Friday, 19 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 59

(விஸ்வாமித்திரர் ரிஷிகளை வேள்வி செய்ய அழைக்கிறார். வசிஷ்டரின் புதல்வர்களுக்கும், மஹோதயருக்கும் சாபம் கொடுக்கிறார்.)

उक्तवाक्यं तु राजानं कृपया कुशिकात्मज:।
अब्रवीन्मधुरं वाक्यं साक्षाच्चण्डालरूपिणम्।।1.59.1।।

சண்டாள உருவத்தில் காணப்பட்ட மன்னன் கூறிய (திரிசங்கு) சொற்களைக் கேட்ட விஸ்வாமித்திரர் மன்னனிடம் கூறினார்:

 

ऐक्ष्वाक स्वागतं वत्स जानामि त्वां सुधार्मिकम् ।
शरणं ते भविष्यामि मा भैषीर्नृपपुङ्गव।।1.59.2।।

“இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவனே! குழந்தாய்! உனக்கு நல்வரவு! நீ சிறந்த தர்மவான் என்பதை நான் அறிவேன். மன்னருள் சிறந்தவனே! பயப்படாதே! நான் உனக்கு அடைக்கலம் அளிக்கிறேன்.

 

अहमामन्त्रये सर्वान्महर्षीन्पुण्यकर्मण:।
यज्ञसाह्यकरान् राजन् ततो यक्ष्यसि निर्वृत:।।1.59.3।।

மன்னனே! இந்தப் புண்ணியச் செயலான வேள்வியைச் செய்வதில் உதவி செய்வதற்கு,  நான் அனைத்து மகரிஷிகளையும் அழைக்கப் போகிறேன். நீ நிம்மதியாக வேள்வியை நிறைவேற்றலாம்.

 

गुरुशापकृतं रूपं यदिदं त्वयि वर्तते ।
अनेन सह रूपेण सशरीरो गमिष्यसि।।1.59.4।।

குருவின் சாபத்தால் நீ இப்போது பெற்றிருக்கும் இந்த உருவத்துடனேயே, நீ ஸ்வர்க்கம் போவாய்.

 

हस्तप्राप्तमहं मन्ये स्वर्गं तव नराधिप।
यस्त्वं कौशिकमागम्य शरण्यं शरणागत:।।1.59.5।।

அரசே! தன்னைச் சரணடைந்தவர்களைக் காப்பாற்றும் விஸ்வாமித்திரனைச் சரணடைந்து விட்ட உனக்கு, ஸ்வர்க்கம் கைக்கு எட்டி விட்டது என்றே நீ கருதலாம்.

 

एवमुक्त्वा महातेजा: पुत्रान् परमधार्मिकान्।
व्यादिदेश महाप्राज्ञान् यज्ञसम्भारकारणात्।।1.59.6।।

மகா தேஜஸ் உடைய விஸ்வாமித்திரர், பரம தார்மீகர்களும், சிறந்த புத்திசாலிகளுமான தனது புதல்வர்களிடம், வேள்விக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் படி ஆணையிட்டார்.

 

सर्वान् शिष्यान् समाहूय वाक्यमेतदुवाच ह।

सर्वानृषिगणान्वत्सा आनयध्वं ममाज्ञया।
सशिष्यसुहृदश्चैव सर्त्विज स्सबहुश्रुतान्।।1.59.7।।

தனது சீடர்கள் அனைவரையும் அழைத்து இவ்வாறு கூறினார்: “குழந்தைகளே! வேள்விக்குத் தலைமை ஏற்று நடத்தக் கூடிய புரோகிதர்களையும், நன்கு கற்றறிந்த அறிஞர்களையும், அவர்களுடைய சீடர்கள் மற்றும் நண்பர்களுடன் இங்கே அழைத்து வாருங்கள். இது என்னுடைய ஆணை.

 

यदन्यो वचनं ब्रूयान्मद्वाक्यबलचोदित:।
तत्सर्वमखिलेनोक्तं ममाख्येयमनादृतम्।।1.59.8।।

(நீங்கள் அவ்வாறு அழைக்கும் போது) அப்போது, யாராவது மரியாதைக்குறைவாக, ஏதாவது பேசினார்கள் என்றால், அதையும், அப்படியே எனக்குச் சொல்ல வேண்டும். “

 

तस्य तद्वचनं श्रुत्वा दिशो जग्मुस्तदाज्ञया।
आजग्मुरथ देशेभ्य स्सर्वेभ्यो ब्रह्मवादिन:।।1.59.9।।

விஸ்வாமித்திரரின் ஆணைப்படி, அவருடைய சீடர்கள் பல திசைகளிலும் பயணப்பட்டார்கள். அதன் விளைவாக எல்லா தேசங்களில் இருந்தும் வேதங்களை அறிந்த பிரம்மவாதிகள் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

 

ते च शिष्या: समागम्य मुनिं ज्वलिततेजसम्।
ऊचुश्चवचनं सर्वे सर्वेषां ब्रह्मवादिनाम्।।1.59.10।।

சீடர்கள் அனைவரும் திரும்பி வந்து தேஜஸ்ஸுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் விஸ்வாமித்திரரிடம் அவர்கள் சந்தித்த பிரம்ம வாதிகள் கூறியவற்றைக் கூறினார்கள்.

 

श्रुत्वा ते वचनं सर्वे समायान्ति द्विजातय:।
सर्वदेशेषु चागच्छन् वर्जयित्वा महोदयम्।।1.59.11।।

“தங்களுடைய சொற்களைக் கேட்டு, அனைத்து தேசத்தில் இருந்தும் அந்தணர்கள் வந்து விட்டார்கள். மஹோதயர் மட்டும் வரவில்லை.

 

वासिष्ठं तच्छतं सर्वं क्रोधपर्याकुलाक्षरम्।
यदाह वचनं सर्वं शृणु त्वं मुनिपुङ्गव।।1.59.12।।

முனி புங்கவரே! வசிஷ்டரின் நூறு புதல்வர்களும் கோபத்துடன் கூறிய வார்த்தைகளைக் கேளுங்கள்!

 

क्षत्रियो याजको यस्य चण्डालस्य विशेषत:।
कथं सदसि भोक्तारो हविस्तस्य सुरर्षय:।।1.59.13।।

ஒரு க்ஷத்திரியர், அதுவும், ஒரு சண்டாளனுக்காக,  வேள்விக்குப் புரோகிதராகச் செயல்படும் போது, அந்த வேள்வியில் அளிக்கப்படும் ஹவிஸைத் தேவர்களும், ரிஷிகளும் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

 

ब्राह्मणा वा महात्मानो भुक्त्वा चण्डालभोजनम्।
कथं स्वर्गं गमिष्यन्ति विश्वामित्रेण पालिता:।।1.59.14।।

விஸ்வாமித்திரருடன் சேர்ந்து, ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்ட பின் அந்த அந்தணர்கள் எவ்வாறு ஸ்வர்க்கத்துக்குப் போவார்கள்?

 

एतद्वचननैष्ठुर्यमूचु स्संरक्तलोचना:।
वासिष्ठा मुनिशार्दूल सर्वे ते समहोदया:।।1.59.15।।

முனிவருள் சிறந்தவரே! வசிஷ்டருடைய புதல்வர்கள் அனைவரும், மஹோதயருடன் சேர்ந்து, கோபத்தினால் சிவந்த கண்களுடன், இப்படிப்பட்ட கடுமையான வார்த்தைகளைக் கூறினார்கள்.”

 

तेषां तद्वचनं श्रुत्वा सर्वेषां मुनिपुङ्गव:।
क्रोधसंरक्तनयन स्सरोषमिदमब्रवीत्।।1.59.16।।

இந்த வார்த்தைகளைக் கேட்ட விஸ்வாமித்திரர், கோபத்தில் கண்கள் சிவக்க, இவ்வாறு கூறினார்:

 

ये दूषयन्त्यदुष्टं मां तप उग्रं समास्थितम्।
भस्मीभूता दुरात्मानो भविष्यन्ति न संशय:।।1.59.17।।

“நான் குற்றமற்றவன்; கடுமையான தவம் செய்தவன். இப்படிப்பட்ட என்னைப் பற்றித் தவறாகப் பேசிய வசிஷ்டரின் புதல்வர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாவார்கள்.

 

अद्य ते कालपाशेन नीता वैवस्वतक्षयम्।
सप्तजातिशतान्येव मृतपस्सन्तु सर्वश:।।1.59.18।।

இன்றே, யமனுடைய பாசத்தால் இழுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் யமலோகத்துக்குக் கொண்டு வரப்படுவார்கள். அதன் பின் எழுநூறு முறை, பிணத்தை உண்பவர்களாகப் பிறப்பார்கள்.

 

श्वमांसनियताहारा मुष्टिका नाम निर्घृणा:।
विकृताश्च विरूपाश्च लोकाननुचरन्त्विमान्।।1.59.19।।

இரக்கம் இல்லாத முஷ்டிகர்களாகப் பிறந்து, நாய்களின் மாமிசத்தைத் தின்று, அவலட்சணமான உருவத்துடன், இந்த உலகில் சுற்றித் திரிவார்கள்.

 

महोदयस्तु दुर्बुद्धिर्मामदूष्यं ह्यदूषयत्।
दूषित स्सर्वलोकेषु निषादत्वं गमिष्यति।।1.59.20।।

தீயவனான மஹோதயன், என்னைப் போலக் குற்றமற்ற ரிஷியை தூஷித்ததால், நிஷாதர்கள் குலத்தில் பிறந்து எல்லாராலும், இழிவாக நடத்தப் படுவான்.

 

प्राणातिपातनिरतो निरनुक्रोशतां गत:।
दीर्घकालं मम क्रोधाद्दुर्गतिं वर्तयिष्यति।।1.59.21।।

என்னுடைய கோபத்துக்கு ஆளானதால், அந்த மஹோதயன், இரக்கமில்லாதவனாகவும், பிற உயிர்களை வதைப்பவனாகவும், நீண்ட காலம் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்வான்.

 

एतावदुक्त्वा वचनं विश्वामित्रो महातपा:।
विरराम महातेजा ऋषिमध्ये महामुनि:।।1.59.22।।

மகா தபஸ்வியான விஸ்வாமித்திரர் அங்கிருந்த ரிஷிகளின் மத்தியில் இவ்வாறு பேசி விட்டு அமைதியாகி விட்டார்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकोनषष्टितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  ஐம்பத்தொன்பதாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...