ஸ்ரீமத்
வால்மீகி ராமாயணம்
பால
காண்டம்
ஸர்க்கம்
– 72
(தசரத மன்னரின் நான்கு புதல்வர்களுக்கும் திருமண
ஏற்பாடுகள் நடக்கின்றன.)
तमुक्तवन्तं वैदेहं विश्वामित्रो महामुनि:।
उवाच वचनं वीरं वसिष्ठसहितो नृपम्।।1.72.1।।
விதேஹ நாட்டின் வலிமை
பொருந்திய அரசரான ஜனகர் இவ்வாறு கூறியதும், வசிஷ்டருடன் சேர்ந்து, விஸ்வாமித்திரர்
ஜனகரிடம் கூறினார்:
अचिन्त्यान्यप्रमेयानि
कुलानि नरपुङ्गव।
“इक्ष्वाकूणां विदेहानां नैषां तुल्योऽस्ति कश्चन।।1.72.2।।
“மனிதருள் சிறந்தவரே!
இஷ்வாகு வம்சமும், விதேஹ வம்சமும், அளவிடமுடியாத மேன்மையுடையவை. இவற்றுக்கு இணையாக
வேறு எதையும் சொல்ல முடியாது.
सदृशो धर्मसम्बन्ध: सदृशो रूपसम्पदा।
रामलक्ष्मणयो राजन् सीता चोर्मिलया सह।।1.72.3।।
“அரசே! சீதைக்கும்,
ராமனுக்கும், ஊர்மிளைக்கும், லக்ஷ்மணனுக்கும் உள்ள பொருத்தம், தர்ம வழியில்
நிற்பதிலும் சரி, அழகிலும் சரி, மிகச் சிறந்தது.
वक्तव्यं च नरश्रेष्ठ
श्रूयतां वचनं मम।
भ्राता यवीयान् धर्मज्ञ एष राजा कुशध्वज:।।1.72.4।।
மனிதருள் சிறந்தவரே!
நான் சொல்வதைக் கேளுங்கள்! தங்களுடைய தம்பியான இந்த குசத்வஜன் தர்மங்களை நன்றாக
அறிந்தவன்.
अस्य धर्मात्मनो राजन्
रूपेणाप्रतिमं भुवि ।
सुताद्वयं नरश्रेष्ठ पत्न्यर्थं वरयामहे।।1.72.5।।
அரசே! இந்த
தர்மாத்மாவான குசத்வஜனின் இரு புதல்வியரையும் திருமணம் செய்து கொடுக்கும்படி
வேண்டிக்கொள்கிறோம்.
भरतस्य कुमारस्य
शत्रुघ्नस्य च धीमत:।
वरयामस्सुते राजन् तयोरर्थे महात्मनो:।।1.72.6।।
அரசே! இளை ஞர்களாகிய
பரத சத்ருக்கினர்களுக்குத் தங்களது தம்பியின் இந்த இரு புதல்விகளையும்,
மனைவிகளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
पुत्रा दशरथस्येमे
रूपयौवनशालिन:।
लोकपालोपमास्सर्वे देवतुल्यपराक्रमा:।।1.72.7।।
தசரதருடைய
புதல்வர்களாகிய, அழகும், இளமையும் நிறைந்த
இவர்கள் இருவரும், உலகைக் காப்பதில் அரசர்களையும், வீரத்தில் தேவர்களையும்,
ஒத்தவர்கள்.
उभयोरपि राजेन्द्र
सम्बन्धेनानुबध्यताम्।
इक्ष्वाको: कुलमव्यग्रं भवत:पुण्यकर्मण:।।1.72.8।।
அரசே! புண்ணிய
காரியங்களால் புனிதப்பட்ட தங்களுடைய குலமும், இக்ஷ்வாகு குலமும், இந்தத் திருமண
பந்தத்தால் இணைந்து வலிமை பெறட்டும்!”
विश्वामित्रवच श्शृत्वा
वसिष्ठस्य मते तदा।
जनक: प्रांजलिर्वाक्यमुवाच मुनिपुङ्गवौ।।1.72.9।।
வசிஷ்டரின் அனுமதி
பெற்று, விஸ்வாமித்திரர் கூறிய இந்த
வார்த்தைகளைக் கேட்ட ஜனக மன்னர், கைகளைக் குவித்துக்கொண்டு அந்த
ரிஷிபுங்கவர்களிடத்தில் இவ்வாறு கூறினார்:
कुलं धन्यमिदं मन्ये
येषां नो मुनिपुङ्गवौ ।
सदृशं कुलसम्बन्धं यदाज्ञापयथ: स्वयम्।।1.72.10।।
“மிகச்சிறந்த
ரிஷிகளாகிய தாங்கள் இந்த சம்பந்தத்தை முன்மொழிவது, எங்கள் குலம் செய்த பாக்கியம்
என்று நான் கருதுகிறேன்.
एवं भवतु भद्रं व:
कुशध्वजसुते इमे।
पत्न्यौ भजेतां सहितौ शत्रुघ्नभरतावुभौ।।1.72.11।।
அப்படியே ஆகட்டும்!
தங்களுக்கு நன்மை உண்டாகட்டும்! குசத்வஜனின் இரு புதல்விகளாகிய ஸ்ருதகீர்த்தியும், மாண்டவியும்,
சத்ருக்கினனுக்கும், பரதனுக்கும், முறையே மனைவியராகட்டும்.
एकाह्ना राजपुत्रीणां
चतसृणां महामुने।
पाणीन् गृह्णन्तु चत्वारो राजपुत्रा महाबला:।।1.72.12।।
மகாமுனிவரே! ஒரே
நாளில், இந்த நான்கு வலிமை பொருந்திய அரச குமாரர்களும், இந்த நான்கு அரசகுமாரிகளை
மணம் செய்து கொள்ளட்டும்!
उत्तरे दिवसे ब्रह्मन्
फल्गुनीभ्यां मनीषिण:।
वैवाहिकं प्रशंसन्ति भगो यत्र प्रजापति:।।1.72.13।।
பிராம்மணரே! பகர்
பிரஜாபதியாக இருக்கும், பால்குனி என்னும் உத்திர நக்ஷத்திரம் கூடிய நன்னாளில்,
இந்தத் திருமணத்தை நடத்துவது நல்லது என்று பெரியவர்கள் கருதுகிறார்கள்.”
एवमुक्त्वा वचस्सौम्यं
प्रत्युत्थाय कृताञ्जलि:।
उभौ मुनिवरौ राजा जनको वाक्यमब्रवीत्।।1.72.14।।
இத்தகைய இனிமையான
வார்த்தைகளைக் கூறி விட்டு, எழுந்து நின்று, கைகளைக் குவித்துக்கொண்டு, அந்த இரு
முனிவர்களையும் பார்த்து ஜனகர் கூறினார்:
परो धर्म: कृतो मह्यं
शिष्योऽस्मिभवतो सदा।
इमान्यासनमुख्यानि आसातां मुनिपुङ्गवौ।।1.72.15।।
உங்களால் எனக்குச்
சிறந்த புண்ணியம் கிடைத்திருக்கிறது. நான் எப்போதும், உங்கள் இருவருடைய சீடனாக
இருப்பேன். முனிபுங்கவர்களே! நீங்கள் இருவரும், இந்த மிக உயர்ந்த ஆசனங்களில்
அமருங்கள். “
यथा दशरथस्येयं
तथाऽयोध्या पुरी मम।
प्रभुत्वे नास्ति सन्देहो यथार्हं कर्तुमर्हथ।।1.72.16।।
எனக்கு இந்த மிதிலை
நகரத்தில் என்ன உரிமை உள்ளதோ, அதே உரிமை தசரதருக்கும் உள்ளது. எனக்கும் அயோத்தி
நகரத்தில் அதே போல் உரிமை உள்ளது. ஆகவே, தாங்கள் உங்களுக்கு எது சரி என்று
படுகிறதோ, அதே போல் செய்யுங்கள்.”
तथा ब्रुवति वैदेहे
जनके रघुनन्दन:।
राजा दशरथो हृष्ट: प्रत्युवाच महीपतिम्।।1.72.17।।
ஜனகரின் வார்த்தைகளைக்
கேட்டு, மிகவும் மகிழ்ந்த தசரதமன்னர், மகிழ்ச்சியுடன் பதிலிறுத்தார்:
युवामसङ्ख्येयगुणौ
भ्रातरौ मिथिलेश्वरौ।
ऋषयो राजसङ्घाश्च भवद्भ्यामभिपूजिता:।।1.72.18।।
“நீங்கள் இரு
சகோதரர்களும், மிதிலையின் அதிபதிகளாக இருக்கிறீர்கள். உங்களிடம் எண்ணற்ற
நற்குணங்கள் அமைந்துள்ளன. நீங்கள் இருவரும், ரிஷிகளுக்கும், பிற மன்னர்களுக்கும்
மிகவும் மரியாதை செய்கிறீர்கள்.
स्वस्ति प्राप्नुहि
भद्रं ते गमिष्यामि स्वमालयम्।
श्राद्धकर्माणि सर्वाणि विधास्यामीति चाब्रवीत्।।1.72.19।।
“நன்றாக இருங்கள்!
உங்களுக்கு நன்மை உண்டாகட்டும்! நான் என் இருப்பிடத்துக்குத் திரும்புகிறேன்.
செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் சிரத்தையுடன் செய்கிறேன்.”
तमापृष्ट्वा नरपतिं
राजा दशरथस्तदा।
मुनीन्द्रौ तौ पुरस्कृत्य जगामाशु महायशा:।।1.72.20।।
பெரும்புகழ் பெற்ற தசரத
மன்னர், ஜனக மன்னரிடம் விடை பெற்றுக்கொண்டு, இரு முனிவர்களும், முன்னே செல்ல,
அவர்களைத் தொடர்ந்து தாங்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றார்.
स गत्वा निलयं राजा
श्राद्धं कृत्वा विधानत:।
प्रभाते काल्यमुत्थाय चक्रे गोदानमुत्तमम्।।1.72.21।।
தசரதர் தனது விடுதியை அடைந்து, திருமணத்திற்காகச் செய்ய வேண்டிய சடங்குகளை
எல்லாம், சிரத்தையுடன் செய்தார். மறு நாள் காலையில் சீக்கிரமாக எழுந்து நிறைய
பசுக்களைத் தானமாக அளித்தார்.
गवां शतसहस्राणि
ब्राह्मणेभ्यो नराधिप:।
एकैकशो ददौ राजा पुत्रानुद्दिश्य धर्मत:।।1.72.22।।
தசரத மன்னர், தனது
புதல்வர் ஒவ்வொருவருக்காகவும், அவர்களின்
நல்வாழ்வுக்காக, நூறாயிரம் பசுக்களை அந்தணர்களுக்குத் தானமாக வழங்கினார்.
सुवर्णश्रुङ्गा
स्सम्पन्ना स्सवत्सा: कांस्यदोहना:।
गवां शतसहस्राणि चत्वारि पुरुषर्षभ:।।1.72.23।।
वित्तमन्यच्च सुबहुद्विजेभ्यो रघुनन्दन:।
ददौ गोदानमुद्दिश्य पुत्राणां पुत्रवत्सल:।।1.72.24।।
தன் புதல்வர்கள் மீது
மிகவும் அன்பு கொண்ட தசரதர், ஒவ்வொரு புதல்வனின் சார்பிலும் ஒரு லட்சம் பசுக்கள்
என்று, நான்கு லட்சம் பசுக்களை அந்தணர்களுத் தானம் செய்தார். நிறையப் பால் வழங்கக்
கூடிய அந்தப் பசுக்கள், தங்கள் கன்றுக்குட்டிகளுடனும், கொம்புகளுக்குத்
தங்கத்தினால் ஆன குப்பிகள் பூட்டப்பட்டவைகளாயும் இருந்தன. அவைகளுடன், அவைகளை
வைத்துக் காப்பாற்றத் தேவையான செல்வமும், பால் கறப்பதற்காக வெண்கலப் பாத்திரங்களும் கொடுக்கப்பட்டன.
स सुतै:
कृतगोदानैर्वृतस्तु नृपतिस्तदा।
लोकपालैरिवाभाति वृत: स्सौम्य: प्रजापति:।।1.72.25।।
அந்தணர்களுக்கு கோதானம்
கொடுத்து முடித்ததில் மிகவும் திருப்தியுடன் இருந்த தசரத மன்னர், தனது நான்கு
புதல்வர்களால் சூழப்பட்டு, உலகைக் காப்பவர்களுடன் விளங்கும் பிரஜாபதியைப் போல
மகிழ்ச்சியுடன் விளங்கினார்.
इत्यार्षे श्रीमद्रामायणे वाल्मीकीय आदिकाव्ये बालकाण्डे द्विसप्ततितमस्सर्ग:।।
இத்துடன், வால்மீகியின் ஆதிகாவியமான
ஸ்ரீமத் ராமாயணத்தின், பால காண்டத்தின் எழுபத்திரண்டாவது
ஸர்க்கம், நிறைவு பெறுகிறது.
****
தமிழ் மொழிமாற்றம்: B. ரமாதேவி
References: https://archive.org/details/Ramayana_Sanskrit_to_Tamil/1%20Bala%20Kandam/mode/1up
https://www.valmiki.iitk.ac.in/
No comments:
Post a Comment