Saturday, 20 January 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

பால காண்டம்

ஸர்க்கம் – 61

(இந்திரன் அம்பரீசனின் வேள்விக் குதிரையைத் திருடிக் கொள்கிறான். ருசீக ரிஷியின் நடு மகன் சுனச்சேபன், தானே யாகப்பசுவாக, பலியாவதற்குச் சம்மதிக்கிறான். பின்னர், விஸ்வாமித்திரரிடம் வேண்டி, அவருடைய உதவியால், பலியாகாமல் தப்புகிறான்.)


विश्वामित्रो महात्माथ प्रस्थितान् प्रेक्ष्य तानृषीन्।
अब्रवीन्नरशार्दूलस्सर्वांस्तान्वनवासिन:।।1.61.1।।

“மனிதருள் சிறந்தவனே! மகாத்மா விஸ்வாமித்திரர், திரும்பிச் செல்லும் முனிவர்களைப் பார்த்துக் கூறினார்:

 

महान्विघ्न: प्रवृत्तोऽयं दक्षिणामास्थितो दिशम्।
दिशमन्यां प्रपत्स्यामस्तत्र तप्स्यामहे तप:।।1.61.2।।

“தெற்குத்திசையில் உள்ள இந்தப் பகுதியில் பல தடைகள் ஏற்பட்டன. ஆகவே, வேறொரு திசைக்குச் சென்று அங்கு தவம் செய்யலாம்.

 

पश्चिमायां विशालायां पुष्करेषु महात्मन:।
सुखं तपश्चरिष्याम: परं तद्धि तपोवनम्।।1.61.3।।

மகாத்மாக்களான ரிஷிகளே! மேற்குத் திசையில் புஷ்கரம் என்றொரு புனிதமான இடம் இருக்கிறது. அங்குள்ள தபோவனத்துக்குச் சென்று அங்கே தவம் செய்வோம்.”

 

एवमुक्त्वा महातेजा: पुष्करेषु महामुनि:।
तप उग्रं दुराधर्षं तेपे मूलफलाशन:।।1.61.4।।

இவ்வாறு கூறிய வலிமை மிக்க விஸ்வாமித்திரர் புஷ்கரத்தை அடைந்து அங்கே, பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை மட்டும் உண்டு, இணையில்லாத, உக்கிரமான தவம் செய்தார்.

 

एतस्मिन्नेव काले तु अयोध्याधिपतिर्नृप:।
अम्बरीष इति ख्यातो यष्टुं समुपचक्रमे।।1.61.5।।

அந்தச் சமயத்தில், அயோத்தியை ஆண்டு வந்த அம்பரீசன் என்னும் மன்னன் ஒரு வேள்வி செய்யத் தொடங்கினான்.

 

तस्य वै यजमानस्य पशुमिन्द्रो जहार ह।
प्रणष्टे तु पशौ विप्रो राजानमिदमब्रवीत्।।1.61.6।।

வேள்வி நடந்து கொண்டிருந்த போது, இந்திரன் அந்த வேள்விக்கான குதிரையைத் திருடிச் சென்று விட்டான். எங்கு தேடியும், அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே, அந்தப் புரோகிதர் மன்னனிடம் இவ்வாறு கூறினார்:

 

पशुरद्य हृतो राजन् प्रणष्टस्तव दुर्नयात् ।
अरक्षितारं राजानं घ्नन्ति दोषा नरेश्वर ।।1.61.7।।

 “அரசே! வேள்விக்கான குதிரை காணாமல் போய்விட்டது. உன் ஆட்சி சரியில்லாததால், அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தன்னை நம்பியிருப்பவரைக் காப்பாற்றத் தவறிய மன்னன் தனது தவறுகளாலேயே அழிகிறான்.

 

प्रायश्चित्तं महद्ध्येतन्नरं वा पुरुषर्षभ ।
आनयस्व पशुं शीघ्रं यावत्कर्म प्रवर्तते।।1.61.8।।

மனிதருள் சிறந்தவனே! இதற்கு நீ ஒரு பெரிய பிராயச்சித்தம் செய்ய வேண்டும். விரைவாக, ஒரு மனிதனையோ, மிருகத்தையோ வரவழைத்து, இந்த வேள்வியை முடிக்க வேண்டும்.”

 

उपाध्यायवचश्श्रुत्वा स राजा पुरुषर्षभ।
अन्वियेष महाबुद्धि: पशुं गोभिस्सहस्रश:।।1.61.9।।

புரோகிதரின் சொற்களைக் கேட்ட அந்த அரசன் ஆயிரக்கணக்கான பசுக்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக, யாகத்தில் பலியாவதற்குத் தயாராக உள்ள ஒரு மனிதனைத் தேட ஆரம்பித்தான்.

 

देशान् जनपदांस्तां स्तान्नगराणि वनानि च।
आश्रमाणि च पुण्यानि मार्गमाणो महीपति: ।।1.61.10।।

स पुत्रसहितं तात सभार्यं रघुनन्दन ।
भृगुतुंदे समासीनमृचीकं सन्ददर्श ह।।1.61.11।।

அன்புள்ள ரகு நந்தனரே! பல நாடுகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும், காடுகளிலும், புனிதமான ஆசிரமங்களிலும், (அப்படிப்பட்ட ஒரு மனிதனை) தேடிக்கொண்டு வரும் போது, அந்த மன்னன், பிருகுதுந்த மலைப் பகுதியில், தனது மனைவியுடனும், புதல்வர்களுடனும், அமர்ந்திருந்த ருசீகரிஷியைக் கண்டான்.

 

तमुवाच महातेजा: प्रणम्याभिप्रसाद्य च।
ब्रह्मर्षिं तपसा दीप्तं राजर्षिरमितप्रभ:।।1.61.12।।

पृष्ट्वा सर्वत्र कुशलमृचीकं तमिदं वच:।

தவத்தால் பிரகாசித்துக் கொண்டிருந்த அந்த ருசீகப் பிரம்மரிஷியை வணங்கி, அவரைத் துதித்து, நலம் விசாரித்து, அம்பரீச மன்னன் அவரிடம் இவ்வாறு கூறினான்:

 

गवां शतसहस्रेण विक्रीणीषे सुतं यदि।।1.61.13।।
पशोरर्थे महाभाग कृतकृत्योऽस्मि भार्गव।

“பிருகு வம்சத்தில் பிறந்தவரே! நூறாயிரம் பசுக்களைப் பெற்றுக்கொண்டு, எனது வேள்வியைப் பூர்த்தி செய்வதற்கு யாகப் பசுவாக உங்களுடைய ஒரு மகனை எனக்குக் கொடுத்தால் என் நோக்கம் நிறைவேறி விடும்.

 

सर्वे परिसृता देशा याज्ञीयं न लभे पशुम्।।1.61.14।।
दातुमर्हसि मूल्येन सुतमेकमितो मम।4

எல்லா தேசங்களிலும் சுற்றித் திரிந்தும், யாகப் பசுவாக ஒரு மனிதனைப் பெற முடியவில்லை. உங்களுடைய புதல்வர்களுள் ஒருவரை, யாகப் பசுவாக விலைக்குக் கொடுப்பீர்களா?

 

एवमुक्तो महातेजा ऋचीकस्त्वब्रवीद्वच:।।1.61.15।।
नाहं ज्येष्ठं नरश्रेष्ठ विक्रीणीयां कथञ्चन।

அரசன் சொன்னதைக் கேட்ட ருசீகர் கூறினார்: “என்ன ஆனாலும், என்னுடைய மூத்த மகனை நான் விற்க மாட்டேன்.”

 

ऋचीकस्य वचश्श्रुत्वा तेषां माता महात्मनाम्।।1.61.16।।
उवाच नरशार्दूलमम्बरीषं तपस्विनी।

ருசீகரின் வார்த்தைகளைக்கேட்ட அவரது மனைவி, அம்பரீசனிடம் கூறினாள்:

 

अविक्रेयं सुतं ज्येष्ठं भगवानाह भार्गव:।।1.61.17।।

ममापि दयितं विद्धि कनिष्ठं शुनकं नृप।
तस्मात्कनीयसं पुत्रं न दास्ये तव पार्थिव ।।1.61.18।।

பிருகு வம்சத்தில் பிறந்த ருசிகர் தன் மூத்த மகனை விற்க மாட்டேன் என்று கூறிவிட்டார். என்னுடைய கடைசி மகனான சுனகன் எனக்கு மிகவும் பிரியமானவன். ஆகவே, என்ன ஆனாலும், அவனை நான் உங்களுக்குக் கொடுக்க மாட்டேன்.

 

 

प्रायेण हि नरश्रेष्ठ ज्येष्ठा: पितृषु वल्लभा:।
मातृ़णां तु कनीयांसस्तस्माद्रक्षे कनीयसम् ।।1.61.19।।

மனிதருள் சிறந்தவரே! மூத்த புதல்வன் எப்போதும் தந்தைக்கு மிகவும் பிரியமானவன். கடைசிப் புதல்வன் மேல் தாய்க்குப் பிரியம் அதிகம். ஆகவே, நான் எனது கடைசிப் புதல்வனைக் காப்பாற்றுவேன்.”

 

उक्तवाक्ये मुनौ तस्मिन् मुनिपत्न्यां तथैव च।
शुनश्शेफस्स्वयं राम मध्यमो वाक्यमब्रवीत्।।1.61.20।।

“ ராமரே! அந்த ரிஷியும், ரிஷிபத்தினியும் அவ்வாறு கூறிய பின்னர், அவர்களுடைய நடு மகனான சுனச்சேபன் தானே பேசலானான்:

 

पिता ज्येष्ठमविक्रेयं माता चाह कनीयसम्।
विक्रीतं मध्यमं मन्ये राजन् पुत्रं नयस्व माम्।।1.61.21।।

“அரசே! மூத்த புதல்வனை விற்க மாட்டேன் என்று என் தந்தையார் கூறி விட்டார். இளைய மகனை விற்க மாட்டேன் என்று என் தாயார் கூறி விட்டார். நடு மகனாகிய என்னை விற்று விட்டார்கள் என்று நினைக்கிறேன். என்னை அழைத்துச் செல்லுங்கள்.”

 

गवां शतसहस्रेण शुनश्शेफं नरेश्वर:।
गृहीत्वा परमप्रीतो जगाम रघुनन्दन ।।1.61.22।।

 

“ரகு நந்தனரே! ஒரு லட்சம் பசுக்களைக் கொடுத்து, சுனச்சேபனை விலைக்கு வாங்கிக் கொண்டு, அம்பரீச மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

 

अम्बरीषस्तु राजर्षी रथमारोप्य सत्वर:।
शुनश्शेफं महातेजा जगामाशु महायशा:।।1.61.23।।

புகழ் பெற்ற ராஜரிஷியான அம்பரீசன் சுனச்சேபனைத் தேரில் ஏற்றிக் கொண்டு, உடனே நாடு திரும்பினான்.

 

इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे एकषष्टितमस्सर्ग:।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின்  அறுபத்தொன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

 

 

 

No comments:

Post a Comment

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...