Friday, 23 February 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 5

 (வசிஷ்டர் ராமரையும் சீதையையும் மறு நாள் நடைபெற இருக்கும் பட்டாபிஷேகத்துக்காக அன்று இரவு உபவாசம் இருக்கச் சொல்கிறார்.)


सन्दिश्य रामं नृपति श्श्वोभाविन्यभिषेचने।
पुरोहितं समाहूय वशिष्ठमिदमब्रवीत्।।2.5.1।।

ராமருக்குத் தேவையானவற்றை அறிவுறுத்திய பிறகு, தசரத மன்னர், புரோகிதரான வசிஷ்டரை அழைத்து, மறு நாள் நடைபெறப்போகும் பட்டாபிஷேகத்தின் பொருட்டு, ராமரும், சீதையும் உபவாசம் இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்கும் படி வேண்டிக்கொண்டார்.

 

गच्छोपवासं काकुत्स्थं कारयाद्य तपोधन।
श्रीयशोराज्यलाभाय वध्वा सह यतव्रतम्।।2.5.2।।

“தவச்செல்வரே! தாங்கள் தயவு செய்து, காகுஸ்தனான ராமனிடம் சென்று, நம் தேசத்தின் செல்வ வளமும், புகழும் நிலை பெற்றிருக்கவேண்டி,  அவன் தனது மனைவியுடன் இன்று உபவாச விரதம் இருக்க வேண்டும் என்று கூறி அவ்வாறு உபவாசத்தை அனுஷ்டிக்கச் செய்யுங்கள்.


तथेति च स राजानमुक्त्वा वेदविदां वरः।
स्वयं वसिष्ठो भगवान्ययौ रामनिवेशनम्।।2.5.3।।

उपवासयितुं रामं मन्त्रवन्मन्त्रकोविदः।
ब्राह्मं रथवरं युक्तमास्थाय सुदृढव्रतः।।2.5.4।।

வேதங்களை நன்கு அறிந்தவரும், மந்திரங்களில் நிபுணருமான வசிஷ்டர் ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி, தனக்கேற்ற சிறந்த ரதத்தில் ஏறிக்கொண்டு, தானே ராமரின் இருப்பிடத்துக்குச் சென்று, மந்திரங்களைக் கூறி உபவாச விரதத்தைத் தொடங்கி வைத்தார்.

 

स रामभवनं प्राप्य पाण्डुराभ्रघनप्रभम्।
तिस्रः कक्ष्या रथेनैव विवेशमुनिसत्तमः।।2.5.5।।

ராமனின் இல்லத்தில் அமைந்திருந்த மூன்று முற்றங்களைத் தேரிலேயே கடந்து, அந்தத் தவசிரேஷ்டர், வெண்மேகங்களைப் போல் ஒளி வீசிக்கொண்டிருந்த ராமனின் இல்லத்திற்குள் பிரவேசித்தார்.

 

तमागतमृषिं रामस्त्वरन्निव ससम्भ्रमः।
मानयिष्यन्समानार्हं निश्चक्राम निवेशनात्।।2.5.6।।

மரியாதைக்குரிய வசிஷ்ட முனிவர் வந்திருப்பதை அறிந்து, அவரை வணங்கி வரவேற்பதற்காக, உடனே பரபரப்புடன் வெளியே வந்தார், ராமர்.

 

अभ्येत्य त्वरमाणश्च रथाभ्याशं मनीषिणः।
ततोऽवतारयामास परिगृह्य रथात्स्वयम्।।2.5.7।।

விரைவாக நடந்து வசிஷ்டர் வந்த தேரை அடைந்து, தானே, அவருடைய கையைப் பிடித்துக் கீழே இறங்க உதவி செய்தார்.

 

स चैनं प्रश्रितं दृष्ट्वा सम्भाष्याभिप्रसाद्य च।
प्रियार्हं हर्षयन्राममित्युवाच पुरोहितः।।2.5.8।।

பணிவுடனும், பிரியமுடனும் இருந்த ராமரின் நலம் விசாரித்த பின், குடும்ப புரோகிதரான வசிஷ்டர், ராமருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் இந்த வார்த்தைகளைக் கூறினார்:

 

प्रसन्नस्ते पिता राम यौवराज्यमवाप्स्यसि।
उपवासं भवानद्य करोतु सह सीतया।।2.5.9।।

“ராமா! உன்னிடம் மகிழ்ந்திருக்கும் உன்னுடைய தந்தையாரால் நீ யுவராஜ பதவியை அடையப் போகிறாய். ஆகவே, சீதையுடன் சேர்ந்து, இன்று நீ உபவாச விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். “

 

प्रातस्त्वामभिषेक्ता हि यौवराज्ये नराधिपः।
पिता दशरथः प्रीत्या ययातिं नहुषो यथा।।2.5.10।।

நாளை விடியற்காலையில் , உன்னுடைய தந்தையாரான தசரதர், நகுஷ மன்னர் தனது மகன் யயாதிக்குப் பட்டம் சூட்டியது போல, உனக்குப் பட்டம் சூட்டப் போகிறார்.”

 

इत्युक्त्वा स तदा राममुपवासं यतव्रतम्।
मन्त्रवत्कारयामास वैदेह्या सहितं मुनिः।।2.5.11।।

வசிஷ்ட முனிவர், ராமரிடம் இவ்வாறு கூறிவிட்டு, மந்திரங்கள் சொல்லி, ராமரையும், சீதையையும் உபவாசம் இருக்க வைத்தார்.

 

ततो यथावद्रामेण स राज्ञो गुरुरर्चितः।
अभ्यनुज्ञाप्य काकुत्स्थं ययौ रामनिवेशनात्।।2.5.12।।

பின்னர், ராமனிடம் இருந்து தகுந்த வகையில் கௌரவிக்கப்பட்ட வசிஷ்டர், ராமரின் இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.

 

सुहृद्भिस्तत्र रामोऽपि सहासीनः प्रियंवदैः।
सभाजितो विवेशाऽथ ताननुज्ञाप्य सर्वशः।।2.5.13।।

அதன் பின்னர் சிறிது நேரம், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்து விட்டு, அவர்கள் அளித்த மரியாதையையும் பெற்றுக்கொண்டு, ராமர் தனது அறைக்குள் பிரவேசித்தார்.

 

हृष्टनारीनरयुतं रामवेश्म तदा बभौ।
यथा मत्तद्विजगणं प्रफुल्लनलिनं सरः।।2.5.14।।
 

ராமரின் இருப்பிடமானது, மகிழ்ச்சி நிறைந்த ஆண்களாலும், பெண்களாலும் சூழப்பெற்று, நன்கு மலர்ந்த தாமரை மலர்களும், ஆனந்தமான பறவைகளும் நிறைந்த குளத்தைப் போல் விளங்கியது.

 

स राजभवनप्रख्यात्तस्माद्रामनिवेशानात्।
निर्गत्य ददृशे मार्गं वसिष्ठो जनसंवृतम्।।2.5.15।।

வசிஷ்டர், அரண்மனையைப் போல் விளங்கிய ராமரின் இருப்பிடத்திலிருந்து, வெளியே ராஜ வீதிக்கு வந்த போது, அது மக்களால் நிரம்பியிருக்கக் கண்டார்.

 

बृन्दबृन्दैरयोध्यायां राजमार्गास्समन्ततः।
बभूवुरभिसम्बाधाः कुतूहलजनैर्वृताः।।2.5.16।।

ராஜ வீதிகள் அனைத்தும், ஆர்வம் நிறைந்த அயோத்தி மக்களால் நிறைந்து நெரிசலுடன் காணப்பட்டன.

 

जनबृन्दोर्मिसंघर्षहर्षस्वनवतस्तदा।
बभूव राजमार्गस्य सागरस्येव निस्वनः।।2.5.17।।

அந்த ராஜவீதிகள் அனைத்தும், மக்களது மகிழ்ச்சி ஆரவாரத்தால், அலை வீசும் கடல் போல  விளங்கின.

 

सिक्तसम्मृष्टरथ्या हि तदहर्वनमालिनी।
आसीदयोध्यानगरी समुच्छ्रितगृहध्वजा।।2.5.18।।

அன்று, ராஜவீதிகள் அனைத்தும், நீர் தெளித்து சுத்தம் செய்யப்பட்டு, பூந்தோட்டங்கள் சூழ, வீடுகளின் மீது கொடிகள் கட்டப்பட்டு விளங்கின.

 

तदा ह्ययोध्यानिलयः सस्त्रीबालाबलो जनः।
रामाभिषेकमाकाङ्क्षन्नाकाङ्क्षदुदयं रवेः।।2.5.19।।
 

அப்போது அயோத்தி நகரத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட, ராமருடைய பட்டாபிஷேகத்துக்காக, மறு நாள் விடிவதை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தார்கள்.

 

प्रजालङ्कारभूतं च जनस्यानन्दवर्धनम्।
उत्सुकोऽभूज्जनो द्रष्टुं तमयोध्यामहोत्सवम्।।2.5.20।।
 

மக்களுடைய ஆனந்தத்தை அதிகரிக்கக்கூடிய, அயோத்திக்கு ஒரு அழகான ஆபரணம் போல்  விளங்கப் போகும் அந்த மிகப் பெரிய திருவிழாவைக் காண மக்கள் பேரார்வம் கொண்டிருந்தார்கள்.

 

 एवं तज्जनसम्बाधं राजमार्गं पुरोहितः।
 व्यूहन्निव जनौघं तं शनै राजकुलं ययौ।।2.5.21।।

கூட்டமாகக்கூடியிருந்த அந்த மக்களை வியூகங்களைப் போல் பிரித்துக்கொண்டு, மெதுவாக, அரண்மனையை நோக்கிப் புரோகிதரான வசிஷ்டரின் தேர் சென்றது.

 

सिताभ्रशिखरप्रख्यं प्रासादमधिरुह्य सः।
समीयाय नरेन्द्रेण शक्रेणेव बृहस्पतिः।।2.5.22।।

மலை மேல் வெண் மேகங்கள் சூழ்ந்துள்ளது போல் தோற்றமளித்த அரண்மனைக்குள் ஏறிச் சென்று, ப்ருஹஸ்பதியானவர் இந்திரனைச் சந்திந்ததைப் போல், வசிஷ்டர் தசரதரைச் சந்தித்தார்.

 

तमागतमभिप्रेक्ष्य हित्वा राजासनं नृपः।
पप्रच्छ स च तस्मै तत्कृतमित्यभ्यवेदयत्।।2.5.23।।

வசிஷ்டர் வருவதைக் கண்ட தசரதர், தன் அரியணையில் இருந்து இறங்கி வந்து வசிஷ்டர் சென்ற காரியம் நல்ல படியாக ஆயிற்றா என்று வினவ, ‘ஆயிற்று’ என்று முனிவர் பதிலிறுத்தார்.

 

चैव तदा तुल्यं सहासीनास्सभासदः।
आसनेभ्यस्समुत्तस्थुः पूजयन्तः पुरोहितम्।।2.5.24।।

அரசருடன் அவையில் அமர்ந்திருந்த அனைவரும், அரசர் எழுந்த போது , தாங்களும் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து, குருவுக்கு மரியாதை செலுத்தினர்.

 

गुरुणा त्वभ्यनुज्ञातो मनुजौघं विसृज्य तम्।
विवेशान्तः पुरं राजा सिंहो गिरिगुहामिव।।2.5.25।।

பின்னர் தசரத மன்னர், குருவிடம் விடை பெற்று, அவையோருக்கு விடை கொடுத்து விட்டுத் தன் மலைக்குகைக்குள் நுழையும் சிங்கத்தைப் போலத் தன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார்.

 

तदग्य्रवेषप्रमदाजनाकुलं महेन्द्रवेश्मप्रतिमं निवेशनम्।
विदीपयंश्चारु विवेश पार्थिव श्शशीव तारागणसङ्कुलं नभः।।2.5.26।।

மிகச் சிறந்த ஆடைகள் அணிந்த மங்கையர் நிறைந்து,  இந்திரனின் அரண்மணை போல் விளங்கிய அந்த அந்தப்புரத்துக்குள், நக்ஷத்திரங்கள் சூழந்த ஆகாயத்தை ஒளி வீசச்செய்யும் சந்திரனைப் போல் தசரத மன்னர் பிரவேசித்தார்.

 

 इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे पञ्चमस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

23.02.2024

 

 

 

 

 

Wednesday, 21 February 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 4

(ராமரை மீண்டும் அழைத்து வரச் சொல்லி, சுமந்திரரை தசரதர் அனுப்புகிறார். ராமருக்குச் சில விஷயங்களைச் சொல்கிறார்.  பின்னர் ராமர் கௌசல்யையின் இருப்பிடத்துக்குச் சென்று அவரிடம் தனது பட்டாபிஷேகத்தைப் பற்றிக்கூறி, அவருடைய ஆசியைப் பெறுகிறார்.)



गतेष्वथ नृपो भूयः पौरेषु सह मन्त्रिभिः।
मन्त्रयित्वा ततश्चक्रे निश्चयज्ञस्सनिश्चयम्।।2.4.1।।

श्व एव पुष्यो भविताश्वोऽभिषेच्यस्तु मे सुतः।
रामो राजीवताम्राक्षो यौवराज्य इति प्रभुः।।2.4.2।।

நகரமக்கள் அனைவரும் அங்கிருந்து அகன்றதும், தீர்மானம் செய்வதில் தேர்ந்த தசரதர், மீண்டும் தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடி, அடுத்த நாளே சந்திரன் புஷ்ய நக்ஷத்திரத்துடன் கூடி இருக்கப் போவதை அறிந்து, சிவந்த தாமரை மலரின் இதழ்களைப் போன்ற கண்களை உடைய தன் மகன் ராமனுக்கு, நாளையே யுவராஜ பட்டாபிஷேகம் நடத்த வேண்டும் என்று தீர்மானித்தார்.

 

अथाऽन्तर्गृहमाविश्य राजा दशरथस्तदा।
सूतमामन्त्रयामास रामं पुनरिहानय।।2.4.3।।

பின்னர், அந்தப்புறத்துக்குச் சென்ற தசரதர், சுமந்திரரை அழைத்து, மீண்டும் ராமரைத் தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார்.

 

प्रतिगृह्य स तद्वाक्यं सूतः पुनरुपाययौ।
रामस्य भवनं शीघ्रं राममानयितुं पुनः।।2.4.4।।

அரசரின் கட்டளைப் படி, தேரோட்டி சுமந்திரர் உடனே ராமரை அழைத்து வருவதற்காக,  வேகமாகச் சென்றார்.

 

द्वार्स्थैरावेदितं तस्य रामायाऽऽगमनं पुनः।
श्रुत्वैव चापि रामस्तं प्राप्तं शङ्कान्वितोऽभवत्।।2.4.5।।

வாயிற்காப்போர்கள் சுமந்திரர் வந்திருப்பதாக அறிவித்ததும், எதற்காக அவர் மீண்டும் வந்திருக்கிறார் என்று ராமருக்குக் கவலை உண்டாயிற்று.

 

प्रवेश्य चैनं त्वरितं रामो वचनमब्रवीत्।
यदागमनकृत्यं ते भूयस्तद्ब्रूह्यशेषतः।।2.4.6।।

ராமர் உடனே சுமத்திரரை உள்ளே வரவேற்று, அவர் மீண்டும் வந்ததற்கான காரணத்தை முழுமையாக உரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

तमुवाच तत स्सूतो राजा त्वां द्रष्टुमिच्छति।
श्रुत्वा प्रमाणमत्र त्वं गमनायेतराय वा।।2.4.7।।

சுமந்திரர் பதில் கூறினார்: “அரசர்  தங்களைப் பார்க்க விரும்புகிறார். செல்வதா வேண்டாமா என்பதைத் தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். “

 

इति सूतवच श्श्रुत्वा रामोऽथ त्वरयाऽन्वितः।
प्रययौ राजभवनं पुनर्द्रष्टुं नरेश्वरम्।।2.4.8।।

தேரோட்டியின் சொற்களைக்கேட்ட ராமர் உடனடியாக அரசரைச் சந்திக்க அரண்மனைக்குப் புறப்பட்டார்.

 

तं श्रुत्वा समनुप्राप्तं रामं दशरथो नृपः।
प्रवेशयामास गृहं विवक्षुः प्रियमुत्तमम्।।2.4.9।।

ராமர் வந்து சேர்ந்து விட்ட செய்தி அறிந்த தசரதர் அவருக்கு ஒரு இனிமையான செய்தி சொல்வதற்காக, அந்தப் புறத்துக்குள் வரவழைத்தார்.

 

प्रविशन्नेव च श्रीमान्राघवो भवनं पितुः।
ददर्श पितरं दूरात्प्रणिपत्य कृताञ्जलिः।।2.4.10।।

தந்தையாரின் அரண்மனைக்குள் நுழைந்த ராமர், தூரத்தில் இருந்தே, கைகளைக் கூப்பிக்கொண்டு, தலை வணங்கிக் கொண்டே, தந்தையைப் பார்த்தார்.

 

प्रणमन्तं समुत्थाप्य तं परिष्वज्य भूमिपः।
प्रदिश्य चास्मै रुचिरमासनं पुनरब्रवीत्।।2.4.11।।

குனிந்து வணங்கிய ராமரை எழுப்பிய தசரதர், அவரை அணைத்துக்கொண்டு, அவருக்கு ஒரு அருமையான ஆசனத்தை அளித்து, அதில் அமரச்செய்தபின், கூறினார்:

 

राम वृद्धोऽस्मि दीर्घायुर्भुक्ता भोगा मयेप्सिताः।
अन्नवद्भिः क्रतुशतै स्तथेष्टं भूरिदक्षिणैः।।2.4.12।।

“ராமா! நீண்ட காலம் வாழ்ந்து, எனக்கு வயதாகி விட்டது. நான் விரும்பியதையெல்லாம் அனுபவித்து விட்டேன். நூற்றுக்கணக்கான யாகங்கள் செய்து, நிறைய அன்னமும், தக்ஷிணைகளும் கொடுத்து விட்டேன்.

 

जातमिष्टमपत्यं मे त्वमद्यानुपमं भुवि।
दत्तमिष्टमधीतं च मया पुरुषसत्तम।।2.4.13।।

மனிதருள் சிறந்தவனே! நான் விரும்பியது போன்ற புதல்வனாகப் பிறந்துள்ள உனக்கு இணையாக இந்த உலகில் எவரும் இல்லை. நான் நிறைய சடங்குகள் செய்து, நிறைய தானங்கள் அளித்திருக்கிறேன். வேதங்களையும் நன்கு கற்றிருக்கிறேன்.

 

अनुभूतानि चेष्टानि मया वीर सुखान्यपि।
देवर्षिपितृविप्राणामनृणोऽस्मि तथाऽत्मनः।।2.4.14।।

வீரனே! நான் விரும்பிய சுகங்களை அனுபவித்து விட்டேன். கடவுளர்களுக்கும், ரிஷிகளுக்கும், பித்ருக்களுக்கும்,  அந்தணர்களுக்கும் செய்ய வேண்டிய கடன்களைச் செய்து முடித்து விட்டேன்.

 

न किञ्चिन्मम कर्तव्यं तवान्यत्राभिषेचनात्।
अतो यत्त्वामहं ब्रूयां तन्मे त्वं कर्तुमर्हसि।।2.4.15।।

உனக்குப் பட்டாபிஷேகம் செய்வதைத் தவிர,  நான் செய்ய வேண்டிய கடமைகள் யாதும் இல்லை. ஆகவே, நான் சொல்லியபடி நீ செய்ய வேண்டும்.

 

अद्य प्रकृतयस्सर्वास्त्वामिच्छन्ति नराधिपम्।
अतस्त्वां युवराजानमभिषेक्ष्यामि पुत्रक।।2.4.16।।

இன்று குடிமக்கள் அனைவரும், உன்னைத் தங்கள் அரசனாகப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்கள். ஆகவே, உனக்கு  யுவராஜ பட்டாபிஷேகம் செய்விக்கப் போகிறேன்.

 

अपि चाद्याऽशुभान्राम स्वप्ने पश्यामि दारुणान्।
सनिर्घाता दिवोल्का च पततीह महास्वना।।2.4.17।।

மேலும், ராமா! இப்போதெல்லாம், எனக்கு பயங்கரமான அபசகுனங்களைக் காட்டுகின்ற கனவுகள் பகல் நேரத்தில் வருகின்றன. பலத்த இடிச்சத்தத்துடன், விண்கற்கள் விழுவது போல் கனவுகள் வருகின்றன.

 

अवष्टब्धं च मे राम नक्षत्रं दारुणैर्ग्रहैः।
आवेदयन्ति दैवज्ञाः सूर्याङ्गारकराहुभिः।।2.4.18।।

ராமா! சூரியனும், செவ்வாயும், ராகுவும் என்னுடைய நக்ஷத்திரத்தைத் தாக்குகின்றன என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

 

प्रायेण हि निमित्तानामीदृशानां समुद्भवे।
राजा हि मृत्युमाप्नोति घोरां वाऽऽपदमृच्छति।।2.4.19।।

இப்படிப்பட்ட நிமித்தங்கள் காணப்படும் போது, பெரும்பாலும், அரசருக்கு மரணம் சம்பவிக்கும் அல்லது அவருக்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும்.

 

तद्यावदेव मे चेतो न विमुह्यति राघव।
तावदेवाभिषिञ्चस्व चला हि प्राणिनां मतिः।।2.4.20।।

ராமா! ஆகையால், என்னுடைய மனம் குழம்புவதற்கு முன்னர் உன்னைப் பட்டத்து இளவரசனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால், மனிதனுடைய மனம் நிலையில்லாதது.

 

अद्य चन्द्रोऽभ्युपगतः पुष्यात्पूर्वं पुनर्वसू।
श्वः पुष्ययोगं नियतं वक्ष्यन्ते दैवचिन्तकाः।।2.4.21।।

இன்று சந்திரன் புனர்வசு நக்ஷத்திரத்துடன் கூடியிருக்கிறது. நாளை புஷ்ய நக்ஷத்திரத்துடன் கூடியிருக்கும். அப்படியிருக்கும் நாள் பட்டாபிஷேகம் செய்வதற்கு மங்களகரமான நாள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

 

ततः पुष्येऽभिषिञ्चस्व मनस्त्वरयतीव माम्।
श्वस्त्वाऽहमभिषेक्ष्यामि यौवराज्ये परन्तप।।2.4.22।।
 

 ‘புஷ்ய நக்ஷத்திரம் இருக்கும் போதே ராமனுக்குப் பட்டம் சூட்டி விடு’ என்று எனது மனம் என்னை அவசரப்படுத்துகிறது. எதிரிகளைத் தகிப்பவனே! நாளை உனக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்யப்போகிறேன்.

 

तस्मात्त्वयाऽद्य प्रभृति निशेयं नियतात्मना।
सह वध्वोपवस्तव्या दर्भप्रस्तरशायिना।।2.4.23।।

ஆகவே, நீயும் எனது மருமகளான சீதையும் இன்று இரவு உபவாசம் இருந்து மனக்கட்டுப்பாட்டுடன், தர்ப்பைப் புல்லின் மீது படுத்து உறங்க வேண்டும்.

 

सुहृदश्चाप्रमत्तास्त्वां रक्षन्त्वद्य समन्ततः।
भवन्ति बहु विघ्नानि कार्याण्येवंविधानि हि।।2.4.24।।

இதைப் போன்ற செயல்கள் நடைபெறும் போது தடைகள் வருவது இயற்கை. ஆகவே, உன்னை எல்லாப் பக்கங்களில் இருந்தும் பத்திரமாகப் பாதுகாக்குமாறு உனது நண்பர்களிடம் கூறிவிடு.

 

विप्रोषितश्च भरतो यावदेव पुरादितः।
तावदेवाभिषेकस्ते प्राप्तकालो मतो मम।।2.4.25।।

பரதன் இங்கு இல்லாமல் இருக்கும் சமயமே, உனக்குப் பட்டம் சூட்டுவதற்கு ஏற்ற சமயம் என்று நான் நினைக்கிறேன்.

 

कामं खलु सतां वृत्ते भ्राता ते भरतस्स्थितः।
ज्येष्ठानुवर्ती धर्मात्मा सानुक्रोशो जितेन्द्रियः।।2.4.26।।

உன்னுடைய தம்பியான பரதன் தர்ம வழியில் நடந்து வந்திருக்கிறான் என்பதும் தனது தமையனைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறான் என்பதும் உண்மை தான். அவன் தர்மாத்மா என்பதிலும், இரக்கம் நிறைந்தவன் என்பதிலும், தன்னடக்கம் மிக்கவன் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை.

 

किन्तु चित्तं मनुष्याणामनित्यमिति मे मतिः।
सतां च धर्मनित्यानां कृतशोभि च राघव।।2.4.27।।

ஆனாலும், மிகச் சிறந்த நற்பண்புகள் உடையவர்களாய், தர்மத்திலேயே தனது எண்ணங்களை நிலை பெறச் செய்தவர்களின் மனம் கூடத் தடுமாறக்கூடும்.”

 

इत्युक्त स्सोऽभ्यनुज्ञात श्श्वोभाविन्यभिषेचने।
व्रजेति रामः पितरमभिवाद्याभ्ययाद्गृहम्।।2.4.28।।

இவ்வாறு மறு நாள் பட்டாபிஷேகம் நடை பெறப்போகிறது என்னும் செய்தியைத் தெரிவித்தபின், ராமருக்குப் போக தசரதர் அனுமதி அளித்தார். அதன் பிறகு,  அவரை வணங்கி விட்டுத் தன் இருப்பிடம் திரும்பினார், ராமர்.

 

प्रविश्य चात्मनो वेश्मराज्ञोद्दिष्टेऽभिषेचने।
तत्क्षणेन विनिर्गम्य मातुरन्तपुरं ययौ।।2.4.29।।

தசரதர் பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்த பிறகு, தனது இல்லத்துக்குச் சென்ற ராமர், அங்கிருந்து, உடனேயே தனது தாயாரின் இருப்பிடத்துக்குச் சென்றார்.

 

तत्र तां प्रवणामेव मातरं क्षौमवासिनीम्।
वाग्यतां देवतागारे ददर्शाऽऽयाचतीं श्रियम्।।2.4.30।।

அங்கே, இறைவனை வழிபடும் அறையில், பட்டாடைகளை அணிந்திருந்த தன் தாயார், அமைதியாகத் தன் மகனுக்கு அரச பதவி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதைக் கண்டார்.

 

प्रागेव चागता तत्र सुमित्रा लक्ष्मण स्तथा।
सीता चानायिता श्रुत्वा प्रियं रामाभिषेचनम्।।2.4.31।।

ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போகிறது என்னும் நல்ல செய்தியைக் கேட்டு, சுமித்திரையும், லக்ஷ்மணனும், அங்கே முதலிலேயே வந்து விட்டார்கள். சீதைக்குச் சொல்லி அனுப்பி அவளும் வந்து விட்டாள்.

 

तस्मिन् काले हि कौशल्या तस्थावामीलितेक्षणा।
सुमित्रयाऽन्वास्यमाना सीतया लक्ष्मणेन च।।2.4.32।।

அப்போது, பாதி மூடிய கண்களுடன், கௌசல்யை பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தாள். சுமித்திரை, சீதை மற்றும் லக்ஷ்மணன் அங்கேயே நின்றிருந்தார்கள்.

 

श्रुत्वा पुष्येण पुत्रस्य यौवराज्याऽभिषेचनम्।
प्राणायामेन पुरुषं ध्यायमाना जनार्दनम्।।2.4.33।।

தன்னுடைய மகன் ராமனுக்குப் புஷ்ய நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் பட்டாபிஷேகம் நடைபெறப் போகிறது என்று கேள்விப்பட்டிருந்த கௌசல்யை, மூச்சை அடக்கிப் பிராணாயாமத்தில் ஈடுபட்டுத் திருமாலை வழிபட்டுக்கொண்டிருந்தாள்.

 

तथा सनियमामेव सोऽभिगम्याभिवाद्य च।
उवाच वचनं रामो हर्षयंस्तामनिन्दिताम्।।2.4.34।।

கௌசல்யை அவ்வாறு தியானத்தில் ஈடுபட்டிருந்த போது ராமர் அங்கு வந்து, தன் தாயை மரியாதையுடன் வணங்கி விட்டு, அவளுடைய மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் படியான வார்த்தைகளைக் கூறினார்:

 

अम्ब पित्रा नियुक्तोऽस्मि प्रजापालनकर्मणि।
भविता श्वोऽभिषेको मे यथा मे शासनं पितुः।।2.4.35।।

“தாயே! எனது தந்தையார் மக்களைக் காக்கும் பணியை எனக்கு ஒப்படைத்திருக்கிறார். அவருடைய கட்டளைப் படி, நாளை எனக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போகிறது.

 

सीतयाप्युपवस्तव्या रजनीयं मया सह।
एवमृत्विगुपाध्यायै स्सह मामुक्तवान्पिता।।2.4.36।।

இன்றிரவு, சீதையும், தலைமைப் புரோகிதர்களும், விழாவை நடத்தி வைப்பவர்களும் என்னுடன் சேர்ந்து உபவாசம் இருக்க வேண்டும் என்று தந்தையார் என்னிடம் கூறினார்.

 

यानि यान्यत्र योग्यानि श्वोभाविन्यभिषेचने।
तानि मे मङ्गलान्यद्य वैदेह्याश्चैव कारय।।2.4.37।।

அபிஷேகம் நாளை நடைபெறப்போகிறது. இன்றே, அதற்குண்டான மங்கலச் சடங்குகளை எனக்கும், சீதைக்கும் செய்து விடுங்கள்.”

 

एतच्छ्रुत्वा तु कौशल्या चिरकालाभिकाङ्क्षितम्।
हर्षबाष्पकलं वाक्यमिदं राममभाषत।।2.4.38।।

தன்னுடைய வெகு நாளைய விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில், ஆனந்தக்கண்ணீருடன், தழுதழுத்த குரலில் கௌசல்யை கூறினாள்:

 

वत्स राम चिरं जीव हतास्ते परिपन्थिनः।
ज्ञातीन्मे त्वं श्रिया युक्त स्सुमित्रायाश्च नन्दय।।2.4.39।।

“அருமைக் குழந்தாய்! நீ நீடூழி வாழவேண்டும்! உன் எதிரிகள் அழிந்து போகட்டும்! செல்வச்செழிப்புடன் நீ நன்கு வாழ்ந்து என்னுடைய உறவினர்களுக்கும், சுமித்திரையின் உறவினர்களுக்கும் ஆனந்தத்தைக் கொடு!”

 

कल्याणे बत नक्षत्रे मयि जातोऽसि पुत्रक।
येन त्वया दशरथो गुणैराराधितः पिता।।2.4.40।।

அருமை மகனே! நீ ஒரு அதிருஷ்டமான நக்ஷத்திரத்தில் எனக்குப் பிறந்திருக்கிறாய். அதனால் தான் உனது தந்தையார் உனது நற்குணங்களால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்! ஓ! (இதைக் கேட்க) எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!

 

अमोघं बत मे क्षान्तं पुरुषे पुष्करेक्षणे।
येयमिक्ष्वाकुराज्यश्रीः पुत्र त्वां संश्रयिष्यति।।2.4.41।।

மகனே! கடினமான விரதங்களை அனுஷ்டித்து விஷ்ணுவை நான் வணங்கியது வீண்போகவில்லை. இக்ஷ்வாகு வம்சத்தின் ராஜ்யலக்ஷ்மி உன்னிடம் வரப்போகிறாள். ஓ! எவ்வளவு மகிழ்ச்சி!”

 

इत्येवमुक्तो मात्रेदं रामो भ्रातरमब्रवीत्।
प्राञ्जलिं प्रह्वमासीनमभिवीक्ष्य स्मयन्निव।।2.4.42।।

தனது தாயார் கௌசல்யை இவ்வாறு தன்னிடம் கூறியதும், பணிவுடன் கைகளைக் கூப்பிக்கொண்டு அமர்ந்திருந்த லக்ஷ்மணனிடம், புன் சிரிப்புடன் ராமர் கூறினார்:

 

लक्ष्मणेमां मया सार्धं प्रशाधि त्वं वसुन्धराम्।
द्वितीयं मेऽन्तरात्मानं त्वामियं श्रीरुपस्थिता।।2.4.43।।

“லக்ஷ்மணா! என்னுடன் சேர்ந்து நீயும் இந்த ராஜ்ஜியத்தை ஆட்சி செய்ய வேண்டும். நீ என்னுடைய இன்னொரு அந்தராத்மா; ஆகையால், இந்த ராஜ்ஜியம் உனக்கும் உரியது தான்.

सौमित्रे भुङ्क्ष्व भोगांत्स्वमिष्टान्राज्यफलानि च।
जीवितं च हि राज्यं च त्वदर्थमभिकामये।।2.4.44।।

சுமித்திரையின் மகனே, லக்ஷ்மணா! இந்த அரசுக்குரிய அனைத்து இன்பங்களையும், நீ அனுபவிப்பாயாக! உனக்காகத்தான் நான் இந்த ஆட்சியையே விரும்பி ஏற்றுக் கொள்கிறேன்.“

 

इत्युक्त्वा लक्ष्मणं रामो मातरावभिवाद्य च।
अभ्यनुज्ञाप्य सीतां च जगाम स्वं निवेशनम्।।2.4.45।।

லக்ஷ்மணனுடன் பேசிய பிறகு, ராமர் தன் இரு தாயார்களையும் மரியாதையுடன் வணங்கி விடை பெற்று, சீதையையும் விடைபெறச் செய்த பின்னர், தனது இல்லத்துக்குத் திரும்பினார்.

 
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे चतुर्थस्सर्गः।।

 

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின் நான்காவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

 

21.02.2024

 

 

 

 

Monday, 19 February 2024

 

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்

அயோத்தியா காண்டம்

ஸர்க்கம் – 3

(தசரதர் வசிஷ்டரிடமும், வாம தேவரிடமும், ராமனின் யுவராஜ பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அதற்கு வேண்டிய பொருட்களைச் சேகரிக்குமாறும் வேண்டிக்கொள்கிறார். சுமந்திரர் ராமரைச் சபைக்கு அழைத்து வருகிறார். ராமருக்கு தசரதர் சில அறிவுரைகள் கூறுகிறார்.)


तेषामञ्जलिपद्मानि प्रगृहीतानि सर्वशः।
प्रतिगृह्याब्रवीद्राजा तेभ्यः प्रियहितं वचः।।2.3.1।।

அனைவரும், கைகளைத் தாமரை மொட்டுக்களைப் போல் கூப்பிக் கொண்டு, ராமருக்குப் பட்டம் கட்ட வேண்டும் என்று தசரதரை வேண்டிக்கொள்கிறார்கள்.  அவர்களுக்குத் தானும் மரியாதை செய்த படியே அவர்களுக்கு மகிழ்ச்சியையும், நன்மையையும் தரக்கூடிய வார்த்தைகளைத் தசரதர் கூறினார்:

 

अहोऽस्मि परमप्रीतः प्रभावश्चातुलो मम।
यन्मे ज्येष्ठं प्रियं पुत्रं यौवराज्यस्थमिच्छथ।।2.3.2।।

என்னுடைய மூத்த குமாரனான ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்  என்று நீங்கள் எல்லாரும் கூறியதைக் கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாகிறது. என்னுடைய வைபவம் இன்னும் அதிகரித்தாற் போல் இருக்கிறது. “

 

इति प्रत्यर्च्य तान्राजा ब्राह्मणानिदमब्रवीत्।

वसिष्ठं वामदेवं च तेषामेवोपशृण्वताम्।।2.3.3।।
 

அவர்களுக்கெல்லாம் உரிய மரியாதையைச் செய்த பின்னர் தசரதர், அவர்கள் முன்னிலையிலேயே வசிஷ்டரிடமும், வாமதேவரிடமும், பிற அந்தணர்களிடமும் இவ்வாறு கூறினார்.

 

चैत्रश्श्रीमानयं मासः पुण्यः पुष्पितकाननः।
यौवराज्याय रामस्य सर्वमेवोपकल्प्यताम्।।2.3.4।।

राज्ञस्तूपरते वाक्ये जनघोषो महानभूत्।

“தோட்டங்கள் எல்லாம் பூத்துக்குலுங்கும் இந்தச் சித்திரை மாதம் மங்களகரமானது. ராமனின் யுவராஜ பட்டாபிஷேகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்”. தசரதரின் இந்த சொற்களைக் கேட்ட அவையோர் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 

 शनैस्तस्मिन्प्रशान्ते च जनघोषे जनाधिपः।।2.3.5।।

वसिष्ठं मुनिशार्दूलं राजा वचनमब्रवीत्।

அந்த ஆரவாரம் மெதுவாக அடங்கியவுடன், தசரதர் முனிவருள் சிறந்த வசிஷ்டரிடம் இவ்வாறு கூறினார்:

 

अभिषेकाय रामस्य यत्कर्म सपरिच्छदम्।।2.3.6।।

तदद्य भगवन् सर्वमाज्ञापयितु मर्हसि।

“பூஜிக்கத்தகுந்தவரே! ராமனின் யுவராஜ பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் சேகரிப்பதற்கான ஆணையைப் பிறப்பித்து விடுங்கள்.”

 

तच्छ्रुत्वा भूमिपालस्य वसिष्ठो द्विजसत्तमः।।2.3.7।।

आदिदेशाग्रतो राज्ञ स्स्थितान्युक्तान् कृताञ्जलीन्।

அரசரின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, அரசரின் முன் கூப்பிய கரங்களுடன் நின்று கொண்டிருந்த ஆலோசகர்களுக்கு, அந்தணருள் சிறந்த வசிஷ்டர் இவ்வாறு ஆணையிட்டார்.

 

सुवर्णादीनि रत्नानि बलीन् सर्वौषधीरपि।।2.3.8।।

शुक्लमाल्यांश्च लाजांश्च पृथक्च मधुसर्पिषी।
अहतानि च वासांसि रथं सर्वायुधान्यपि।।2.3.9।।

चतुरङ्गबलं चैव गजं च शुभलक्षणम्।
चामरव्यजने श्वेते ध्वजं छत्रं च पाण्डुरम्।।2.3.10।।

शतं च शातकुम्भानां कुम्भानाग्निवर्चसाम्।
हिरण्यशृङ्गमृषभं समग्रं व्याघ्रचर्म च।।2.3.11।।

उपस्थापयत प्रातरग्न्यगारं महीपतेः।
 

“தங்கம் மற்றும் பிற உலோகங்கள், ரத்தினங்கள், பூஜைக்கு வேண்டிய பொருட்கள், மூலிகைகள், வெள்ளை மலர்களால் ஆன மாலைகள், வறுத்த பொரி, தனித் தனிப் பாத்திரங்களில் தேன் மற்றும் நெய், புத்தாடைகள், தேர், அனைத்து வித ஆயுதங்கள்,  நால்வகைப் படைகள், மங்களமான லக்ஷணங்களை உடைய ஒரு யானை, வெண்சாமரங்கள், கொடி, வெண்கொற்றக்குடை, நெருப்பைப் போல் பிரகாசிக்கும் நூறு தங்கப்பாத்திரங்கள், தங்கக்கொப்பி பூட்டிய கொம்புகளுடைய ஒரு எருது, புலித்தோல், ஆகியவற்றை, நாளைக் காலைக்குள், அரண்மனையில்,  புனிதமான அக்கினிக்கு அருகில் தயாராக வைத்திருக்க வேண்டும்.

 

यच्चान्यत्किञ्चिदेष्टव्यं तत्सर्वमुपकल्प्यताम्।।2.3.12।।

अन्तःपुरस्य द्वाराणि सर्वस्य नगरस्य च।

चन्दनस्रग्भिरर्च्यन्तां धूपैश्च घ्राणहारिभिः।।2.3.13।।

எந்த ஒரு சிறிய பொருள் தேவை என்றாலும், அது உடனே கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தப்புரம் மற்றும் நகரத்தின் எல்லாக் கதவுகளுக்கும் சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரித்து, நல்ல மணம் வீசக்கூடிய தூபத்தை ஏற்றி வழிபடவேண்டும்.

 

प्रशस्तमन्नं गुणवद्दधिक्षीरोपसेचनम्।
द्विजानां शतसाहस्रे यत्प्रकाममलं भवेत्।।2.3.14।।

நூறாயிரம் அந்தணர்கள் திருப்தியுடன் உண்ணும் வகையில் சிறந்த அரிசியைப் பாலில் வேக வைத்துத் தயிர் சேர்த்துப் பரிமாற வேண்டும்.

 

सत्कृत्य द्विजमुख्यानां श्वःप्रभाते प्रदीयताम्।
घृतं दधि च लाजाश्च दक्षिणाश्चापि पुष्कलाः।।2.3.15।।

நாளைக் காலையில் சிறந்த அந்தணர்களுக்கு நல்ல முறையில் மரியாதை செய்து, அன்னம், நெய், தயிர், வறுத்த பொரி மற்றும் பரிசுகளை ஏராளமாக வழங்க வேண்டும்.

 

सूर्येऽभ्युदितमात्रे श्वो भविता स्वस्तिवाचनम्।
ब्राह्मणाश्च निमन्त्र्यन्तां कल्प्यन्तामासनानि च।।2.3.16।।

நாளை விடிந்த உடனேயே, வாழ்த்துக்கூறும் மந்திரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தணர்களை அழைத்து அவர்களைத் தகுந்த இருக்கைகளில் அமரச் செய்ய வேண்டும்.

 

आबध्यन्तां पताकाश्च राजमार्गश्च सिंच्यताम्।
सर्वे च तालावचरा गणिकाश्च स्वलङ्कृताः।।2.3.17।।

कक्ष्यां द्वितीयामासाद्य तिष्ठन्तु नृपवेश्मनः।

எங்கும் பதாகைகள் கட்டப்பட வேண்டும். ராஜ வீதிகளில் தண்ணீர் தெளிக்கப்பட வேண்டும். நடிகர்களையும், நன்கு அலங்கரித்துக் கொண்டுள்ள கணிகைகளையும், உள்ளறைகளில் அமரச் செய்ய வேண்டும்.

 

देवायतनचैत्येषुसान्नभक्षा स्सदक्षिणाः।।2.3.18।।

उपस्थापयितव्या स्स्युर्माल्ययोग्याः पृथक्पृथक्।

உணவு மற்றும் தின்பண்டங்களை அளிக்கவும், மாலைகளை ஏந்தி நிற்கவும், தக்ஷிணைகள் வழங்கவும், கோவில்களிலும், பிற வழிபாட்டு ஸ்தலங்களிலும், ஆட்களை நிறுத்தி வைக்கவேண்டும். 

 

दीर्घासिबद्धा योधाश्च सन्नद्धा मृष्टवाससः।।2.3.19।।

महाराजाङ्गणं सर्वे प्रविशन्तु महोदयम्।

புத்தாடைகள் அணிந்த, நீண்ட உடைவாளை இடையில் செருகிக்கொண்டுள்ள, எப்போதும் தயாராகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் போர்வீரர்கள், மகாராஜாவின் சபைக்குள் வந்திருக்க வேண்டும்.”

 

एवं व्यादिश्य विप्रौ तौ क्रियास्तत्र सुनिष्ठितौ।।2.3.20।।

चक्रतुश्चैव यच्छेषं पार्थिवाय निवेद्य च।

சுயக்கட்டுப்பாடு மிக்க அந்த இரு அந்தணர்களும்,(வசிஷ்டர் மற்றும் வாமதேவர்) இந்தக் காரியங்களையும், இன்னும் மீதமிருந்த காரியங்களையும் செய்யச்சொல்லி ஆணையிட்டு விட்டு அதைப் பற்றி அரசருக்கும் தெரிவித்தார்கள்.

 

कृतमित्येव चाब्रूतां अभिगम्य जगत्पतिम्।।2.3.21।।

यथोक्तवचनं प्रीतौ हर्षयुक्तौ द्विजर्षभौ।

செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளால், திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும், அந்த இரு அந்தண ஸ்ரேஷ்டர்களும் ( வசிஷ்டரும் வாமதேவரும்) அரசரிடம் சென்று, “ தாங்கள் கூறிய படி அனைத்தும் செய்தாயிற்று”  என்று தெரிவித்தார்கள்.

 

ततस्सुमन्त्रं द्युतिमान्राजा वचनमब्रवीत्।
रामः कृतात्मा भवता शीघ्रमानीयतामिति।।2.3.22।।

பின்னர், தசரத மன்னர், சுமந்திரரிடத்தில், தன்னடக்கம் உள்ள ராமரை உடனே அங்கே அழைத்து வருமாறு கூறினார்.

 

स तथेति प्रतिज्ञाय सुमन्त्रो राजशासनात्।।2.3.23।।

रामं तत्रानयाञ्चक्रे रथेन रथिनां वरम्।

“அப்படியே ஆகட்டும்!” என்று கூறி, மிகச்சிறந்த தேரோட்டியான சுமந்திரர், ராமரைத் தேரில் இருத்தி, அங்கே அழைத்து வரச்சென்றார்.

 

अथ तत्र समासीना स्तदा दशरथं नृपम्।।2.3.24।।

प्राच्योदीच्याः प्रतीच्याश्च दाक्षिणात्याश्च भूमिपाः।

म्लेच्छाश्चार्याश्च ये चान्ये वनशैलान्तवासिनः।।2.3.25।।

उपासाञ्चक्रिरे सर्वे तं देवा इव वासवम्।

சுமந்திரர் புறப்பட்டுச் சென்ற பிறகு, கிழக்குப் பகுதியிலிருந்தும், மேற்குப்பகுதியில் இருந்தும், தெற்குப்பகுதியிலிருந்தும், ஆரியர்களும், ஆரியர் அல்லாதவர்களும், காட்டுவாசிகளும், மலைவாசிகளும், அனைவருமே அங்கு வந்து, தேவேந்திரனுக்குத் தேவர்கள் மரியாதை செலுத்துவதைப் போல தசரதருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

 

तेषां मध्ये स राजर्षिर्मरुतामिव वासवः।।2.3.26।।

प्रासादस्थो रथगतं ददर्शायान्तमात्मजम्।

ராஜரிஷியான தசரதர், மருத்துக்களிடையே விளங்கும் இந்திரனைப்போலத் தன் அரண்மனையில் இருந்து கொண்டு, தேரில் அமர்ந்து வந்து கொண்டிருக்கும் தன் புதல்வனாகிய ராமனைப் பார்த்தார்.

 

गन्धर्वराजप्रतिमं लोके विख्यातपौरुषम्।।2.3.27।।

दीर्घबाहुं महासत्त्वं मत्तमातङ्गगामिनम्।

चन्द्रकान्ताननं राममतीव प्रियदर्शनम्।।2.3.28।।

रूपौदार्यगुणैः पुंसां दृष्टिचित्तापहारिणम्।

घर्माभितप्ताः पर्जन्यं ह्लादयन्तमिव प्रजाः।।2.3.29।।

न ततर्प समायान्तं पश्यमानो नराधिपः।

தன் வீரத்துக்குப் பெயர் போன ராமர் கந்தர்வர்களுடைய அரசர் போலக் காணப்பட்டார். நீண்ட கரங்களுடனும், சந்திரகாந்தக் கல்லைப் போன்ற குளிர்ச்சியான முகத்துடனும், மிகுந்த வலிமையுடனும், மதம் பிடித்த யானை போன்ற கம்பீரமான நடையுடனும், மக்களுடைய கண்களைக்கவரும் அழகுடனும், பெருந்தன்மையுடனும் வெய்யிலினால் தகிக்கப்பட்ட மக்களுக்கு மழையைப் போல் இன்பம் தருபவராகக் காணப்பட்ட ராமரைக் கண்ட தசரதருக்குத் திருப்தியே உண்டாகவில்லை.

 

अवतार्य सुमन्त्रस्तं राघवं स्यन्दनोत्तमात्।।2.3.30।।

पितुस्समीपं गच्छन्तं प्राञ्जलिः पृष्ठतोऽन्वगात्।
 

ராமருக்கு, அந்தச் சிறந்த ரதத்தில் இருந்து இறங்க உதவி செய்த சுமந்திரர், தனது தந்தையாரை நோக்கிச் செல்லும் அவரைக் கூப்பிய கரங்களுடன் பிந்தொடர்ந்தார்.

 

स तं कैलासशृङ्गाभं प्रासादं नरपुङ्गवः।।2.3.31।।

आरुरोह नृपं द्रष्टुं सह सूतेन राघवः।
 

மனிதருள் சிறந்த ராமர், தேரோட்டியான சுமந்திரருடன், கைலாசமலையின் சிகரத்தைப் போல உயர்ந்திருந்த அரண்மணையின் படிகளில் ஏறினார்.

 

स प्राञ्जलिरभिप्रेत्य प्रणतः पितुरन्तिके।।2.3.32।।

नाम स्वं श्रावयन्रामो ववन्दे चरणौ पितुः।

கைகளைக் கூப்பிக்கொண்டே, தசரதரை நோக்கி நடந்த ராமர், தனது பெயரைக் கூறிக்கொண்டு, குனிந்து, தனது தந்தையாரின் பாதங்களைத் தொட்டு வணங்கினார்.

 

तं दृष्ट्वा प्रणतं पार्श्वे कृताञ्जलिपुटं नृपः।।2.3.33।।

गृह्याञ्जलौ समाकृष्य सस्वजे प्रियमात्मजम्।

தனது அன்புக்குரிய புதல்வன் அவ்வாறு கைகளைக் கூப்பிக்கொண்டு நிற்பதைக்கண்ட தசரதர், அந்தக் கூப்பிய கைகளைப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டார்.

 

तस्मै चाभ्युदितं दिव्यं मणिकाञ्चनभूषितम्।।2.3.34।।

दिदेश राजा रुचिरं रामाय परमासनम्।

தசரத மன்னர், ராமருக்குப், பொன்னாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிக உயர்ந்த ஆசனத்தை அளித்தார்.

 

तदासनवरं प्राप्य व्यदीपयत राघवः।।2.3.35।।

स्वयैव प्रभया मेरुमुदये विमलो रविः।

அந்த உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்த ராமர், காலை நேரத்தில், மேரு மலையில் இருந்து தன் சொந்த ஒளியால் பிரகாசிக்கும்  சூரியனைப் போல ஒளிர்ந்தார்.

 

तेन विभ्राजता तत्र सा सभाऽभिव्यरोचत।।2.3.36।।

विमलग्रहनक्षत्रा शारदी द्यौरिवेन्दुना।
 

அந்தச் சபையானது, ராமரின் இருப்பால், தெள்ளத் தெளிவாகத் துலங்கும் நக்ஷத்திரங்களுடனும், கிரகங்களுடனும், ஒளிரும் சரத்காலத்து ஆகாயத்தைப் போல ஒளிவீசியது.

 

तं पश्यमानो नृपतिस्तुतोष प्रियमात्मजम्।।2.3.37।।

अलङ्कृतमिवात्मानमादर्शतलसंस्थितम्।

தனது அன்புக்குரிய புதல்வனான ராமரைப்பார்த்த தசரதர், கண்ணாடியையே அழகுபடுத்தும், தன்னுடைய பிம்பத்தையே பார்த்தது போல் மகிழ்ந்தார்.

 

स तं सस्मितमाभाष्य पुत्रं पुत्रवतां वरः।।2.3.38।।

उवाचेदं वचो राजा देवेन्द्रमिव काश्यपः।

தந்தையாருக்குள் சிறந்தவரான தசரதர், காஸ்யபர் தனது மகனான தேவேந்திரனுடன் பேசுவது போலப் புன்னகையுடன் ராமரிடம் பேசலானார்.

 

ज्येष्ठायामसि मे पत्न्यां सदृश्यां सदृशस्सुतः।।2.3.39।।

उत्पन्नस्त्वं गुणश्रेष्ठो मम रामात्मजः प्रियः।

“ராமா! எனது அருமையான மூத்த மனைவியின் அருமையான புதல்வனாகிய நீ, உனது நற்பண்புகளால், எனக்கு மிகவும் பிரியமானவனாக இருக்கிறாய்!

 

यतस्त्वया प्रजाश्चेमा स्स्वगुणैरनुरञ्जिताः।।2.3.40।।

तस्मात्त्वं पुष्ययोगेन यौवराज्यमवाप्नुहि।

உனது நற்பண்புகளால், நீ நம் பிரஜைகளையும் மகிழ்வித்திருப்பதால், சந்திரனுடன், புஷ்ய நக்ஷத்திரம் கூடும் நன்னாளில், நீ யுவராஜ பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

 

कामतस्त्वं प्रकृत्यैव विनीतो गुणवानसि।।2.3.41।।

गुणवत्यपि तु स्नेहात्पुत्र वक्ष्यामि ते हितम्।

இயற்கையாகவே, மென்மையான இயல்பு கொண்ட நீ, நற்பண்புகளின் உறைவிடமாக இருக்கிறாய். இருந்த போதிலும், உன் மீதுள்ள அன்பால் உனக்குச் சில அறிவுரைகள் கூறுகிறேன்.

 

भूयो विनयमास्थाय भव नित्यं जितेन्द्रियः।।2.3.42।।

कामक्रोधसमुत्थानि त्यजेथा व्यसनानि च।

பணிவுடன், எப்போதும் உன்னுடைய இந்திரியங்களைக் கட்டுக்குள் வைத்திரு. விருப்பத்தினாலோ, கோபத்தினாலோ, தவறுகள் செய்யாமலிரு.

 

परोक्षया वर्तमानो वृत्त्या प्रत्यक्षया तथा।।2.3.43।।

अमात्यप्रभृतीस्सर्वाःप्रकृतीश्चानुरञ्जय।

உன்னுடைய நேரடியான மற்றும் மறைமுகமான நடவடிக்கைகளால், உன்னுடைய அமைச்சர்களையும், பிற மக்களையும் எப்போதும் திருப்திப்படுத்த வேண்டும்.

 

कोष्ठागारायुधागारैःकृत्वा सन्निचयान्बहून्।।2.3.44।।

तुष्टानुरक्तप्रकृतिर्यः पालयति मेदिनीम्।

तस्यनन्दन्ति मित्राणि लब्ध्वाऽमृतमिवामराः।।2.3.45।।

तस्मात्त्वमपि चात्मानं नियम्यैवं समाचर।

தானியக்கிடங்குகளும், படைத்தடவாளங்களும், எப்போதும் நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள். உன்னுடைய பிரஜைகளை எப்போதும் விசுவாசம் உள்ளவர்களாகவும், திருப்தியுடையவர்களாயும், வைத்திரு. அப்படி இருக்கும் மன்னனுடைய நண்பர்கள் அமுதத்தை உண்ட தேவர்களைப் போல மகிழ்ந்திருப்பார்கள். ஆகவே, நீயும் உன்னுடைய மனதைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்.”

 

तच्छ्रुत्वा सुहृदस्तस्य रामस्य प्रियकारिणः।।2.3.46।।

त्वरिताः शीघ्रमभ्येत्य कौसल्यायै न्यवेदयन्।
 

இதைக் கேட்ட ராமருடைய நண்பர்கள் விரைந்து சென்று கௌசல்யையிடம் இந்த இனிய செய்தியைச் சொன்னார்கள்.

 

सा हिरण्यं च गाश्चैव रत्नानि विविधानि च।।2.3.47।।

व्यादिदेश प्रियाख्येभ्यः कौसल्या प्रमदोत्तमा।
 

மங்கையருள் சிறந்த கௌசல்யை, இந்த மங்கலச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்து, அந்தச் செய்தியைக் கொண்டு வந்தவர்களுக்குப் பொன், பசுக்கள் மட்டும் ரத்தினங்களைப் பரிசாக அளிக்க ஏற்பாடு செய்தார்.

 

अथाऽभिवाद्य राजानं रथमारुह्य राघवः।।2.3.48।।

ययौ स्वं द्युतिमद्वेश्म जनौघैः प्रतिपूजितः।

பின்னர், தசரதரை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ராமர், தேரில் ஏறி, அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்யத் தனது உத்தமமான அரண்மனைக்குச் சென்றார்.

 

ते चापि पौरा नृपतेर्वचस्त च्छृत्वा तथा लाभमिवेष्टमाशु।

नरेन्द्रमामन्त्र्य गृहाणि गत्वा देवान्समानर्चुरतिप्रहृष्टाः।।2.3.49।।

அரசரின் அறிவிப்பைக் கேட்ட நகர மக்களும், தங்களுக்கு பெரும் நன்மை ஏற்பட்டதாக உணர்ந்து, அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரவர் இல்லங்களுக்கு விரைந்து சென்று, இறைவனை வழிபட்டார்கள்.


इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये अयोध्याकाण्डे तृतीयस्सर्गः।।

இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத் ராமாயணத்தின், அயோத்தியா காண்டத்தின்  மூன்றாவது ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.

.

****

தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி

References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up

https://www.valmiki.iitk.ac.in/

19.02.2024

 

 

 

  ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்தியா காண்டம் ஸர்க்கம் –12 (தசரத மன்னரின் புலம்பல்)   ततश्शृत्वा महाराजः कैकेय्या दारुणं वचः। चिन...