशत:।।1.54.7।।
“பிரம்மாவின்
புத்திரரே! தாங்கள் ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்? என்னை எதற்காக அரச
சேவகர்கள் உங்களிடம் இருந்து இழுத்துச் செல்கிறார்கள்?”
एवमुक्तस्तु
ब्रह्मर्षिरिदं वचनमब्रवीत्।
शोकसन्तप्तहृदयां स्वसारमिव दु:खिताम्।।1.54.8।।
சபலை இவ்வாறு கூறியதைக்
கேட்ட வசிஷ்டர், துயரத்தில் இருக்கும் சகோதரியிடம் சொல்வதைப் போலப் பேசினார்:
न त्वां त्यजामि शबले
नापि मेऽपकृतं त्वया।
एष त्वां नयते राजा बलोन्मत्तो महाबल:।।1.54.9।।
“சபலையே! நான் உன்னைக் கை விடவில்லை. நீ எந்தக் குற்றமும் செய்யவில்லை. வலிமை
நிறைந்த அரசர் உன்னை என்னிடம் இருந்து பலவந்தமாக அழைத்துச் செல்கிறார்.
न हि तुल्यं बलं मह्यं
राजा त्वद्य विशेषत:।
बली राजा क्षत्रियश्च पृथिव्या: पतिरेव च।।1.54.10।।
அவருக்குச் சமமான வலிமை
என்னிடத்தில் இல்லை. அவர் அரசர், வீரர், சக்தி மிகுந்தவர்; இந்த உலகத்தின் தலைவர்.
इयमक्षौहिणी पूर्णा
सवाजिरथसङ्कुला।
हस्तिध्वजसमाकीर्णा तेनासौ बलवत्तर:।।1.54.11।।
குதிரைகளும்,
தேர்களும், யானைகளும், கொடிகளும் நிறைந்த அக்ஷௌஹிணி அளவு சேனையை உடையவர் அவர்.
என்னைக் காட்டிலும் வலிமை மிகுந்தவர்.
एवमुक्ता वसिष्ठेन
प्रत्युवाच विनीतवत्।
वचनं वचनज्ञा सा ब्रह्मर्षिममितप्रभम्।।1.54.12।।
பிரம்மரிஷியான வசிஷ்டர்
கூறிய இந்தச் சொற்களைக் கேட்டு, அளவற்ற வலிமை உடைய சபலை, மிகவும் பணிவுடன்,
இவ்வாறு கூறினாள்:
न बलं
क्षत्रियस्याहुर्ब्राह्मणो बलवत्तर:।
ब्रह्मन् ब्रह्मबलं दिव्यं क्षत्रात्तु बलवत्तरम्।।1.54.13।।
“அந்தணருள் சிறந்தவரே!
க்ஷத்திரியர்களின் வலிமையைப் பற்றிப் பேசாதீர்கள். அந்தணரின் வலிமை
க்ஷத்திரியர்களின் வலிமையை விடப் பெரியது; தெய்வீகமானது.
अप्रमेयबलं तुभ्यं न
त्वया बलवत्तर:।
विश्वामित्रो महावीर्यस्तेज स्तव दुरासदम्।।1.54.14।।
தங்கள் வலிமை
அளவிடமுடியாதது. மகாவீரரான விஸ்வாமித்திரர் தங்களை விட வலிமை நிறைந்தவர் அல்ல.
தங்களுடைய தேஜஸ் யாராலும் எட்ட முடியாதது.
नियुङ्क्ष्व मां महाभाग त्वद्ब्रह्मबलसम्भृताम्।
तस्य दर्पबलं यत्तन्नाशयामि दुरात्मन:।।1.54.15।।
மகா பாக்கியம் படைத்தவரே!
தங்களுடைய பிரம்ம சக்தி என்னிடம் உள்ளது. எனக்கு ஆணையிடுங்கள். தீய புத்தியும்
அகந்தையும் கொண்ட விஸ்வாமித்திரரை அழித்து விடுகிறேன்.
इत्युक्तस्तु तया राम
वसिष्ठ स्सुमहायशा:।
सृजस्वेति तदोवाच बलं परबलार्दनम्।।1.54.16।।
ராமரே! அதைக் கேட்ட
வசிஷ்டர் சபலையிடம் கூறினார்: “எதிரிகளை நசுக்கக்கூடிய பலமுள்ள படையை உற்பத்தி
செய்வாயாக!”
तस्य तद्वचनं श्रुत्वा
सुरभिस्साऽसृजत्तदा।।1.54.17।।
तस्या हुम्भारवोत्सृष्टा: पप्लवाश्शतशो नृप।
नाशयन्ति बलं सर्वं विश्वामित्रस्य पश्यत:।।1.54.18।।
வசிஷ்டருடைய அந்த
வார்த்தைகளைக் கேட்டதும் சபலை ஒரு படையையே உற்பத்தி செய்தாள். அவள் எழுப்பிய
ஒலியில் இருந்து நூற்றுக்கணக்கான பப்லவர்கள் தோன்றி, விஸ்வாமித்திரரின் சேனை
முழுவதையும் அழித்தார்கள்.
बलं भग्नं ततो दृष्ट्वा
रथेनाक्रम्य कौशिक:।
स राजा परमक्रुद्धो रोषविस्फारितेक्षण:।
पप्लवान्नाशयामास शस्त्रैरुच्चावचैरपि।।1.54.19।।
தனது சேனை முழுவதும்
இவ்வாறு அழிந்ததைக் கண்ட விஸ்வாமித்திரர் மிகுந்த கோபத்தினால் கண்கள் விரியத் தன்
தேரில் அமர்ந்து கொண்டு பல விதமான அஸ்திரங்களால் அந்தப் பப்லவர்களை அழித்தார்.
विश्वामित्रार्दितान् दृष्ट्वा
पप्लवाञ्छतशस्तदा।
भूय एवासृजत्कोपाच्छकान् यवनमिश्रितान्।।1.54.20।।
விஸ்வாமித்திரரின்
அஸ்திரங்களால் நூற்றுக்கணக்கான பப்லவர்கள் மடிந்ததைக் கண்ட சபலை, மிகுந்த
சினத்துடன், யவனர்களையும் சகர்களையும் உற்பத்தி செய்தாள்.
तैरासीत् संवृता भूमि
श्शकैर्यवनमिश्रितै:।
प्रभावद्भिर्महावीर्यैर्हेमकिञ्जल्कसन्निभै:।।1.54.21।।
மிகுந்த ஒளியுடன் கூடி,
சண்பகமலரின் நடுவில் இருக்கும் குச்சு போன்று காணப்பட்ட, மகா வீரர்களான அந்த
யவனர்களும் சகர்களும் பூமி முழுவதும் நிறைந்து விட்டார்கள்.
दीर्घासिपट्टिशधरैःहेमवर्णाम्बरावृतै:।
निर्दग्धं तद्बलं सर्वं प्रदीप्तैरिव पावकै:।।1.54.22।।
நீண்ட வாட்களையும்,
ஈட்டிகளையும் ஏந்திக்கொண்டு, மஞ்சள் ஆடை உடுத்துக்கொண்டிருந்த அவர்கள், எரிந்து
கொண்டிருக்கும் நெருப்பு போல, எதிரிகளின் படை முழுவதையும் அழித்தார்கள்.
ततोऽस्त्राणि महातेजा
विश्वामित्रो मुमोच ह।
तैस्तैर्यवनकाम्भोजा: पप्लवाश्चाकुलीकृता:।।1.54.23।।
பின்னர், மகாதேஜஸ் உடைய
விஸ்வாமித்திரர் விடுவித்த அஸ்திரங்களால், யவனர்களும், காம்போஜர்களும்,
பப்லவர்களும் சிதறடிக்கப் பட்டார்கள்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे चतुष्पञ्चाशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பத்து
நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment