ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 58
(வசிஷ்டரின்
புதல்வர்களால் சபிக்கப்பட்ட திரிசங்கு, விஸ்வாமித்திரரைச் சரணடைகிறார்.)
ततस्त्रिशङ्कोर्वचनं श्रुत्वा क्रोधसमन्वितम् ।
ऋषिपुत्रशतं राम राजानमिदमब्रवीत्।।1.58.1।।
“ராமரே! திரிசங்கு
மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட வசிஷ்டரின் நூறு புதல்வர்களும், மிகுந்த கோபம்
கொண்டு இவ்வாறு அரசனிடம் கூறினார்கள்:
प्रत्याख्यातो हि
दुर्बुद्धे गुरुणा सत्यवादिना।
तं कथं समतिक्रम्य शाखान्तरमुपेयिवान्।।1.58.2।।
“துர்புத்தி படைத்தவனே!
சத்யவாதியாகிய எங்கள் குரு செய்ய மறுத்த பின், அவரை மீறிக்கொண்டு, வெறும்
கிளைகளாகிய எங்களை, (அதே செயலைச் செய்யச் சொல்லி) எப்படி நீ கேட்கலாம்?
इक्ष्वाकूणां हि
सर्वेषां पुरोधा: परमो गुरु:।
न चातिक्रमितुं शक्यं वचनं सत्यवादिन:।।1.58.3।।
இக்ஷ்வாகு வம்சத்து
மன்னர்களுக்கெல்லாம், அவருடைய ப்ரோகிதர் தான் பரம குரு. சத்ய வாதியாகிய அவருடைய
சொல்லை மீறி எந்தச் செயலையும் செய்ய முடியாது. (செய்யக்கூடாது)
अशक्यमिति चोवाच
वसिष्ठो भगवानृषि:।
तं वयं वै समाहर्तुं क्रतुं शक्ता:कथं तव।।1.58.4।।
வசிஷ்ட முனிவரே, செய்ய
முடியாது என்று மறுத்து விட்ட வேள்வியை, எங்களால் எப்படிச் செய்ய முடியும்?
बालिशस्त्वं नरश्रेष्ठ
गम्यतां स्वपुरं पुन:।
याजने भगवाञ्छक्तस्त्रैलोक्यस्यापि पार्थिव।।1.58.5।।
अवमानं च तत्कर्तुं तस्य शक्ष्यामहे कथम्।
“மன்னனே! சிறு
பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாய்! உனது நகரத்துக்குத் திரும்பிச் செல். பூஜைக்குரிய
வசிஷ்டரி ஷியானவர் இந்த மூவுலகங்களிலும், யாருக்காக வேண்டுமானாலும் வேள்விகளைச்
செய்து கொடுக்க வல்லவர். அப்படியிருக்க, அவரை நாங்கள் எப்படி அவமானப் படுத்த
முடியும்?
तेषां तद्वचनं श्रुत्वा क्रोधपर्याकुलाक्षरम्।।1.58.6।।
स राजा पुनरेवैतानिदं वचनमब्रवीत्।
கடுங்கோபத்தினால்,
வார்த்தைகள் குழற, இவ்வாறு பேசிய வசிஷ்டரின் புதல்வர்களிடம் மன்னன் மீண்டும்
பேசினான்:
प्रत्याख्यातोऽस्मि
गुरुणा गुरुपुत्रैस्तथैव च।।1.58.7।।
अन्यां गतिं गमिष्यामि स्वस्ति वोऽस्तु तपोधना:।
“தவச்செல்வர்களே!
என்னுடைய குருவும், அவருடைய புதல்வர்களாகிய நீங்களும் (என் விருப்பத்தை நிறைவேற்ற)
மறுத்து விட்ட பின், இனி வேறு வழி தேடிப் போகிறேன். உங்களுக்கு நன்மை
உண்டாகட்டும்!”
ऋषिपुत्रास्तु
तच्छ्रुत्वा वाक्यं घोराभिसंहितम्।।1.58.8।।
शेपु: परमसङ्कृद्धाश्चण्डालत्वं गमिष्यसि।
மன்னனுடைய தீவிரத்தைக்
கண்ட குருபுத்திரர்கள் மிகுந்த கோபம் கொண்டு, “ நீ சண்டாளனாகக் கடவாய்!” என்று
சபித்தார்கள்.
एवमुक्त्वा महात्मनो
विविशुस्ते स्वमाश्रमम्।।1.58.9।।
अथ रात्र्यां व्यतीतायां राजा चण्डालतां गत:।
இவ்வாறு கூறி விட்டு,
அந்த மகாத்மாக்கள் தங்களுடைய ஆசிரமத்துக்குள் சென்று விட்டார்கள். அன்று இரவு
கழிந்தவுடன், மன்னன் சண்டாள உருவம் பெற்று விட்டான். ( சண்டாளன் என்பவன்,
சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வேலையைச் செய்பவன். சமூகத்தில் இழிவாகக்
கருதப்படுபவன்.)
नीलवस्त्रधरो नील: पुरुषो ध्वस्तमूर्धज:।।1.58.10।।
चित्यमाल्यानुलेपश्च आयसाभरणोऽभवत्।
மன்னன் கன்னங்கரேல்
என்ற நிறத்துடன், கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு, தலையெல்லாம் கலைந்து பரட்டையாக
இருக்க, உடலெல்லாம் சாம்பல் படர்ந்திருக்க, பிணங்களின் மேல் போட்டிருந்த மாலைகளை
அணிந்து கொண்டு, அழுக்குத் துணிகளுடன், இரும்பால் ஆன சங்கிலிகளை அணிந்து கொண்ட,
சண்டாளனாக மாறி விட்டான்.
तं दृष्टवा
मन्त्रिणस्सर्वे त्यज्य चण्डालरूपिणम्।।1.58.11।।
प्राद्रवन् सहिता राम पौरा येऽस्यानुगामिन:।
ராமரே! மன்னனை இந்த
உருவத்தில் பார்த்த அவனுடைய அமைச்சர்களும், குடிமக்களும், அவனைப் பின்பற்றுவோரும்
பயந்து ஓடி விட்டார்கள்.
एको हि राजा काकुत्स्थ जगाम परमात्मवान्।।1.58.12।।
दह्यमानो दिवारात्रं विश्वामित्रं तपोनिधिम्।
காகுஸ்தரே! பகலும்
இரவும், துன்பம் அவனை எரிக்க, அந்த மன்னன் தவத்தில் சிறந்த விஸ்வாமித்திரரிடம்
சென்றான்.
विश्वामित्रस्तु तं
दृष्ट्वा राजानं विफलीकृतम्।
चण्डालरूपिणं राम मुनि: कारुण्यमागत:।।1.58.13।।
ராமரே! ஒன்றுக்கும்
உதவாத சண்டாள உருவத்தில் இருந்த திரிசங்கு மன்னனைக்கண்ட விஸ்வாமித்திரருக்கு அவன்
மேல் இரக்கம் உண்டாயிற்று.
कारुण्यात्स महातेजा
वाक्यं परमधार्मिक:।
इदं जगाद भद्रं ते राजानं घोररूपिणम्।।1.58.14।।
மகாதேஜஸ் உடையவரும், பரம
தார்மீகரும் ஆன விஸ்வாமித்திரர், அந்த மன்னனின் கோரமான உருவத்தைப் பார்த்து, இரக்கம்
கொண்டு, அவனிடம் சொன்னார்: “உனக்கு நன்மை உண்டாகட்டும்!”
किमागमनकार्यं ते
राजपुत्र महाबल।
अयोध्याधिपते वीर शापाच्चण्डालतां गत:।।1.58.15।।
“அயோத்தியின் தலைவனாகிய
வலிமை மிக்க மன்னனே! யாருடைய சாபத்தால் இத்தகைய சண்டாள உருவத்தை அடைந்தாய்?”
अथ तद्वाक्यमाज्ञाय
राजा चण्डालतां गत:।
अब्रवीत्प्राञ्जलिर्वाक्यं वाक्यज्ञो वाक्यकोविदम्।।1.58.16।।
சண்டாள உருவம்
பெற்றிருந்தாலும், அழகாகப் பேசக்கூடிய திரிசங்கு மன்னன், மிகத்திறமையாகப்
பேசக்கூடிய விஸ்வாமித்திரரிடம் இவ்வாறு கூறினான்:
प्रत्याख्यातोऽस्मि
गुरुणा गुरुपुत्रैस्तथैव च।
अनवाप्यैव तं कामं मया प्राप्तो विपर्यय:।।1.58.17।।
“என்னுடைய
குருவினாலும், குருவின் புதல்வர்களாலும், என் விருப்பம் நிராகரிக்கப்பட்டு, எனது
ஆசையும் நிறைவேறாமல், இப்படி கஷ்டத்தில் சிக்கிக்கொண்டேன்.
सशरीरो दिवं यायामिति
मे सौम्यदर्शनम्।
मया चेष्टं क्रतुशतं तच्च नाऽवाप्यते फलम्।।1.58.18।।
இனிமையானவரே! என் உடலுடனேயே
ஸ்வர்க்கத்துக்குப் போகவேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக நூறு வேள்விகளைச்
செய்தேன். ஆனாலும், எனது விருப்பம் நிறைவேறவில்லை.
अनृतं नोक्तपूर्वं मे न
च वक्ष्ये कदाचन।
कृच्छ्रेष्वपि गत स्सौम्य क्षत्रधर्मेण ते शपे।।1.58.19।।
இனிய குணம் கொண்ட ரிஷியே!
நான் ஒரு போதும் பொய் சொன்னதில்லை; ஒரு காலத்திலும் பொய் சொல்லவும் மாட்டேன். என்
க்ஷத்திரிய தர்மத்தின் மீது ஆணை!
यज्ञैर्बहुविधैरिष्टं
प्रजा धर्मेण पालिता:।।1.58.20।।
गुरवश्च महात्मान श्शीलवृत्तेन तोषिता:।
பல விதமான வேள்விகளைச்
செய்து, என் இஷ்டதெய்வங்களை மகிழ்வித்தும், தர்மவழியில் என் குடிமக்களைப்
பாதுகாத்தும், என் குணத்தாலும், நடத்தையாலும், பெரியவர்களை மகிழ்வித்தும்
வந்திருக்கிறேன்.
धर्मे प्रयतमानस्य
यज्ञं चाहर्तुमिच्छत:।।1.58.21।।
परितोषं न गच्छन्ति गुरवो मुनिपुङ्गव ।
முனி புங்கவரே! நான்
என்னுடைய கடமையைச் செய்ய முயற்சிக்கிறேன். ஒரு வேள்வி நடத்த விரும்புகிறேன்.
ஆனால், எனது குருமார்களுக்கு அது பிடிக்கவில்லை.
दैवमेव परं मन्ये
पौरुषं तु निरर्थकम्।।1.58.22।।
दैवेनाक्रम्यते सर्वं दैवं हि परमा गति:।
விதி தான் வலியது என்று
கருதுகிறேன். மனிதனின் முயற்சி வீணாகத்தான் போகிறது. அனைத்தும் விதியால் தான்
கட்டுப்படுத்தப் படுகிறது. விதி தான் ஒருவருக்கு ஒரே கதி!”
तस्य मे परमार्तस्य
प्रसादमभिकाङ्क्षत:।।1.58.23।।
कर्तुमर्हसि भद्रं ते दैवोपहतकर्मण:।
விதி வசத்தால் என்
முயற்சிகள் வீணாகிப் போய், மிகுந்த துயரத்தில் இருக்கும் நான், தங்களிடம் ஒரு உதவி
வேண்டுகிறேன். தாங்கள் தான் அதை எனக்குக் கொடுக்க முடியும். தங்களுக்கு நன்மை
உண்டாகட்டும்!”
नान्यां गतिं गमिष्यामि
नान्यश्शरणमस्ति मे।।1.58.24।।
दैवं पुरुषकारेण निवर्तयितुमर्हसि।।
எனக்கு வேறு புகல்
கிடையாது; என்னைக் காப்பாற்றுவார் வேறு யாரும் இல்லை. விதிவசத்தால் எனக்கு ஏற்பட்ட
துயரங்களை, மனித முயற்சியால் மாற்றும் சக்தியுடையவர் நீங்கள் தான்!”
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे अष्टपञ्चाशस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் ஐம்பத்தெட்டாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment