ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 55
(விஸ்வமித்திரருடைய
புதல்வர்களும், படை வீரர்களும் போரில் மடிகிறார்கள். விஸ்வாமித்திரர் தவம் செய்து
சிவ பெருமானை மகிழ்வித்துத் தெய்வீகமான அஸ்திரங்களைப் பெறுகிறார்.)
ततस्तानाकुलान् दृष्ट्वा विश्वामित्रास्त्रमोहितान्।
वसिष्ठश्चोदयामास कामधुक् सृज योगत:।।1.55.1।।
விஸ்வாமித்திரரின்
ஆயுதங்களால் செயலிழந்த தங்கள் படை வீரர்களைப் பார்த்த வசிஷ்டர் காமதேனுவிடம்,
இன்னும் அதிகமான படையை அவளது யோகசக்தியால் உற்பத்தி செய்யும்படி ஆணையிட்டார்.
तस्याहुम्भारवाज्जाता:
काम्भोजा रविसन्निभा:।
ऊधसस्त्वथ सञ्जाता: पप्लवाश्शस्त्रपाणय:।।1.55.2।।
योनिदेशाच्च यवनाश्शकृद्देशाच्छका स्तथा।
रोमकूपेषु च म्लेच्छा हारीतास्सकिरातका:।।1.55.3।।
அவளுடைய ‘ஹும்பா’ என்ற
ஓசையில் இருந்து சூரியனுக்கு நிகரான பிரகாசமுள்ள காம்போஜர்களும், அவளுடைய
மடியிலிருந்து ஆயுதங்களைக் கையில் ஏந்திய பப்லவர்களும், அவளுடைய யோனியில் இருந்து
யவனர்களும், அவளுடைய மலத்துவாரத்திலிருந்து சகர்களும், அவளுடைய ரோமக்
கால்களிலிருந்து மிலேச்சர்களும், கிராதர்களும் தோன்றினார்கள்.
तैस्तैर्निषूदितं सर्वं
विश्वामित्रस्य तत्क्षणात्।
सपदातिगजं साश्वं सरथं रघुनन्दन।।1.55.4।।
ரகு நந்தனரே! அந்த
வீரர்களால் விஸ்வாமித்திரருடைய காலாட்படை, யானைப்படை, குதிரைப் படை, தேர்ப்படை
ஆகிய அனைத்தும் உடனடியாக அழிக்கப்பட்டன.
दृष्ट्वा निषूदितं
सैन्यं वसिष्ठेन महात्मना।
विश्वामित्रसुतानां च शतं नानाविधायुधम्।।1.55.5।।
अभ्यधावत्सुसङ्कृद्धं वसिष्ठं जपतां वरम्।
हुङ्कारेणैव तान् सर्वान् ददाह भगवान् ऋषि:।।1.55.6।।
வசிஷ்டரால் தங்கள்
படையனைத்தும் அழிந்ததைக் கண்ட விஸ்வாமித்திரரின் நூறு புதல்வர்கள் மிகுந்த கோபம்
கொண்டு, பல விதமான ஆயுதங்களுடன் தவத்தில் சிறந்த வசிஷ்டர் மேல் பாய்ந்தார்கள்.
வசிஷ்டர் தனது ஹூங்காரத்தினாலேயே அவர்கள் அனைவரையும் எரித்து விட்டார்.
ते साश्वरथपादाता
वसिष्ठेन महात्मना।
भस्मीकृता मुहूर्तेन विश्वामित्रसुता स्तदा।।1.55.7।।
விஸ்வாமித்திரரின் நூறு
புதல்வர்களையும், அவர்களுடைய குதிரைகளுடனும், தேர்களுடனும், படைவீரர்களுடனும்,
வசிஷ்டர் ஒரு நொடியில் எரித்துச் சாம்பலாக்கி விட்டார்.
दृष्ट्वा विनाशितान्
पुत्रान् बलं च सुमहायशा:।
सव्रीडश्चिन्तयाऽविष्टो विश्वामित्रोऽभवत्तदा।।1.55.8।।
தன்னுடைய
புதல்வர்களும், தனது படைவீரர்களும் அழிந்ததைக் கண்ட விஸ்வாமித்திரர் மிகுந்த
அவமானமும் கவலையும் கொண்டார்.
समुद्र इव निर्वेगो
भग्नदंष्ट्र इवोरग:।
उपरक्त इवादित्यस्सद्यो निष्प्रभतां गत:।।1.55.9।।
விஸ்வாமித்திரர், அலைகளை
இழந்த கடல் போலவும், விஷப்பற்களை இழந்த நாகம் போலவும், ராகுவால் பீடிக்கப்பட்ட
சூரியன் போலவும், திடீரென்று தன் ஒளியை இழந்து காணப்பட்டார்.
हतपुत्रबलो दीनो
लूनपक्ष इव द्विज:।
हतदर्पो हतोत्साहो निर्वेदं समपद्यत।।1.55.10।।
தனது புதல்வர்களையும்,
படையையும் இழந்த விஸ்வாமித்திரர், இறக்கைகளை இழந்த பறவை போலத் தனது அகந்தை
அழிந்து, தனது தன்னம்பிக்கையை இழந்து ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தார்.
स पुत्रमेकं राज्याय
पालयेति नियुज्य च।
पृथिवीं क्षत्रधर्मेण वनमेवान्वपद्यत।।1.55.11।।
மீதியிருந்த ஒரு
புதல்வனிடம், க்ஷத்திரிய தர்மத்தின் படி ஆட்சி செய்யும் படி கூறி, அவனுக்கு
ராஜ்ஜியத்தை அளித்து விட்டுக் காட்டுக்குச் சென்று விட்டார்.
स गत्वा हिमवत्पार्श्वं
किन्नरोरगसेवितम्।
महादेवप्रसादार्थं तपस्तेपे महातपा:।।1.55.12।।
கின்னரர்களும்,
நாகர்களும் வாழும் இமயமலைச் சரிவை அடைந்து, மகாதேவரை மகிழ்விக்கும் பொருட்டுக்
கடுமையான தவத்தை மேற்கொண்டார்.
केनचित्त्वथ कालेन
देवेशो वृषभध्वज:।
दर्शयामास वरदो विश्वामित्रं महाबलम्।।1.55.13।।
சிறிது காலம் சென்ற
பின், வரங்களை வாரி வழங்கும் மகாதேவர் தனது விருஷபக்கொடியுடன், வலிமை நிறைந்த
விஸ்வாமித்திரருக்குக் காட்சி கொடுத்தார்.
किमर्थं तप्यसे राजन्
ब्रूहि यत्ते विवक्षितम्।
वरदोऽस्मि वरो यस्ते काङ्क्षितस्सोऽभिधीयताम्।।1.55.14।।
“அரசனே! எதற்காகத் தவம்
செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும் என்று சொல். நான் வேண்டிய வரங்களைத் தருபவன்.
உனது விருப்பம் என்னவென்று சொல்.”
एवमुक्तस्तु देवेन
विश्वामित्रो महातपा:।
प्रणिपत्य महादेवमिदं वचनमब्रवीत्।।1.55.15।।
மகாதேவர் இவ்வாறு
கூறியதும், கடுந்தவம் செய்த விஸ்வாமித்திரர் அவரை நமஸ்கரித்து இவ்வாறு கூறினார்:
यदि तुष्टो महादेव
धनुर्वेदो ममानघ।
साङ्गोपाङ्गोपनिषदस्सरहस्य: प्रदीयताम्।।1.55.16।।
“குற்றமற்ற மகாதேவரே!
தாங்கள் என் தவத்தால் மகிழ்ந்திருக்கிறீர்கள் என்றால், நான் தனுர்வேதத்தை (வில்
வித்தை) அதனுடைய ரகசியங்கள், அங்கங்கள், உபாங்கங்கள் மற்றும் உபனிஷதங்களுடன்
அறிந்து, அதில் நிபுணனாக வேண்டும்.”
यानि देवेषु चास्त्राणि
दानवेषु महर्षिषु।
गन्धर्वयक्षरक्षस्सु प्रतिभान्तु ममानघ।।1.55.17।।
தேவர்களுக்கும்,
தானவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், கந்தர்வர்களுக்கும், யக்ஷர்களுக்கும்,
ராக்ஷஸர்களுக்கும் என்னவெல்லாம் அஸ்திரங்கள் தெரியுமோ, அவையெல்லாம், எனக்கும்
தெரிய வேண்டும்.
तव प्रसादाद्भवतु
देवदेवममेप्सितम्।
एवमस्त्विति देवेशो वाक्यमुक्त्वा गतस्तदा।।1.55.18।।
தேவ தேவரே! தங்களுடைய
அருளால், எனது விருப்பம் நிறைவேற வேண்டும்”. மகாதேவர் அதைக் கேட்டு, “ அப்படியே
ஆகட்டும்” என்று அருளி விட்டு அங்கிருந்து மறைந்தார்.
प्राप्य चास्त्राणि
राजर्षिर्विश्वामित्रो महाबल:।
दर्पेण महता युक्तो दर्पपूर्णोऽभवत्तदा।।1.55.19।।
இப்படிப்பட்ட
அஸ்திரங்களைப் பெற்றதனால் அளப்பரிய வலிமையைப் பெற்ற ராஜரிஷி விஸ்வாமித்திரரின்,
அகந்தை மேலும் அதிகரித்தது.
विवर्धमानो वीर्येण
समुद्र इव पर्वणि।
हतमेव तदा मेने वसिष्ठमृषिसत्तमम्।।1.55.20।।
பௌர்ணமியின் போது
ஆர்ப்பரிக்கும் கடலைப் போல், தனது அளப்பரிய வலிமையால் அகந்தை கொண்டிருந்த
விஸ்வாமித்திரர், தவமுனிவர்களில் சிறந்த வசிஷ்டர் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டார்
(நிச்சயம் கொல்லப்பட்டு விடுவார்) என்றே நினைத்தார்.
ततो गत्वाऽऽश्रमपदं
मुमोचास्त्राणि पार्थिव:।
यैस्तत्तपोवनं सर्वं निर्दग्धं चास्त्रतेजसा।।1.55.21।।
அதன் பிறகு வசிஷ்டரின்
ஆசிரமத்துக்குச் சென்று, அங்கு, தான் புதிதாகப் பெற்ற அஸ்திரங்களைப்
பிரயோகித்தார். அவற்றின் ஆற்றலால் தவமுனிவர்கள் தவம் செய்து கொண்டிருந்த அந்த
ஆசிரமம் முழுவதும் எரிந்து விட்டது.
उदीर्यमाणमस्त्रं
तद्विश्वामित्रस्य धीमत:।
दृष्ट्वा विप्रद्रुतास्सर्वे मुनयश्शतशो दिश:।।1.55.22।।
விஸ்வாமித்திரர்
அஸ்திரங்களைப் பிரயோகிப்பதைக் கண்ட நூற்றுக்கணக்கான முனிவர்கள்,
எல்லாத்திசைகளிலும் தப்பி ஓடினார்கள்.
वसिष्ठस्य च ये
शिष्यास्तथैव मृगपक्षिण:।
विद्रवन्ति भयाद्भीता नानादिग्भ्यस्सहस्रश:।।1.55.23।।
வசிஷ்டரின் சீடர்களைப்
போலவே, அங்கிருந்த ஆயிரக்கணக்கான, விலங்குகளும், பறவைகளும், பயந்து போய் எல்லா
திசைகளிலும் ஓடியும், பறந்தும் தப்பிக்க முயன்றன.
वसिष्ठस्याश्रमपदं
शून्यमासीन्महात्मन:।
मुहूर्तमिव निश्शब्दमासीदिरिणसन्निभम्।।1.55.24।।
மகாத்மாவான வசிஷ்டரின்
ஆசிரமம், சிறிதே நேரத்தில் சூனியமாகி, சத்தமேயில்லாமல், ஒன்றும் விளையாத உவர்
நிலம் போல் மாறிவிட்டது.
वदतो वै वसिष्ठस्य मा
भैरिति मुहुर्मुहु:।
नाशयाम्यद्य गाधेयं नीहारमिव भास्कर:।।1.55.25।।
“பயப்படாதீர்கள்!
இப்பொழுதே காதியின் புதல்வரான விஸ்வாமித்திரரை சூரியன் பனியை அழிப்பது போல்
அழித்து விடுகிறேன்” என்று திரும்பத் திரும்ப வசிஷ்டர் உறுதி அளித்தும் அவர்கள்
பயந்து ஓடினார்கள்.
एवमुक्त्वा महातेजा
वसिष्ठो जपतां वर:।
विश्वामित्रं तदा वाक्यं सरोषमिदमब्रवीत्।।1.55.26।।
மகாதேஜஸ் உடைய வசிஷ்டர்
மிகுந்த கோபத்துடன் விஸ்வாமித்திரரிடம் கூறினார்:
आश्रमं चिरसम्वृद्धं
यद्विनाशितवानसि।
दुराचारोऽसि तन्मूढ तस्मात्त्वं न भविष्यसि।।1.55.27।।
“முட்டாளே! வெகு
காலமாகத் தொடர்ந்து வளர்ந்து இந்த நிலைக்கு உயர்ந்திருந்த இந்த ஆசிரமத்தை ஏன்
அழித்தாய்? இந்தத் தீய செயல் புரிந்த நீ வெகு காலம் வாழ மாட்டாய்.”
इत्युक्त्वा
परमक्रुद्धो दण्डमुद्यम्य सत्वर:।
विधूममिव कालाग्निं यमदण्डमिवापरम्।।1.55.28।।
உலகமெல்லாம் அழியும்
போது எழும் புகையில்லாத நெருப்பைப் போல், அளவுக்கு மீறிய கோபத்துடன், யமனுடைய
தண்டத்தைப் போல் இருந்த தனது தண்டத்தை வசிஷ்டர் கையில் எடுத்தார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे पञ्चपञ्चाशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பத்து
ஐந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment